புதுடில்லி, பிப்.2 ஒன்றிய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று (1.2.2022) தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கை அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பைப் பெற்று இருக்கிறது. அது குறித்த ஒரு பார்வை...
மோடி அரசின்
வெற்று பட்ஜெட் -ராகுல் காந்தி
ஒன்றிய அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டை வெற்று பட்ஜெட் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: மோடி அரசின் வெற்று பட்ஜெட். ஊதியம் பெறும் பிரிவினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் , இளைஞர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு நிதிநிலை அறிக்கையில் எந்த சலுகையும் இல்லை என சாடியுள்ளார்.
முதலாளித்துவத்திற்கான பட்ஜெட் இது - ப.சிதம்பரம்
ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் இல்லாத பட்ஜெட் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (1.2.2022) தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை குறித்து மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வருமான வரி சலுகைகள், ஜி.எஸ்.டி. சலுகைகள் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஏழை மக்கள் இருக்கிறார்கள் என்பதை நிதியமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார். ஏழைகள் என்கிற வார்த்தை நிதிநிலை அறிக்கையில் இரண்டுமுறை இடம்பெற்றுள்ளது. ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி. நிதி அமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கான பட்ஜெட் இது.
மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை வட்டியில்லா கடனுதவி என்பது வரவேற்க தகுந்த திட்டம் என்பதை தவிர, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் வரவேற்புக்குரிய எந்த அம்சங்களும் இல்லை. அதேநேரம், விவசாயம் மற்றும் அதை சார்ந்த அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு என்பது குறைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் இல்லை.
நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்க நிதிநிலை அறிக்கையில் எந்த திட்டமும் இல்லை. துயரத்தில் உள்ள மக்களை பற்றி ஒருதுளி கூட கவலைப்படாமல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர். மேலும் 25 ஆண்டுகளுக்கு பின் எட்டப்போகும் இலக்கு குறித்து நிதியமைச்சர் கூறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 25 ஆண்டுகள் இந்த திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வரை மக்கள் காத்திருக்க வேண்டும் போல” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்:-
ஒன்றிய நிதிநிலை அறிக்கை பணவீக்கத்தை அதிகரிக்கும். ஏழை-பணக்காரர் இடையேயான இடைவெளியை அதிகரிக்கும். நிதி விவகாரத்தில் மாநிலங்களை பிழிந்து, பெரும் கார்பரேட் நிறுவனங்களின் நலன்களை திருப்திப்படுத்துகிறது. மொத்தத்தில் நாடு மற்றும் அதன் மக்களின் நலன்களைப் பாதிக்கிறது.
நோக்கமில்லாத, பயனற்ற பட்ஜெட் இது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஊதியதாரர்கள் என பல்வேறு பிரிவினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. விவசாயத் துறைக்கு நிதியுதவி வழங்குவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயத் துறைக்கு பட்ஜெட் “பெரிய பூஜ்ஜியம்“.
சத்தீஸ்கார் முதலமைச்சர்
பூபேஷ் பாகேல்:-
இளைஞர்கள், வேலையில்லா பட்டதாரிகள், பெண்கள், விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை. மொத்தத்தில் திசையில்லா பட்ஜெட்.
மேற்கு வங்காள
முதலமைச்சர் மம்தா:-
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வால் சிதைக்கப்பட்டு வரும் சாதாரண மக்களுக்கு எதுவும் இல்லை. ஒரு பெகாசஸ் சுழல் பட்ஜெட்.
டில்லி முதலமைச்சர்
கெஜ்ரிவால்:-
கரோனா காலகட்டத்தில் ஒன்றிய நிதிநிலை அறிக்கை குறித்து மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் மக்களை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. சாதாரண மக்களுக்கோ, விலைவாசி குறைப்புக்கோ எதுவும் இல்லை.
சிவசேனா:-
சாதாரண மக்களுக்கு எதுவும் இல்லை. அவர்களின் சுமைகளை குறைக்கவோ, வருவாயை அதிகரிக்கவோ எதுவும் இல்லை. வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றி பேசாத பட்ஜெட் எப்படி எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்? ஒன்றிய அரசு வாய்ப்பை தவற விட்டுவிட்டது.
சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):-
யாருக்காக இந்த பட்ஜெட்? 10 சதவீத பணக்கார இந்தியர்கள் நாட்டின் 75 சதவீத செல்வத்தை வைத்துள்ளனர். கீழே உள்ள 60 சதவீதம் பேர் 5 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் பட்டினி பெருகிவிட்ட நிலையில், தொற்றுநோயின் போது அதிக லாபம் ஈட்டியவர்களுக்கு ஏன் அதிக வரி விதிக்கப்படவில்லை?
மாயாவதி
(பகுஜன் சமாஜ்):-
பழைய வாக்குறுதிகள், அறிவிப்புகள் மறந்துவிட்ட நிலையில், புதிய வாக்குறுதிகளுடன் மக்களை கவரும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதிகரித்து வரும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் தற்கொலை போன்ற தீவிர பிரச்சினைகளை ஏன் ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது?
சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு துரோகம்
- காங்கிரஸ் விமர்சனம்
ஒன்றிய நிதிநிலை அறிக்கை, சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு துரோகம் இழைப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டின் சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினருக்கான எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் துரோகம் இழைத்துள்ளனர்.
ஊதியக் குறைப்பு மற்றும் உயர் பணவீக்கம் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கத்தை முறியடிக்க சம்பளம் வாங்குவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தங்கள் நடவடிக்கைள் மூலம் அவர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளனர். இது இந்தியாவின் சம்பளம் பெறும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செய்யும் துரோகம் என்று ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை...! - கே.எஸ்.அழகிரி
வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத பட்ஜெட் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜக. ஆட்சி அமைகிறபோது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றுகிற வகையில் 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, நடுத்தர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லாத நிலை இவற்றிற்கெல்லாம் எவ்வித தீர்வும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்திருக்கிறது. எந்த நோக்கமும் இல்லாமல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.
வருமான வரி கட்டுபவர்களுக்கும், பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி விதிப்பிலும் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. உணவு, உர மானியங்கள் கடுமையாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்திய உணவு கழகத்திற்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட மானியத்தில் ரூபாய் 64 ஆயிரத்து 910 கோடி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, யூரியா மானியத்தில் ரூபாய் 65 ஆயிரத்து 9 கோடி, அதாவது 30.8 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து அது நிறைவேற்றப்படாத நிலையில் அதை பெருக்குவதற்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருகிறது.
ரயில்வே துறையில் 35 ஆயிரம் வேலைக்கு 1 கோடியே 25 லட்சம் பேர் விண்ணப்பிக்கிற அவலநிலையில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. சி.எம்.அய்.இ. கணக்கீட்டின்படி, 20 கோடி வேலை வாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. 60 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய நிலையில் 40 கோடி பேருக்குத் தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நிதிமந்திரி அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறுகிறார். இது “யானைப் பசிக்கு சோளப்பொரி”
போடுவது போல் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment