- மின்சாரம் -
கேள்வி: மாநகராட்சி மேயர் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடங்கள் ஒதுக்கிய முதல்வருக்கு கி.வீரமணி பாராட்டுத் தெரிவித் துள்ளதுபற்றி...
பதில்: இரண்டு வகைகளில்தான் கி.வீரமணி யின் பெயர் பத்திரிகைகளில் வெளிவரும். ஒன்று ஹிந்துக்களைத் தூற்றுவது, இரண்டு தி.மு.க.வைப் போற்றுவது. இரண்டில் எதைச் செய்யும் வாய்ப்பு வந்தாலும் விடமாட்டார் அவர்.
'துக்ளக்', 9.2.2022
ஆமாம்! வீரமணி விடமாட்டார்... பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு மாநகராட்சி மேயர் தேர்தலில் அளிக்கப்பட்டால் வீரமணி பாராட்டத்தான் செய்வார்.
இதில் குற்றம் கூற என்ன இருக்கிறது? இதில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது - திட்ட வட்டமாகவே தெரிகிறது.
பெண்களுக்கு 50 சதவிகிதம் இடம் அளித்தால், துக்ளக் கும்பலுக்கு, பார்ப்பன வகையறாக்களுக்குத் தேள் கொட்டியது போல கடுகடுக்கிறது - ஆத்திரம் அலை புரள்கிறது. காரணம், அவர்களின் மனுதர்மப் புத்தி - பெண்கள் என்றால் விபசார தோஷம் உள்ளவர்கள் என்ற மனுதர்மத்தை இந்த 2022 ஆம் ஆண்டிலும் விழுந்து விழுந்து ஆதரிக்கும் ஆரியம் பெண்களுக்குப் பதவிகளில், கல்வியில், உத்தி யோகத்தில் 50 சதவிகித இட ஒதுக்கீடு என்றால், காந்தாரி மாதிரி உலக்கையை எடுத்து வயிற்றில் உதிரம் கொட்டக் கொட்ட குத்திக் கொள்ளத்தான் செய்வார்கள்.
''பெண்கள் உயர்ந்தவர்கள்; அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள்'' ('துக்ளக்', 18.3.2009) என்று எழுதியபோது, நம் நாட்டுப் பெண்கள் - அவர் களுக்கு விளங்குமாறு, 'விளக்குமாறு' தெரிவித் திருந்தால், இந்தக் குடுமிகளின் திமிர் இத்தனை டிகிரிக்கு விறைத்து நிற்காது அல்லவா!
இரண்டாவது, ஹிந்துக்களைத் தூற்றுவது வீரமணி செயலாம். இதுதான் பார்ப்பனர்களின் பாழ்படுத்தும் பாஷாணப் புத்தி என்பது.
வீரமணி ஹிந்துக்களைத் தூற்றுவது இல்லை. ஹிந்து என்ற பெயரால் இந்நாட்டுப் பெரும்பாலான மக்களை, பார்ப்பனர் அல்லாத மக்களை சூத்திரர் என்கிறார்களே - வேசி மக்கள் என்கிறார்களே - அதனைத்தான் தூற்றுகிறார். இந்நாட்டுப் பெரும் பாலான உழைக்கும் மக்களை அவர்ணஸ்தர்கள் என்று கூறி பஞ்சமர்களாக்கி - தீண்டத்தகாத மக் களாக ஒடுக்கும் அந்த 'ஹிந்து' என்ற விஷத்தைத்தான் வீரமணி எதிர்க்கிறார் - இன்னும் கடுமையாகக்கூட எதிர்ப்பார்தான். திசை திருப்பவேண்டாம் திரிநூல்!
'ஹிந்து' என்று சொல்லாதே - இழிவைத் தேடிக் கொள்ளாதே!'' என்று நாட்டு மக்களுக்கு நற்செய்தி யைக் கூறும் தந்தை பெரியாரின் கொள்கை வழிச் சான்றோர்தான் மானமிகு கி.வீரமணி.
வீரமணி இந்த இரண்டை மட்டும்தான் பேசுவாரா?
சமூகநீதியைப்பற்றியும் இந்தியத் துணைக் கண்டமே தெரிந்துகொள்ளும் கருத்துகளை உரக்கத்தான் பேசுவார். சமூகநீதி என்பது இந்திய அரசியலையே சமூகநீதி அணி - சமூகநீதிக்கு எதிரான அணியாகப் பிளக்கப் போகிறது - பா.ஜ.க. பஞ்சக் கச்ச ஆதிக்கக் கூட்டத்தைத் தனிமைப் படுத்தத்தான் போகிறது.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டைக் குறித்தும், மாநிலங்களின் உரிமைகள் குறித்தும் வீரமணி ஓங்கி ஓங்கித்தான் முழங்குவார். ஜாதி - தீண்டாமை ஒழிப்புப்பற்றி அவருடைய குரல் ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும்!
பகுத்தறிவுச் சிந்தனைகளை உலகம் முழுவதும் சென்றடையும் வகையில் பேசிக் கொண்டேதான் இருப்பார் - எழுதிக் கொண்டேதான் இருப்பார்.
மனித உரிமை சித்தாந்தங்களுக்காகப் போர்க் கொடியை உயர்த்திக் கொண்டேதான் இருப்பார்.
இவையெல்லாம் பத்திரிகைகளில் வருகிறதா - இல்லையா என்று தந்தை பெரியாரும் கவலைப் பட்டதில்லை - அவருடைய தலைமை மாணாக்கர் ஆசிரியர் வீரமணியும் எதிர்பார்த்ததில்லை.
தி.மு.க.வைப் பாராட்டிக்கொண்டே இருப்பாராம் வீரமணி.
எங்கள் பாதையைத் தீர்மானிப்பது நேற்றும் சரி - இன்றும் சரி - நாளையும் சரி, பெரியார் திடல்தான் என்று பிடரியைப் பிளப்பதுபோல தி.மு.க. தலைவர் பிரகடனப்படுத்தி விட்டாரே!
பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்துவிட்டாரே!
கோட்சே தத்துவத்தை வேரறுப்போம் என்று வீர முழக்கமிடுவது வரையிலும் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இந்திய ஒன்றியத்திலேயே முன்னணி சுடர் மணியாக ஒளி வீசும்போது, வீரமணி பாராட்டத்தான் செய்வார். அதுகண்டு பார்ப்பனர் கூட்டம் பதை பதைக்கத்தான் செய்யும்.
புரண்டு புரண்டு படுக்கத்தான் செய்யும்.
மன உளைச்சல் ஏற்படத்தான் செய்யும். எந்த நேரத்திலும் வீரமணி, வீரமணி என்ற அச்சம்தான் அவர்களைப் படாதபாடு படுத்துகிறது.
அந்தோ பரிதாபம் - நமது அனுதாபங்கள்!
No comments:
Post a Comment