பி.பி.சி. தொகுப்பாளர் யால்டா ஹக்கீம் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். சோவியத்ஆக்கிரமிப்பின் போது 1980 களில் அவரது குடும்பம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து தொடர்ந்து செய்தி சேகரித்து வந்தார். 100 நாட்களுக்கு முன்பு தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு இப்போது அவர் முதல் முறையாக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நான் பிறந்த நாட்டுக்கு முதன்முறையாகத் திரும்புவது எனக்குள் பல கேள்விகளை எழுப்பும் என்பதை நான் அறிவேன்.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த அரசை அகற்றிவிட்டு தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு நாடு எவ்வளவு மாறிப்போயிருக்கிறது? ஆப்கானிஸ்தான் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும் அமைதி கிடைக்குமா? புதிய ஆட்சியாளர்களால் பொதுவாழ்வில் இருந்து வெளியேற்றப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் எதிர்காலம் இனி என்னவாகும்? எனக்குள் ஒரு கேள்வி இருந்தது. ஆனால் அதை எனக்கு நானே கேட்டுக்கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லை.
நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், பல மாதத்திற்குப் பிறகு ஊதியம் வாங்காமல் வேலைக்கு போவதற்கு எவ்வளவு மனவலிமை தேவை? ஆனால் நான் அதைத்தான் நேரடியாகவே கண்டறிந்தேன். காந்தஹாரில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் முதல் காபூல் மருத்துவமனைகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்கள் வரை பொது சுகாதாரப் பணியாளர்கள் யாருக்கும் வெளிநாட்டு உதவி நிறுத்தப்பட்டதிலிருந்து ஊதியம் வழங்கப்படவில்லை.
ஆனாலும் இன்றும் அவர்கள் நாள்தோறும் வேலைக்குச் சென்று திரும்புகிறார்கள். தாங்களே துயரத்தின் விளிம்பில் இருக்கும்போது, நம்பிக்கையிழந்திருக்கும் மக்களையும் அவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் நஸ்ரின் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
“நாங்கள் வேலைக்கு வரவில்லை என்றால், இந்தக் குழந்தைகள் இறந்துவிடும். அவர்களை எப்படிக் கைவிடுவது?” என்று அவர் என்னிடம் கேட்கிறார். நோயாளிகளில் பெரும்பாலானோர் பலவீனமாக இருக்கிறார்கள். பலர் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்கள். எந்தத் தொற்றுநோய்களும் வராமல் இருக்க வேண்டுமெனில் வார்டு முடிந்தவரை சுத்தமாக இருக்க வேண்டும். போக்குவரத்துக்கு பணம் இல்லை என்று நஸ்ரின் கூறுகிறார். அதனால் நடந்தே வேலைக்குப் போகிறார். காலையில் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து, 12 மணி வேலைக்குப் பிறகு, மீண்டும் மலையேற வேண்டும்.
சுகாதாரப் பணியாளர்களின் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதென்றால், அவர்கள் கவனிக்கும் நோயாளிகள் அதைவிட மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். கிட்டத்தட்ட 2.3 கோடி ஆப்கானியர்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்று அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 95 சதவீதம் பேருக்கு போதிய உணவு இல்லை. நஸ்ரின் பணியாற்றும் வார்டுகளில், பாதிக்கப்பட்ட இளம் வயதினரைப் பார்க்கலாம்.
குல்னாராவுக்கு வயது மூன்று. மிகவும் பலவீனமாக இருப்பதால் அவளால் கண்களைத் திறக்க முடியவில்லை. கண்கள் குழிவிழுந்து தென்படுகின்றன. தலைமுடி மெல்லியதாக மாறிவிட்டது. எழுந்திருக்க முயலும்போது வலியால் அழுகிறாள். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஆப்கானிஸ்தானின் குழந்தைகளுக்கு இதைத்தான் செய்து வருகிறது. தாலிபன் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பன்னாட்டுச் சமூகத்தினை சுட்டிக்காட்டி பழிசுமத்துகிறார். மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளால்தான் ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் துயரங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் என்னிடம் கூறினார். “இந்த நாடு பேரழிவையும் மனிதநேய நெருக்கடியையும் நோக்கிச் செல்கிறது என்று கூறினால், இந்த அவலங்கள் அனைத்தையும் தடுக்க, சரியான நடவடிக்கை எடுப்பது அவர்களின் பொறுப்பு.” “மனித உரிமைகள் பற்றி பேசும் பிற நாடுகள்... ஆப்கானிஸ்தானில் மனிதநேய நெருக்கடிக்குக் காரணமான நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
யாரைக் குறை கூறுவது என்பது குறித்த அவரது கருத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், இந்தப் பிரச்சினைக்கான தீர்வு பன்னாட்டு நிதி உதவியில் இருந்து வரும் என்பதை பெரும்பாலானவர் கள் ஒப்புக்கொள்வார்கள். பன்னாட்டு உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டபோது நாட்டின் பொருளாதாரம் முடங்கியது. “நான் செங்கல் சூளைகளில் வேலை செய்தேன்” என்று தெருவில் வேலைக்காக காத்திருந்த ஒருவர் என்னிடம் கூறினார். அப்போது எனது ஊதியம் மாதம் 25,000 ஆப்கானி ஆக இருந்தது. இப்போது என்னால் மாதம் 2,000 கூட சம்பாதிக்க முடியவில்லை.” என்றார் ஒருவர்.
அவரது நான்கு குழந்தைகளும் வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர், மருந்து வாங்குவதற்குப் பணமில்லை. “எனக்கு எதிர்காலம் இல்லை, ஏழைக் குடும்பங்களுக்கு எதிர்காலம் இல்லை” என்று அவர் என்னிடம் கூறினார்.
No comments:
Post a Comment