அய்யா - அண்ணா கொள்கையின் அடிப்படையில் அகில இந்திய அளவில் சமூகநீதியை முன்னெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி காலத்தால் மேற்கொள்ளப்பட்டது!
''சுயமரியாதை சமத்துவம் காண சூளுரைப்போம்!''
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கொள்கையை ஏற்று, அகில இந்திய அளவில் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, காலத்தால் மேற்கொள்ளப்பட்டது. அண்ணாவின் நினைவு நாளில், அய்யா - அண்ணா காண விரும்பிய சுயமரியாதை சமத் துவம் காண சூளுரைப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
இன்று (3.2.2022) அறிஞர் அண்ணாவின் 53 ஆம் ஆண்டு நினைவு நாள்!
அண்ணா என்பவரை வெறும் கொடியில் படம் மூலம் காண முடியாது - என்றும்!
கொள்கை, லட்சியங்கள்மூலம்தான் அண்ணாவைப் பின்பற்றி உண்மையான தம்பிகளாகவும் இருக்க முடியும்.
அண்ணாவின் இறுதி ஆசை - அன்புக் கட்டளை!
அண்ணாவின் இறுதி ஆசை - அன்புக் கட்டளை (15.1.1969) என்ன?
அண்ணா எழுதினார்,
‘‘....ஆகவே, நான் மாநிலங்கள் அதிக அளவில் அதிக அதிகாரம் பெறத்தக்க வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பதுபற்றி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துக் கூறி வருகிறேன்!
இதற்கான நல்லாதரவு நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கின்றது என்பதிலே எனக்குத் தனியானதோர் மகிழ்ச்சி.
நமது கழகம் மட்டுமின்றி மேலும் பல அரசியல் கட்சிகளும் இதனை வலியுறுத்த முன்வந்துள்ளன.
அரசியல் கட்சிகளைச் சாராத அறிவாளர் பலரும் அதற்கு ஆதரவு காட்டுகின்றனர்'' என்று குறிப்பிட்டார்.
'திராவிட மாடல்' ஆட்சி -முந்தைய திராவிடர் ஆட்சி- நீதிக்கட்சியின் நீட்சிதான்!
தந்தை பெரியாரின் சமூகநீதியைக் கட்டிக் காத்து, பரப்பி, பயன்தரச் செய்யும் திராவிட மாடல் ஆட்சி - முந்தைய திராவிடர் ஆட்சி- நீதிக்கட்சியின் நீட்சிதான் என்று அறிவித்தவர் அண்ணா.
இன்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அதையே புதுப்பித்து தனி வரலாறு படைக்கிறார்!
சமூகநீதி - கூட்டாட்சிப் பாதுகாப்பு - மக்களாட்சியின் மாண்புகளை சிதைக்காமல் பாதுகாத்து - ஒற்றை ஆட்சி யாக்கிட நினைப்போரின் கனவுகளை செல்லாக்காசாக்க - அனைவரும் உறவினர் என்ற திராவிடத்தின் லட்சிய முழக்கத்தைத் திக்கெட்டும் கொண்டு சேர்க்க, அண்ணா நினைவு நாளில் அரசியலைத் தாண்டி சமூக ஒருமைப்பாடு - இணைப்பினை வலுப்படுத்திட நமது முதலமைச்சர் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியது நல்ல தொடக்கம்; காலம் கருதி எடுக்கப்பட்ட கடமையின் வெளிப்பாடு.
திராவிடத்தின் தித்திக்கும் சமூகநீதி!
‘அனைவருக்கும் அனைத்தும்' என்பதுதான் திரா விடத்தின் தித்திக்கும் சமூகநீதி! இதை செயல் வடிவத்தில் - இந்தியத் திருநாடு முழுக்கப் பரப்பிடுவதும், கூட்டாட்சி யின் தத்துவம் குறைவுபடாமல் பாதுகாக்கவும் இம்முயற்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரிய முயற்சி - நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துள்ள முயற்சி.
அண்ணா பிறந்த நாளில், அவர் அய்யாவின் லட்சியங்களைக் காக்க முப்பெரும் சாதனைகளாக்கி சரித்திரம் படைத்தார்.
அதனையொட்டி ஆட்சிப் பொறுப்பேற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்ம்பெரும் முழக்கத்தைத் தத்துவ மாக்கி அதிக சாதனைகளைச் செய்து மாநில உரிமைகளை வளர்த்தெடுக்க வரலாறு படைத்த மூவர் குழு அறிக்கை பெற்றார்!
வெற்றிக் கனியைக் குவிப்பது உறுதி!
அவற்றையெல்லாம் செயல் உருவில் எட்டே மாதங்களில், இந்தியத் துணைக் கண்டமே திரும்பிப் பார்த்து, வியப்புடன் வரவேற்கும் விதத்தில் புதிய திருப்பத்தை உருவாக்கி வருகிறார் - இதில் அவர் வெற்றிக் கனியைக் குவிப்பது உறுதி!
காரணம், சமூக விஞ்ஞானமாம் சமூகநீதி வெல்வது உறுதி!
அண்ணா நினைவு நாளில் அதனை சூளுரையாக்கி சுயமரியாதை சமத்துவம் காணுவோம்!
அண்ணா வாழ்க!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.2.2022
No comments:
Post a Comment