டில்லி - ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்திசிறீ துலிபுடி பண்டிட், பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்தும் போட்ட பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். இங்கு படிப்பதற்கு மாணவர்களிடையே பெரிய போட்டியே இருக்கும். இங்குப் படிப்பதை மாணவர்கள் கவுரவமாகக் கருதுவார்கள்.
டில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஜெகதீஷ் குமார் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக சாந்தி சிறீதுலிபுடி பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.சாந்தி ரஷ்யாவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.,) வரலாறு மற்றும் சமூக உளவியல் மற்றும் (எம்.ஏ.,) முதுகலை அரசியல் அறிவியல் பட்டங்களைப் பெற்றவர்.
இவர் தற்போது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் பட்டம் பெற்றவர். இப்போது அங்கேயே துணை வேந்தராக செல்லவிருக்கிறார். மகாராட்டிராவில் உள்ள சாவித்திரிபாய் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் சாந்தி பண்டிட்டை, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.
'துணை வேந்தராக பணியாற்ற வாய்ப்பு அளித்த பிரதமருக்கும், கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த என்னை டில்லி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராக நியமித்தது மகிழ்ச்சி' என்று சாந்தி பண்டிட் தன்னுடைய ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், சாந்தி இதற்கு முன் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகள் சர்ச்சை யானதும், தன்னுடைய டிவிட்டர் கணக்கை மூடிவிட்டார். ஆனால், அந்தப் பதிவுகள் ஒளிப்படங்கள் ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக் கின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இத்தாலியின் ரிமோட் கண்ட்ரோல் என்கிறார்.
முஸ்லிம்களின் 'லவ் ஜிகாத்' பயங்கரவாதம் என்ற கோணத்திலும் ட்வீட் செய்துள்ளார். கிறிஸ்தவர்களை அரிசி மூட்டைக்காக மதம் மாறியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஜே.என்.யூ, ஜாமியா கல்லூரி மாணவர்கள் குறித்தும் அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளார்
அதுமட்டுமல்லாமல், தன்னைத் துணைவேந்தராக நியமித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அவர் எழுதிய ஆங்கிலக் கடிதத்தில் எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இதை பாஜக எம்.பி. வருண்காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப் பட்டவர் மோடிக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதம் படிப்பறிவில்லாத ஒருவர் எழுதியது போலவே இருக்கிறது.
முழுக்க முழுக்க இலக்கணப் பிழைகள் உள்ளன. will strive என்று எழுதுவதற்குப் பதில் would strive என்று எழுதியுள்ளார். student-friendly என்று எழுதுவதற்கு பதிலாக students friendly என்று எழுதியுள்ளார். excellence என்று எழுதுவதற்குப் பதில் excellences என்று எழுதியுள்ளார்.
இதுபோன்ற தரக்குறைவான, மலிவான நியமனங்கள் நமது இளைஞர் சமுதாயத்தை கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளார் வருண் காந்தி.
தனது நியமனத்திற்கு நன்றி கூறி சாந்தி சிறீ துலிப்புடி பண்டிட் வெளியிட்டிருந்த கடிதம் தற்போது கேலிக்கூத்தாக மாறி யுள்ளது.
புகழ் பெற்ற பல்கலைக் கழகத்திற்கு நியமிக்கப்பட்ட ஒரு துணைவேந்தரின் யோக்கியதை இதுதான். இவர்கள்தான் தகுதி - திறமை பற்றி எல்லாம் தம்பட்டம் அடிக்கும் ஞான சூன்யங்கள்.
தகுதி - திறமை என்பது எல்லாம் இவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். முதல் தகுதியும், முடிவான தகுதியும் என்ன தெரி யுமா? காவிப் புத்தியும், இந்து மதவாத வெறியும், சிறுபான்மை மக்கள்மீதான கொடூரமான வெறுப்பும் மட்டும்தான். புரிந்து கொள்வீர் பா.ஜ.க.வை - அதன் ஆட்சியை!
No comments:
Post a Comment