மேலும் கூடுதலான கூட்டாட்சித் தத்துவ உணர்வினை இந்திய உயர்நீதித்துறை பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

மேலும் கூடுதலான கூட்டாட்சித் தத்துவ உணர்வினை இந்திய உயர்நீதித்துறை பெற்றிருக்க வேண்டியதன் அவசியம்

சிறீநாத் சிறீதேவன் - அனன்யா பட்டாபிராமன்

(உயர்நீதிமன்றங்களுக்கு அதிக அளவில் அதிகாரம் வழங்கி, நீதித்துறையில் நிலவிவரும் சமத்துவமின்மையைப் போக்கி உச்சநீதிமன்றம் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்)

தங்களுக்குள் ஒத்துழைத்துக் கொண்டும், அதே நேரத்தில் ஒருவரிடமிருந்து மற்றொருவர் சுதந்திரமாக விளங்கும் அமைப்புகளிடையே வரையறுக்கப்பட்ட குறைந்த அளவு நிர்வாக, சட்டமன்ற, நீதித்துறை அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தான் கூட்டாட்சி தத்துவத்தின் இன்றியமையாத பண்புஎன்று அவரது காலத்தில் தலைசிறந்த, முன்னணி அரசமைப்பு சட்ட வழக்குரைஞராக இருந்த A.V.Dicy (டைசி) 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருக்கிறார்.

சட்டமன்றத்துக்கும் நிருவாகத் துறைக்கும் இடையே தொடர்புள்ள கூட்டாட்சி தத்துவத்தை பற்றி அதற்குப் பிறகு பெரிய அளவில் எழுதப் பட்டுள்ளது. இந்திய நீதித்துறை பற்றியும் நமது நீதித் துறையின் கூட்டாட்சித் தத்துவத் தன்மைப் பற்றியும் இப்போது நாம் ஆய்வு செய்ய இருக்கிறோம்.

இந்தியா என்பது மாநில அரசுகளின் ஓர் ஒன் றியமே ஆகும். நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத் தன்மை என்பது நமது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி யாக விளங்குவது என்றே நமது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒருங்கிணைந்ததொரு முறை

உயர் அதிகாரங்கள் பெற்றிருக்கும் ஒரு ஒன்றிய அரசுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய மாநில அரசுகளின் கூட்டமைப்பு எனப்படும் யதேச்சதிகார அரசுக்கும், மாநில அரசுகள் அனைத்து உயர் அதிகாரங்களையும் பெற்றிருந்து ஒரு பலவீனமான ஒன்றிய அரசினால் ஒருங்கிணைப்பு செய்யப்படுவது என்ற கூட்ட மைப்புக்கும் இடையேயான ஒரு புள்ளியில் அமைந்திருப்பதுதான் இந்தக் கூட்டாட்சி தத்துவம். ஒவ்வொரு தனிப்பட்ட மாநில அரசும் ஏறக்குறைய சமமான உரிமைகளைப் பெற்றுக் கொண்டும், அதே நேரத்தில் மற்றவர்களை சார்ந்து இருக்காத அளவுக்கு சுதந்திரமாக இருப்பதும், ஒரு பெரிய மாநிலங்களின் ஒன்றியத்தில் ஒரு பகுதியாக இருப்பதும்தான் இந்தக் கூட்டாட்சித் தத்துவம் என்ற கோட்பாடு. கூட் டாட்சி அரசின் பிரித்துக் காணப்பட இயலாத ஒருங்கிணைந்த ஒரு தேவை என்னவென்றால், நமது அரசமைப்பு சட்டத்திற்கு விளக்க மளித்து, அதன்மூலம் கூட்டாட்சியின் பகுதிகளாக விளங்கும் மாநில அரசு களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையேயும் இந்த மாநில, ஒன்றிய அரசுகளுக்கும் குடிமக்களுக்கு இடை யேயும் எழும் உரிமைகள் பற்றிய பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்பதுதான்.

கூட்டாட்சி நீதித்துறை நடைமுறையில் அடங்கியிருப்பது உச்சநீதிமன்றமும், உயர்நீதி மன்றகளும்தான். மேற்கண்ட உரிமைகள் பற்றிய வழக்குகளில் மத்தியஸ்தம் செய்து தீர்ப்பு அளிப்பது இந்த இரண்டு நீதி மன்றங்களும் தான்.

இந்தியக் கூட்டாட்சி அமைப்பு ஓர் இரட்டை அரசியல் அமைப்பாக இருந்தபோதிலும் நமது நீதித்துறையும் அதனைப் போல் இரட்டை அமைப் பாக விளங்குவது அல்ல. உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் சேர்ந்து பிரித்துக் காணமுடியாததொரு ஒருங்கிணைந்த நீதித்துறையாக செயல்பட்டு, அரசமைப்பு சட்டம், சிவில் சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியவற்றில் எழும் வழக்குகளை விசாரித்து மத்தியஸ்தம் செய்து தீர்ப்பளிக்கும் ஒரே அதிகார எல்லையில் செயல்பட இயன்றவைஎன்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அரசமைப்பு சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.

நமது உச்சநீதிமன்றம் நமது அரசமைப்பு சட்டத்தினால் உருவாக்கப்பட்ட புதிய நீதிமன்றம் ஆகும். அதற்கு மாறாக 1860 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சில உயர்நீதிமன்றங்களும் நம் நாட்டில் உள்ளன. இன்னும் சில நீதிமன்றங்கள் மாகாண உச்சநீதிமன்றங்கள் என்ற பெயரில் அதற்கும் முன்பிருந்தே செயல்பட்டு கொண்டு வந்துள்ளன.

அதிகார சமன்பாடு

உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சம அதிகாரம் பெற்றவர்கள் என்று இந்திய அரசமைப்பு சட்டம் நிர்ணயித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதிக்கும் கீழ்ப்படிந்து நடப்பதற்கு கடமைப்பட்டவர் அல்ல. இந்திய உச்சநீதிமன்றம் புதியதாக உருவாக்கப்பட்டபோது அதன் நீதிபதிகளாக நியமனம் செய்ய அரசு முன்வந்தபோது, பம்பாய் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.சி.சாக்லா அவர்களும், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் அவர்களும் அந்த நியமனங்களை நிராகரித்த செய்தி உலகப் புகழ்பெற்ற செய்தியாகும். தாங்கள் தலைமை வகிக்கும் உயர்நீதிமன்றகளிலேயே தொடர்ந்து நீடிப்பது, உச்சநீதிமன்றத்தில் ஒரு சாதாரணமான நீதிபதியாக இருப்பதைவிட மேலானது என்று அவர்கள் கருதினர்.

மேல் முறையீடு நீதிமன்றம் என்ற முறையினால் மட்டுமே உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களை விட அதிக அதிகாரம் பெற்றது என்பதை பல சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்றம் வலியுறுத் தியுள்ளது. அதனால் கோட்பாட்டு அளவில், உயர்நீதிமன்ற நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளும், சம அதிகாரம் பெற்றவர்கள் என்ற நிலைப்பாடே எப்போதும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கனவு கண்ட அரசமைப்பு சட்டக்கட்டமைப்பு நடைமுறைக்கும் செயல்பாட்டுக்கும் வரவேண்டுமானால் உச்சநீதி மன்றத்துக்கும் உயர்நீதிநீதிமன்றங்களுக்கும் இடையே ஒரு மென்மையான சமத்துவ நிலை நிலவு வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

இந்த மென்மையான சமத்துவம் நமது நாடு விடுதலை பெற்ற நாள் முதற்கொண்டு 1990கள் வரை தொடர்ந்து நீடித்து வந்தது, என்றாலும் அதற்குப் பிறகு இந்த சமத்துவம் மாறுபாடு அடைந்து உச்ச நீதிமன்றத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது, இந்த சமன்பாட்டின் தேவை நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது, அதிக அளவில் உணரப்பட்டும் பேசப்பட்டும் வந்துள்ளது. சுதந்திரத்தின்  தீச்சுடர் களாக குறிப்பிடத்தக்க சில உயர் நீதிமன்றங்கள் நெருக்கடி நிலைக்கு எதிராக நாட்டிற்கு வழிகாட்டி வந்திருக்கும்போது உச்சநீதிமன்றம் தனது கடமையிலிருந்து தவறிவிட்டது

உச்சநீதிமன்றத்தின் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்கும் குறிப்பிடத்தக்க மூன்று போக்குகள் அண்மைக்காலங்களில் காணப்படுகின்றன. நீதித்துறையின் கூட்டாட்சி கட்டமைப்பில் சமமற்ற ஒரு நிலை ஏற்படுவதற்கு அவை வழி கோலின.

முதலாவதாக உச்சநீதிமன்றம் அல்லது கொலிஜியம் என்று அழைக்கப்படும் நீதிபதிகளின் ஒரு பிரிவு உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் நீதிபதிகளையும் தலைமை நீதிபதிகளையும் நியமனம் செய்யும் அதிகாரம் பெற்றிருந்தது. ஒரு உயர்நீதி மன்றத்திலிருந்து வேறொரு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளையும், தலைமை நீதிபதிகளையும் மாற்றும் அதிகாரத்தையும் அது பெற்றிருந்தது.

இரண்டாவதாக, உயர்நீதிமன்றங்களைத் தவிர்த்துவிட்டு உச்சநீதிமன்றத்துக்கு நேரடியாக மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் நீதித்துறை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை உருவாக்குவதற்கான தேவையை தொடர்ந்து வந்த அரசுகள் நிறைவேற்றிய சட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன. மூன்றாவதாக முக்கியத்துவமற்ற சில்லறைப் பிரச்சினைகள் பற்றிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் தாராளமாக அனுமதிக்க தொடங்கியது.

அதிகாரங்கள் மய்யமாக்கப்படலும் அதன் பாதிப்புகளும்

நீதித்துறை அதிகாரங்கள் மய்யமாக்கப்படுதலுக்கு ஆதரவாகவும் சமத்துவ தன்மைக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் நீதித் துறை நீதிபதிகள் இடையே ஒரு சமமற்ற தன் மையை உருவாக்குவதற்கு வழிகோலின. நீதித்துறை அதிகாரங்கள் எந்த அளவுக்கு மய்ய மாக்கப்படுகின்றனவோ அந்த அளவுக்கு கூட்டாட்சி கட்டமைப்பு பலமிழந்து போகிறது.

ஒன்றிய அரசின் சட்டம் ஒன்றை அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அந்த சட்டம் செல்லாதது அன்று அறிவிப்பதையே விரும்பும். அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒரு கூட்டாட்சி சட்டத்தை செல்லாது என்று அறிவிப்பதை விரும்பவில்லைஎன்று இளையா சோமன் என்ற சட்ட ஆய்வாளர் தனது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளார்.

அதிகாரங்கள் மய்யமாக்கப்பட்ட நீதித்துறையினால் விசாரணை மேற்கொள்ளப்படும் மறுசீராய்வு மனுவின் மீதான தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், யதேச்சதிகாரத்துக்கு ஆதரவாகவும் அமையும் என்ற முடிவிற்கு வருவதற்கு இந்த ஆராய்ச்சி வழிகோலுகிறது. “அரசின் சட்டங்கள் செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும் போது, அதிக பலவீனமான கட்டுப்பாடுகளை அவை சந்திக்கின்றன. குறிப்பாக தேசிய அரசியல் பெரும்பான்மையினரால் ஒப்புதல் அளிக்கப்படாத அரசின் சட்டங்களை தள்ளுபடி செய்யும்போது இவ்வாறு நேர்கிறதுஎன்று ஆராய்ச்சியாளர் இளையா சோமன் கூறுகிறார். கூட்டாட்சி அரசும் நாட்டின் வேறு இடங்களிலுள்ள அனுதாபம் கொண்ட மாநில அரசுகளும் இத்தகைய நீதித்துறை குறியீட்டினை ஆதரிக்கவே செய்வர்அதேபோன்ற ஒரு கூட்டாட்சி நாடான நைஜீரியாவில், மாநில அரசுகளின் மீது மய்ய அரசு அதிகாரம் செலுத்துவதை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஆதரிக்கிறது.

இன்று கொலிஜியத்தின் செயல்பாடுகளை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றிய அரசு உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒருவரை நியமிப்பது அல்லது அவரை வேறொரு உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவது அல்லது நீதிபதிகளை நியமனம் செய்வது அல்லது அவ்வாறு நியமனம் செய்வதை தாமதப்படுத்துவது, போதுமான அளவு பணி மூப்பு கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ நியமிப்பதற்கான பரந்த அதிகாரத்தை தங்களுக்கும் பயன் நிறைந்த வழியில் ஒன்றிய அரசு செலுத்திக் கொண்டிருக்கிறது.

இப்போது இரண்டாவது உண்மைக்கு நாம் நகர்ந்து செல்வோம். நாட்டின் மீது விழும் அனைத்துத் துன்பங்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என்று கூறி மக்களை அழைக்கும் மிகப்பெரிய குறுக்கீட்டாளராக உள்ள உச்சநீதிமன்றத்தை இப்போது நாம் பார்க்கிறோம். தீபாவளி கொண்டாட்டங்களை குறைக்கும்படி வேண்டும் மனு ஒன்றை டில்லியில் வாழும் தனிப்பட்ட சிலர் 2018 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்தனர். அந்த ரிட் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மாலை நேரத்தில் மட்டும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. தென்னிந்திய மக்கள் காலை வேளையில்தான் தீபாவளி கொண்டாடுவார்கள் என்பதால் அந்த ஆணை மக்களிடையே மிகப்பெரிய அளவிலான எதிர்ப்பை உருவாக்கியது. மற்றொரு எடுத்துக்காட்டாக கோகுலாஷ்டமி கொண்டாட்டங்களின் போது அடிக்கப்படும் உறியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் சில நாட்களை செலவழித்ததைக் கூறலாம்.

அரசமைப்பு சட்டப் பிரச்சினைகள் ஏதுமற்ற மிகமிகச் சாதாரணமான உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் கூட உச்சநீதிமன்றம் குறுக்கிடுவதை இப்போது நாம் பார்க்கிறோம். உச்சநீதிமன்றமே அண்மையில் அதைப் பற்றி குறிப்பிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது போன்று கூறியுள்ளது.

முக்கியமற்ற சில்லறை விவகாரங்கள் உச்ச நீதிமன்றத்தைச் செயல்படவிடாமல் தடுக்கின்றன. இந்த விவகாரங்கள் உச்சநீதிமன்றத்தின் விலை மதிப்பில்லாத நேரத்தை வீணடிக்கின்றன. அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சில இன்றியமையாத தீவிரமான விவகாரங்களுக்கு இந்த நேரத்தை செலவிட்டிருக்கலாம்என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது.

இவை பேரறிவு கொண்ட சொற்கள்தாம். ஆனால் உண்மையான நடைமுறையில் இத்தகைய முக்கியத்துவம் அற்ற சில்லறை விவகாரங்கள் பற்றிய மனுக்களையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுதான் வருகிறது.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எப்போதெல்லாம் மேல்முறையீடு செய்யப்படுகிறதோ அப்போதெல்லாம் உச்சநீதிமன்றம் அதனை எதிர்பார்த்திருந்தது என்று கூட கூறலாம். “உச்சநீதிமன்றம் உங்களுக்கு எதிராக தீர்ப்பளித்து விட்டது. இந்த மேல்முறையீடு மூலம் நீங்கள் வெற்றி பெறுவதற்கு உள்ள நல் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்என்ற செய்தியை வழக்காளிக்கு தெரிவிப்பது போலவே தோன்றுகிறது.

சில விவகாரங்களில் பொதுநல வழக்கு மனுக்களை உச்சநீதிமன்றம் எப்போதெல்லாம் அனுமதிக்கிறதோ அத்தகைய விவகாரங்களையெல்லாம் உயர்நீதிமன்றத்தினாலேயே பயன் நிறைந்த அளவில் விசாரித்து தீர்ப்பு அளிக்க முடியும் என்றாலும்கூட, வழக்காளியின் காதுகளில் விழுவதெல்லாம், “நீங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகத் தேவையில்லை. உங்களுடைய கோரிக்கையை நீங்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தின் முன்வைக்கலாம். நீங்கள் விரும்பும் விசாரணை கிடைப்பதுடன் பரந்த விளம்பரமும் உங்களுக்கு கிடைக்கிறதுஎன்பது தான்.

நீதித்துறைக்கு இணையான அமைப்புகள்

நம்மால் அடையாளப்படுத்தப்பட்ட மூன் றாவது உண்மை என்னவென்றால், நீதித்துறைக்கு இணையான நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் உருவாக்கப்படுவது தான். போட்டி ஆணையமாக அது இருக்கலாம் அல்லது கம்பெனி சட்ட தீர்ப் பாயங்களாக அவை இருக்கலாம். அல்லது நுகர்வோர் நீதிமன்றங்களாக அவை இருக்கலாம். இந்த வழக்குகள் அனைத்துமே உயர்நீதிமன்றங்களுக்கு செல்வதே இல்லை. இந்த விவகாரங்களில் உயர்நீதிமன்றங்களுக்கு எந்த வேலையுமே இல்லாமல் போகச் செய்வது போன்றும் அவற்றின் மேல்முறையீட்டு நீதிமன்றமாக உச்சநீதிமன்றத்தையே செயற்படச் செய்வது போலவும் சட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

 அதன் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பதை மிக எளிதாகக் கற்பனை செய்து பார்க்கவும் இயலும். அது உயர்நீதிமன்றங்களின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதாக இருக்கலாம்; உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிதாபப்படத்தக்க நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு அடிமைகளைப் போன்று ஆக்கி விடுவதாகவும் அது இருக்கலாம்.

 ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய அமைப்புகளின் இயல்பான ஒரு குணமே, மாநில அரசுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து அவர்களது அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது தான். ஒட்டுமொத்த நாட்டிற்கும் தங்கள் கடமைகளை மாநில அரசுகள் மற்றும் அமைப்புகளை விட தங்களால் அதிக அளவு பயன்தரும் வகையில் ஆற்ற முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் மாநில அரசுகளும் அமைப்புகளும் பலவீனப்படும்போது, ஒட்டுமொத்த நாடும், ஒன்றிய மாநில அரசுகளும் அமைப்புகளும் சரி செய்ய முடியாத அளவுக்கு படிப்படியாக சீரழிந்து போகின்றன

எனவே, சுயதியாகத்தின் முக்கியத்துவத்தை உச்சநீதிமன்றமே உணர்ந்து ஏற்றுக்கொண்டு, உயர்நீதிமன்றங்களுக்கு உரிய அதிகாரங்களை மீண்டும் அளித்து, கூட்டாட்சி சமத்துவத்தன்மையை நீதித்துறையில் மீண்டும் கொண்டு வரும் இந்த நம்பிக்கையுடன் இந்தக் கட்டுரையை நாங்கள் முடிக்கிறோம். இவ்வாறு செய்வது தான் நாட்டின் மிகச்சிறந்த நலனுக்கு ஏற்றதாக இருக்கக் கூடியதாகும்.

நன்றி: தி இந்து’ 17.2.2022

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment