சென்னை, பிப்.11 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், பொதுமக்கள் வாங்கியதுபோக மீதமுள்ள பொங்கல் தொகுப்பு பெருட்களை பயன்படுத்துவது குறித்து புதிய வழிகாட்டுதல்களை கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் நசிமுதீன் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
அவ்வாறு வழங்கப்பட்டது போக, கையிருப்பில் உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்களின் தரத்தை உறுதி செய்தபின், அந்தந்த மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகர துணை ஆணையரிடம் ஒப்படைத்து தீர்வு செய்யலாம்.
அவற்றை மாவட்ட ஆட்சியர்கள்,துணை ஆணையர் (நகரம்) ஆகியோரின் விருப்புரிமை அடிப்படையில் பொது நல அரசு சார், அரசு சாரா அமைப்புகளில் தங்கிபயன்பெற்று வரும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகள், தொழுநோயாளிகளுக்கான காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள், ஊரக குடிசைப் பகுதிகளில் உள்ள நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள், குறிப்பாக கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் குடும்பங்கள், அம்மா உணவகம், சமுதாய சமையல் கூடங்கள் மற்றும் இன்னும் பிற பொது பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தலாம்.
10, 12ஆம் வகுப்புகளுக்கு ஏப். 26இல் பொதுத்தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு
சென்னை, பிப்.11 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ்வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவல் காரணமாக, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக முதல்கட்ட தேர்வு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது.
கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினருடனான ஆலோசனைக்குப் பிறகு நேரடி முறையில் இரண்டாம் கட்ட தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டாம் கட்டத் தேர்வு ஏப். 26ஆம் தேதி தொடங்கும். இதற்கான விரிவான தேர்வுகால அட்டவணை, வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment