திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2020-2021ஆம் கல்வியாண்டில் படித்த 3 மாணவிகள், மருத்துவம் (மருத்துவம்) படிக்க தேர்வு செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, புதிய உத்வேகத்துடன், மருத்துவம் படிக்கும் மாணவிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, நன்றாக படிக்கும் மாணவிகளை தேர்வு செய்து, அவர்களது கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித் துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க, மாணவர்களை முழுமையாக தயார் செய்யும் வகையில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும், நீட் நுழைவுத் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பாட ஆசிரியர் மூலமாக தொடர்ந்து ஆலோசனைகள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் (பொது மருத்துவம்) படிக்க 2 மாணவிகளும், பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிக்க 4 மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
476 மதிப்பெண் பெற்ற மாணவி கவிப்பிரியா சென்னை மருத்துவக் கல்லூரியையும், 271 மதிப்பெண் பெற்ற மாணவி சுவாதி அரியலூர் மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளனர். மேலும் 231 மதிப்பெண் பெற்ற மாணவி கோட்டீஸ்வரி, 225 மதிப்பெண் பெற்ற மாணவி ஆர்த்தி, 223 மதிப்பெண் பெற்ற மாணவி யாமினி, 198 மதிப்பெண் பெற்ற மாணவி ஹரிணி ஆகியோர் பல் மருத்துவம் (பிடிஎஸ்) படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் விவசாயி, தச்சு மற்றும் கூலி தொழிலாளர்களின் மகள்கள் ஆவர். தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்ற மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டினர்.
கூலித்தொழிலாளியின் மகள் மருத்துவம் படிக்க தேர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூலித்தொழி லாளியின் மகள் மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளார். கடந்த செப். 12இல் நடந்த நீட் தேர்வில் ராமநாதபுரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் இருந்து 52 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 40 மாணவர்கள் மருத்துவம் மற்றும் பிடிஎஸ் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து 351 மதிப்பெண்கள் பெற்ற கமுதி அருகே ராமசாமிபட்டி அரசு பள்ளி மாணவி ஜெ.புஷ்பகரணி, 2ஆம் இடம் பிடித்து 321 மதிப்பெண்கள் பெற்ற ரெகுநாதபுரம் அரசு பள்ளி மாணவர் எஸ். சந்தோஷ்குமார், 3ஆம் இடம் பிடித்து 285 மதிப்பெண் பெற்ற திருஉத்தரகோசமங்கை அரசு பள்ளி மாணவி ஆர்.மனிஷா ஆகியோருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
மாணவி புஷ்பகரணிக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவர் எஸ்.சந்தோஷ்குமாருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், மனிஷாவுக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இம்மாணவ, மாணவியரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாணவி புஷ்பகரணியின் தந்தை ஜோதிராஜன், கூலித் தொழிலாளி, தாய் வள்ளி. இம்மாணவியை ராமசாமிபட்டி கிராமத்தினர் வெகுவாக பாராட்டினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவிகளுக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நா.தீபிகா, ச.வாலண்டினா, எம்.கனிகா, ஜெ.சுவாதி, ஆர்.யமுனா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளனர். இதேபோல, அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ப.நிஷாலினிக்கு அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனால், ஒரே பள்ளியைச் சேர்ந்த 6 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
திமிரி மாணவி
திமிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ரஞ்சனி நீட் தேர்வில் முதல் முயற்சியில் 239 மதிப்பெண் பெற்று திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வாகியுள்ளார். இவரது தந்தை தயாளன் சரக்கு ஆட்டோ ஓட்டுநர்.
பிளஸ் 2 தேர்வில் ரஞ்சனி தமிழ் பாடத்தில் 94.23, ஆங்கிலத்தில் 89.78, இயற்பியல் 87.34, வேதியியல் 90.48, உயிரியல் 87.05, கணிதம் 85.34 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேராமல் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்ற ரஞ்சனி, நீட் தேர்வுக்காக தனது அலைபேசியில் யுடியூப் தளங்களில் உள்ள இலவச வீடியோக்களை பார்த்து தேர்வு எழுதியதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment