புதுடில்லி, பிப்.7 ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்புட்னிக்-லைட் கரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 9ஆவது கரோனா தடுப்பூசி ஆகும். முன்னதாக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசியை ஒன்றிய அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், நாட்டில் கரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி ரஷ்யாவின் கேமலேயா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
டாக்டர் ரெட்டி லேபரட்டரிஸ், சீரம் நிறுவனம், பெனாகியா பயோடெக்,ஹெட்டிரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்கின்றன.
இந்த தடுப்பூசி தனியார் மூலமாக மட்டுமே கிடைக்கும். அரசு இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்குப்பின் பெண் குழந்தை பிறப்பு
கல்விச்செலவை அரசு ஏற்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்.7 குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தையின் 21 வயது வரையிலான படிப்புச் செலவை, தமிழ்நாடு அரசு ஏற்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் தனம்.இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் இவருக்கு ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தனம் மீண்டும் கர்ப்பமாகி கடந்த 2017ஆம் ஆண்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அதையடுத்து, தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் தனம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்துள்ள உத்தரவில், மனுதாரருக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவருக்கு அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
எனவே, அக்குழந்தைக்கு 21 வயது ஆகும்வரை அக்குழந்தையின் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும். இதற்காக மாதம் ரூ. 10 ஆயிரம் எனக் கணக்கிட்டு மனுதாரருக்கு ஆண்டுக்கு ரூ. 1.20 லட்சம் வழங்க வேண்டும். இந்த 3ஆவது பெண் குழந்தையையும் அரசின் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் சேர்த்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் முதலமைச்சர்
வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிப்பு
லூதியானா, பிப்.7- பஞ்சாப் மாநில முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். பஞ்சாப் மக்கள் எங்களுக்கு கரீப் கர் (ஏழை குடும்பம்) முதலமைச்சர் தேவை என்று கூறினார்கள் என்றார் ராகுல்காந்தி.
கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொண்டர்களிடமிருந்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என பொதுமக்களிடம் கருத்துக்கேட்டு முடிவெடுத்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment