பெய்ஜிங், பிப்.4 கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம் நடைபெறுகிறது.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (4.2.2022) தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பீஜிங்கில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் பாரம்பரிய சுடர் தொடர் ஓட்டத்துடன் தொடங்கியது. காலை ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்ட நிலையில், அடுத்த 3 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதனை ஏந்தி செல்ல உள்ளனர். கோடைக்கால அரண்மனை, சீனப் பெருஞ்சுவர் உள்ளிட்ட சீனாவின் முக்கிய அடையாளங்களைக் கடந்து இந்த சுடர் கொண்டு செல்லப்பட உள்ளது. சீனாவில் அண்மைக் காலமாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகளை மிகுந்த கட்டுப்பாடுகளோடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம், விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் நிரம்பிய ஒரு மூடப்பட்ட வளையத்திற்குள் தான் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தின் ‘அல் ஹொசன்’ செயலிக்கு அமெரிக்காவின் குளோபல் விருது..!
அபுதாபி, பிப்.4 அமீரகத்தில் பொதுமக்கள் தாங்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்ட விவரங்கள், கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள உதவும் வகையில் ‘அல் ஹொசன்’ செயலி இருந்து வருகிறது. மேலும் கரோனா தடுப்பூசி போடுவதற்கு விலக்கு உள்ளிட்ட காரணங்கள் ஒருவருக்கு இருந்தால் அது குறித்த விவரங்களையும் இந்த செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலியை அரபி, ஆங்கிலம் உட்பட 3 மொழிகளில் பயன்படுத்தும் வசதி உள்ளது. இந்த செயலி அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அமைச்சகம், அல் ஹொசன் தேசிய சுகாதார அமைப்பு உள்ளிட்டவற்றின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செயலியாக இருக்கிறது. இந்த செயலி சுகாதார சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த செயலியின் சிறப்பான பங்களிப்பிற்காக 2021ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் குளோபல் எக்சலன்ஸ் விருது அல் ஹொசன் செயலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment