இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு

அனைத்து மொழிகளின் முக்கியத்துவம் புறந்தள்ளப்பட்டு ஹிந்தி திணிப்பு தொடர் கதையாகிறது

மாநிலங்களவையில் திருச்சி சிவா

புதுடில்லி, பிப்.4 நாடாளுமன்ற நிதி நிலைக் கூட்டத் தொடரின் குடியரசுத் தலைவர் உரை குறித்து தி.மு.. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மூன்று முக்கிய பிரச்சினைகளை எடுத்துக் கூறுகிறேன், எனது மாநிலத்தில் மிகவும் கவலைக் குரிய பிரச்சினை என்னவென்றால் மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

மீனவர்களின் வேதனை

ஜனவரி 31 ஆம் தேதி 21 மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது மூன்று படகுகளை அபகரித்துக் கொண்டார்கள். ஏற்கெனவே 68 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகுகளும் சிறீலங்கா அரசிடம் உள்ளது. எங்களது முதலமைச்சர் மு..ஸ்டாலின் மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வது, அவர்களது படகுகளை விடுவிப்பது தொடர்பாக பேசியுள்ளார். தற்போது மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்கதையாக உள்ளது. 

 சிறீலங்கா கடற்படையால் மீனவர்கள் கைதாவது தொடர்கதையாக உள்ளது, கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் துன்பத்தில் உள்ளன. இந்த தொடர் கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 1.2.2022 அன்று எங்கள் மாநில முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு மீனவர்கள் கைது தொடர்பாக முடிவெடுக்கக்கூறி கடிதம் எழுதினார். ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைதாகும் போது நாங்கள் தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக இறுதி முடிவை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம், ஆனால் ஒன்றிய அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த அரசு மாநில அரசுகளை மதிப்பதாக தெரியவில்லை.

ஹிந்திக்கு வக்காலத்து

நீங்கள் குறிப்பிட்ட பகுதிக்கு குறிப்பிட்ட மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக் கிறீர்கள். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு ஆகும். அனைத்து மொழிகளின் முக்கியத்துவம் புறந்தள்ளப்படுகிறது. ஹிந்தி திணிப்பு தொடர்கதையாகி உள்ளது.  அனைவரும் ஹிந்தி கற்றுக்கொண்டால் சலுகைகள் உண்டு என்ற தொனியில் ஹிந்தி குறித்து உள்துறை அமைச்சர் வெளிப் படையாகவே பேசுகிறார். ஒன்றிய காவல் பணியாளர் பாராமெடிக்கல் பணியாளர்கள். இதர துப்புரவு மற்றும் உதவியாளர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசுப்பணிகளில் தேர்வெழுத ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே  உள்ளது. ஹிந்தி பேசாத மாநிலங்களில் இருக்கும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? அனைத்து தேர்வுகளும் மாநில மொழிகளில் நடைபெறவேண்டும். நமது அரசமைப்புச்சட்டம் 22 மாநில மொழிகளை அங்கீகரித்துள்ளது. ஆனால், நீங்கள் ஹிந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறீர்கள். நீங்கள் வாய்வார்த்தைகளில் மட்டும் தான் தமிழ் உள்ளிட்ட மொழிகள் குறித்து புகழ்பாடுகிறீர்கள் ஆனால் நீங்கள் உண்மையில் மாநில மொழிகளை அழிக்கத் துணை போகிறீர்கள்.

ஆங்கிலேயர்களை

ஓடவிட்ட வேலுநாச்சியார்

குடியரசு நாள் விழாவில் நடந்த அலங்கார அணி வகுப்பு முக்கியமாக இந்திய விடுதலையின் 75 ஆவது ஆண்டு நிகழ்வு என்று கூறியுள் ளீர்கள். அனைத்து ஆண்டுகளும் ஏதாவது ஒரு காரணம் கூறி மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து விடுகிறீர்கள். இந்த ஆண்டு முக்கியமான தாகும். இந்த 75 ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு அரசு 7 வகையான இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து காட்சிப்படுத்த உங்களுக்கு அனுப்பியது. ஆனால் ஒன்றிய அரசு அமைத்த தேர்வுக்கமிட்டி நான்குமுறை மாற்றம் செய்யக் கூறியது, மாநில அரசும் செய்தது. தேர்வுக்குழு ஒன்றும் வானத்தில் இருந்து குதித்துவந்தவர்கள் கிடையாது. அவர்கள் அரசமைப்புச்சட்டத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்கள் புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் பாடங்களைக்கூட ஏற்க மறுக்கிறார்கள்.

 நாங்கள் விடுதலைப் போராட்டவீரர் ராணி வேலு நாச்சியார் குறித்து காட்சிப்படுத்தினோம். மிகவும் வீரதீரம் மிக்க இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயரிடம் தோல்வி அடையாத அரசி, ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிகொண்டு தனது அரசை தீரமாக நடத்திவந்தார். இந்தியாவிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து நின்று வெற்றிபெற்ற ஒரே பெண் ஆட்சியாளர் ராணி வேலுநாச்சியார்.

பாரதியார் விடுதலைப் போராட்டத்திற்கு உரமேற்றிய கவிதைகளுக்குச் சொந்தகாரார்.  ..சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக நீராவிக்கப்பலை இயக்கி புகழ்பெற்றவர்.

மருது சகோதரர்கள் நாச்சியாரின் வெற்றிக்கு துணை நின்றவர்கள். இவை அனைத்துமே தேர்வுக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உங்களுக்குத் தெரியுமா? எங்கள் மாநில முதலமைச்சர் என்ன செய்தார் என்று? அந்த அலங்கார ஊர்தியை தமிழ்நாடு எங்கும் கொண்டு சென்று மக்களிடையே அவர்களின் வீரதீர செயல்களை பறைசாற்றினார். ஒவ்வொரு  ஊரின் முக்கிய வீதிகளிலும் இந்த அலங்கார ஊர்தி சென்றது. டில்லியில் சில நிமிடங்களில் முடியவேண்டிய அலங்கார ஊர்தி ஊர்வலம், இன்று தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் வலம் வருகிறது மக்களின் ஆதரவோடு..

  மறைக்கப்பட்ட எங்களின் தீரமிக்க வரலாற்றை இன்று குழந்தைகள் ஆர்வத்தோடு பார்க்கின்றனர். மற்றுமொன்றை கூறவிரும்புகிறேன்.

மாநில வளர்ச்சியை தடுக்கும் சூழ்ச்சி

 சமீபத்தில் ஒன்றிய அரசு புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்தது அதில் ஒன்றிய அரசின் அய். .எஸ், அய். பி.எஸ் உள்ளிட்ட பணிகளில் உள்ளவர்களை மாநிலங்களின் அனுமதி இல்லாமலேயே ஒன்றிய அரசுப்பணிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம் என்று உள்ளது. இது மாநில உரிமைகளை மீண்டும் பறிக்கும் வஞ்சகச் செயல் ஆகும். இது கூட்டாட்சி அமைப்பை உடைக்கும் செயல் ஆகும். இது தொடர்பாக மாநில அரசுகளை கலந்து ஆலோசித்தீர்களா?? இல்லை. 100 மேனாள் அய்..எஸ். அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு தெளிவாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் ஒன்றிய அரசின் இந்தச்செயல் மாநில உரிமைகளைப் பறிக்கும் என்றும், கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்றும், இந்த நடைமுறை நமது அரசமைப்புச்சட்டவிதிமீறல் என்றும் கூறப்பட்டுள்ளது. இது நல்ல அரசாங்கத்திற்கான அறிகுறி அல்ல.

இவர்கள் தான் கூறினார்கள். "மினிமம் கவர்மெண்ட், மேக்சிமம் கவர்னன்ஸ்"  என்று. ஆனால், இவர்கள் கூறியதற்கு எதிர்ப்பதமாக நடந்து கொள்கிறார்கள். நமது அரசமைப்பு என்ன கூறுகிறது,

 குடிமைப்பணிக்கான அதிகாரிகள் அவர்கள் எந்த மாநிலங்களைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ அங்கே முழு அர்ப்பணிப்போடு பணிகளைச் செய் யலாம் என்கிறது. மாநில அரசுகளும் அவர்களின் பணிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைப் பண்புகளை மீறுகின்றனர். குடிமைப்பணி அதி காரிகள் தங்களின் அனுபவங்களை மாநில வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து அவர்களின் பணியில் தடை போட முயல்கிறீர்கள். மாநில அரசின் வளர்ச்சியை தடுக்க முயல்கிறீர்கள். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானது ஆகும்.

மக்கள் விரோத தடுப்புச் சட்டம்

அதேபோல் இந்த அரசு (ஊபா) சட்டத்தினை மக்களின் மீது வன்முறையைத் திணிக்கிறது, எடுத்துக்காட்டாக மக்கள் விரோத தடுப்புச் (ஊபா) சட்டம். இந்தச் சட்டத்தை பயன்படுத்தி சிறுபான்மையினர், சமூக ஆர்வலர்கள் - செயல்பாட்டாளர்கள் கல்வியாளர்கள், அறிஞர்கள் போன்றோர்களை சிறைப்படுத்தி மிரட்டிப்பார்க்கின்றனர். ஆனால் நமது குடியரசுத் தலைவர் என்ன கூறுகிறார் என்றால் மக்களாட்சி முறையைப் பாதுகாக்கிறோம் என்கிறார். இன்று மக்களாட்சிக்கு பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளது. மதச்சார்பின்மை கேள்விக்குறியாகிவிட்டது.

மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மாநிலங்கள் வலுவிழந்து போகும் நிலைக்கு ஆளாக்கிவிட்டனர். பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சிறுபான்மையினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நலனுக்காக துவங்கப்பட்ட பொதுத்துறை நிறு வனங்கள் விற்கப்படுகின்றன. இதுதான் இன்றைய நிலை. மக்களின் நலன் என்று எதுவுமே இல்லை.

எங்கள் தலைவர் அறிஞர் அண்ணா கூறிய தாவது: (அண்ணா பெயரைக் கேட்டதும் பா... உறுப்பினர்கள் கூச்சலிடத்துவங்கினர். இதனை அடுத்து ஜெய்ராம் ரமேஷ் இடைமறித்து அவர் எவ்வளவு ஆற்றல் மிக்க தலைவர் என்று உங்களுக் குத் தெரியுமா? அமைதியாக இருங்கள். அவர் கூறுவதைக் கேளுங்கள் என்றார்.)

"தொடருங்கள், ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், மக்கள் உங்களுக்கு ஆட்சி செய்ய அனுமதி கொடுத்துள்ளனர். தொடருங்கள். ஆனால் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக் கின்றனர்" - என்று பேரறிஞர் அண்ணா கூறி யுள்ளார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்கள் உங் களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

 இன்று அனைவருமே துன்பத்தில் உள்ளனர்.

தமிழில் ஒரு முதுமொழி உண்டுஏழையின் கண்ணீர் நன்கு தீட்டப்பட்ட வாளைவிட கூர்மை யானதுஎன்று கூறி எனது உரையை முடிக்கிறேன். நன்றி!

No comments:

Post a Comment