சென்னை, பிப்.7 தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களில் போட்டியிட மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள் ளன. இவற்றின் மீதான பரிசீலனை 5.2.2022 அன்று விறுவிறுப்பாக நடந்தது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,838 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நகர்புற உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 26ஆம் தேதி அறிவித்திருந்தது. 28ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி, பிப்.4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் போட்டியிட 14,701 வேட்புமனுக்கள், 138 நகராட்சிகளில் உள்ள 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 23, 354 வேட்புமனுக்கள், 490 பேரூராட்சிகளில் உள்ள 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 36,361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் பணியை சொந்த விருப்பு பெறுப்புகளுக்கு இடம் அளிக்காமல், நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் மேற் கொள்ள வேண்டும். பரிசீலனையின்போது வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சார்பாளர்கள் சமூக இடைவெளி விட்டு இருப்பதையும், முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனைத்து நடவடிக் கைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் முன்கூட்டியே அறிவுறுத்தி யிருந்தார்.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாநிலம் முழுவதும் உள்ள 1,644 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் 5.2.2022 அன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. பல்வேறு இடங்களில் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. எனினும் அசம் பாவிதங்கள் ஏதும் இன்றி வேட்பு மனுக்கள் பரிசீலனை அமைதியாக நடந்தது. வேட்புமனுக்களை திரும்பப் பெற 7ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னமும் அன்று மாலையே வெளியிடப்பட உள்ளது.
வேட்பாளர்கள் பிரச்சாரங்களை தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் பணிகளை கண்காணிக்க சென்னை மாவட்டத்துக்கு 3 தேர்தல் பார்வை யாளர்கள் இதர மாவட்டங்களுக்கு தலா ஒரு பார்வையாளர் வீதம் மொத்தம் 40 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் தேர்தல் பணிகளை 4.2.2022 அன்று மாலை முதலே கண்காணிக்கத் தொடங்கிவிட்டனர்.
தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக 31 ஆயிரத்து 29 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வரும் 10ஆம் தேதி 2ஆம் கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. இத்தேர்தலில் 1 கோடியே 37 லட்சத்து 6,793 ஆண், 1 கோடியே 43 லட்சத்து 45,637 பெண், 4,324 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56,754 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சென்னை மாநகராட்சியில் மட்டும் 61 லட்சத்து 18,734 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை பிப்.22ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment