வாசிங்டன், பிப்.2 தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பிறகும், கரோனா வைரஸ் 70 நாட்கள் வரை செயலிழக்காமல், பரவும்தன்மை கொண்டதாக இருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரன்டியர்ஸ் மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரான்சின் பாஸ்டர் இன்ஸ்டிடியூட், சாவ் பாலோ பல்கலைக்கழகம் (யுஎஸ்பி) மற்றும் பிரேசிலில் உள்ள ஓஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் பாஸ்டர்-யுஎஸ்பியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இதில், பிரேசில் நாட்டை சேர்ந்த, சார்ஸ் சிஓவி-2 வைரஸ் தாக்கிய நோயாளிகள் 38 பேரை கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை கண்காணித்து வந்தனர். அவர்கள் 2 அல்லது 3 முறை தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படும் வரை தொடர்ந்து ஆர்டி-க்யூபிசிஆர் சோதனை செய்தனர். இதற்கு ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆனது. இந்த 38 பேரில், 3 பேரிடம் (இரண்டு ஆண்கள், ஒரு பெண்) மட்டும் 70 நாட்களுக்கும் மேலாக அவர்களின் உயிர் அணுக்களில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில், சார்ஸ் சிஓவி-2 பாதித்தவர்கள், நோய்த்தொற்றின் இறுதிக் கட்டத்தில் எந்த அறிகுறியும் இல்லாமல், இரண்டு மாதங்களுக்கும் மேலாக வைரஸைப் பரப்ப முடியும் என்று ஆராய்ச்சி அறிக்கையின் ஆசிரியரான மரியேல்டன் டாஸ் பாஸ்சோஸ் குன்ஹா கூறியுள்ளார். வைரஸ் செயல்பாட்டின் கால அளவு பெண்களிடம் 22, ஆண்களிடம் 33 நாட்களாக இருந்தன. இணை நோய் எதுவுமில்லாத இந்த 3 பேரில், பெண்ணிடம் 71 நாட்களும், இரண்டு ஆண்களில் ஒருவருக்கு 81 நாட்களும் வைரஸ் கண்டறியக்கூடியதாக இருந்தது. மற்றவரிடம் கரோனா தொற்று பாதிப்பு 232 நாட்களுக்கு தொடர்ந்து இருந்தது. அதன் பிறகும் ஆர்டி-க்யூபிசிஆர் சோதனையில் 3 முறை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment