ஜெனீவா,பிப்.9- ஒமைக்ரான் பரவலுக்குப் பின் உலகம் முழுவதும் 5 லட்சம் உயிர்ப்பலி பதிவாகியுள்ளது. நிலைமை இப்படியிருக்க ஒமைக்ரானை மிதமானது என்று எப்படிக் கூற முடியும் என கவலை தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
அந்த அமைப்பின், பெருந்தொற்று இறப்புகள் தொடர் பான மேலாளர் அப்டி முகமது கூறுகையில், "கடந்த நவம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய ஒமைக்ரான் தொற் றால் இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சம் பேர் உயிரிழந் துள்ளனர். 1.3 கோடி மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இது வெகுநிச்சயமாக டெல்டாவை விட அதிக பரவல். ஒமைக்ரானால் தீவிர நோய் பாதிப்பு இல்லை என்ற கருத்து நிலவும் சூழலில் இந்தப் புள்ளிவிவரத்தையும் கவனிக்க வேண்டும். இத்தனை தடுப்பூசிகள் இருந்தும் குறுகிய காலத்தில் 5 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. இதை நிறைய பேர் கவனிக்கத் தவறி யுள்ளனர்" என்றார்.
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், " நமக்குக் கிடைத்துள்ள ஒமைக்ரான் தொடர்பான எண்ணிக்கைகள் வியக்கவைக்கிறது. ஆனால் அதே வேளையில் உண்மை யான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இதற்கு முந்தைய அலைகளை எல்லாம் எண்ணிக்கை அளவில் ஒமைக்ரான் அலை தட்டையாக்கிவிட்டது.
நாம் இன்னும் பெருந்தொற்றுக்கு இடையில் தான் இருக்கிறோம். நாம் அது முடியும் தருணத்தை நெருங்க வுள்ளோம். இன்னும் நிறைய நாடுகளில் இப்போது ஒமைக்ரான் உச்ச அலையில் இருக்கிறது. கரோனா உயிரிழப்புகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகமாக இருப்பது வருத்தமளிக்கிறது.
ஒமைக்ரானின் ஙிகி.2 உருமாற்றம் தான் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
அதேபோல் ஒரே நபருக்கு ஒரே வேளையில் ஙிகி.1, ஙிகி.2 ஆகிய திரிபுகளால் பாதிப்பு ஏற்படுகிறதா என்ற ஆய்வுகள் நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து, இதுவரை 5 கோடியே 75 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்தனர்.
அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் 14 ஆண்டுகள் கழித்து விடுதலை
அகமதாபாத், பிப்.9 அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம், இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் என்றும் 28 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகாததால், அவர்களை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. சுமார் 1 மணி நேரத்திற்குள் 21 இடங்களில் வெடித்த குண்டுவெடிப்பில், 51 பேர் பலி யானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பானது, கடந்த கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த ரெயில் எரிப்பிற்குப் பிறகான வன் முறைக்கு பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டதாக காவல்துறை கூறியது.
இதனைத் தொடர்ந்து பல இசுலாமிய இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் பலர் எந்த ஒரு குற்றப் பின்னனியும் இல்லாதவர்கள்.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் ஒருவர் மட்டுமே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் 4 பேர் இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர்கள் மீதான விசாரணை நடைபெறவில்லை. இதன் காரணமாக மீதமுள்ள . 77 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில், அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், 49 பேர் குற்றவாளிகள் என்றும், 28 பேர்மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை என்பதால், அவர்களை விடுதலை செய்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு குற்றமும் செய்யாமல் 14 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று இறுதியில் குற்றவாளி இல்லை என்று கூறி விடுதலை செய்துள்ளதால் பல இளைஞர்களின் எதிர்காலம் வீணாகிப் போய் விட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment