நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது 5 ஆயிரம் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன : உச்சநீதிமன்றத்தில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 6, 2022

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது 5 ஆயிரம் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன : உச்சநீதிமன்றத்தில் தகவல்

புதுடில்லி, பிப். 6 நாடு முழுவதும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீது  5 ஆயிரம் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக  உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதி மன்றத்தில்,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள்  மீதான வழக்குகளை விரைவாக விசா ரிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய,  மூத்த வழக்குரைஞர் விஜய் ஹன்சாரியாவை நீதிமன்ற ஆலோசகராக உச்சநீதிமன்றம் நியமித்தது.இந்த நிலையில், விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சுமார் 5 ஆயிரம் குற்ற வழக் குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிறைய வழக்குகள் தீர்வு காணப்பட்டா லும், குற்றப்பின்னணி கொண்டவர்கள் தொடர்ந்து பதவிக்கு வருவதால், வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும்  இந்த 5 ஆயிரம் வழக்குகளில்,   1,899 வழக்குகள் 5 ஆண்டுகள் பழைமையானவை.

இதில் 122 பேருக்கு எதிரான பண மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அவர்களில் 51 பேர் மேனாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராவர் அவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 28 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன; விசாரணை நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டிய நிலையில் 10 வழக்குகள் உள்ளன.

அதுபோல,  121 பேருக்கு எதிராக பல்வேறு குற்ற வழக்குகளை சிபிஅய் விசாரித்து வருகிறது. இதில் 37 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன. 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் காலாவதியாகிவிட்டன. மேலும் இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஆலோசனையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் விசா ரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் அந்த நபருக்கு அளித்த பிணையை ரத்து செய்வது குறித்து நீதிமன்றங்கள் பரிசீலிக்கலாம் என்றும்,  நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை தினசரி விசாரிக்குமாறு நீதிமன்றங் களுக்கு அறிவுறுத்தலாம் எனவும் சில வழக்கு களுக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன் றங்கள் மூலம் அறிவுறுத்தலாம் என்றும் தெரி விக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த வழக்குகளை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் மூலம் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான விசாரணைகள் தாமதமாவதற்கான காரணங்களைக் கண்டறிந்து விசாரணையை விரைந்து முடிப்பதற்கான உத் தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், பல மாநிலங்களில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்  மீதான வழக்குள் எந்தவித காரணமுமின்றி  திரும்பப் பெறப்பட் டுள்ளதாகவும், அதன்படி கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள முசாபர்நகரில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மீரட் மண்ட லத்தில் 510 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 321-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட 77 வழக்குகள் உரிய காரணம் தெரிவிக்கப்படாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதேபோல் கருநாடகத்தில் 62 வழக்குகளும், கேரளத்தில் 36 வழக்குகள், தெலங்கானாவில் 14 வழக்குகள், தமிழ்நாட்டில் 4 வழக்குகளும் காரணம் தெரிவிக்கப்படாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment