சென்னை, பிப்.2 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை 2,563 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடக்க இருக்கிறது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 30 தொடங்கியது. தொடர்ந்து வரும் 4ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் நேற்று (1.2.2022) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு, இதுவரை 2,563 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி வார்டுகளில் 440, நகராட்சி வார்டுகளில் 803, பேரூராட்சி வார்டுகளில் 1,320 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தல்
சென்னையில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1.06 கோடி பொருட்கள் பறிமுதல்
சென்னை, பிப்.2 சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.06 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான பின்பு, சென்னை மாநகராட்சியில் கடந்த 26ந்தேதி மாலை 6.30 மணி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. உடனடியாக மாநகராட்சியில் மண்டலத்திற்கு தலா 3 குழுக்கள் என 45 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த குழுவினர், பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மேலான பொருட்களை எடுத்து சென்றால், அவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். அதன்படி, சென்னையில் இதுவரை ரூ.1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 710 மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெளிநாட்டு சிகரெட், அரிசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment