மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் கூற்று 100 விழுக்காடு உண்மை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 7, 2022

மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் கூற்று 100 விழுக்காடு உண்மை

தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான மாண்புமிகு துரைமுருகன் அவர்கள்நீட்' பிரச்சினையில் அஇஅதிமுகவும், பாஜகவும் ஆடிவரும் நாடகம் குறித்துச் சொன்ன தகவல்கள் நூற்றுக்கு நூறு உண்மையானவையே!

"ஒன்றிய அரசால் 2010இல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோதே மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவைத் திமுக விலக்கி கொண்டிருந்தால் இன்று நீட் தேர்வு வந்திருக்காது என்று அதிமுக ஆட்சியின் துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மீண்டும், மீண்டும் பொய்யைச் சொல்லி பொதுமக்களை ஏமாற்ற துடிக்கும் பன்னீர்செல்வத்தின் செயல் கண்டனத்திற்குரியது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்து நீட் தேர்வு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

நீட் இனி இல்லை என்ற நிலையில்தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது. மத்தியில் பாஜகவும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் ஓடோடிச் சென்று நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை எவ்வித வாதப் பிரதிவாதங்களும் இன்றி திரும்பப் பெற வைத்தது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் மசோதா நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா நிராகரிக்கப்பட்டதா அல்லது ஏற்கப்பட்டதா என்பதே கூட தெரியாமல் 27 மாதங்கள் மூட்டையில் போட்டு கட்டி வைத்திருந்தது யார்? அதுவும் பாஜக ஆட்சி.

தமிழக மக்களின் மீது மாணவச் சமுதாயத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் துடிதுடித்து அதிமுக பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் 27 மாதங்கள் மசோதா என்ன ஆனது என்றே கவலைப்படாமல் ஆட்சி நடத்திய அதிமுகவிற்கு 142 நாட்களுக்குள் திமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இன்றைய அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதை உணர முடியாதுதான்.  இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தி.மு.. இடம் பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்நீட்டை'க் கொண்டு வந்தது என்பது உண்மைதான். அதே நேரத்தில் திமுக அதனை ஏற்றுக் கொண்டதா? இந்தக் கேள்விக்கு அறிவு நாணயத்தோடு பதில் சொல்லிவிட்டு அஇஅதிமுகவும், பாஜகவும் அடுத்த வார்த்தை பேசட்டும்!

அன்றைய ஒன்றிய மக்கள் நல வாழ்வுத் துறை அமைச்சர் திரு. குலாம் நபி ஆசாத்துக்கு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்நீட்' முயற்சியை கைவிட வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியதோடு நின்றுவிடவில்லை. சென்னை - உயர்நீதிமன்றத்தில், அதனை எதிர்த்து திமுக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. சென்னை உயர்நீதிமன்றம் திமுக தொடர்ந்த வழக்கை ஏற்றுநீட்'டிற்குத் தடை விதித்தது (21.12.2010).

பல தரப்புகளில் இருந்தும் வழக்குத் தொடுக்கப்பட்டதால், எல்லா வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் ஒரு சேர விசாரிக்கப்பட்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல் தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் விக்ரம ஜித் சென் மற்றும் .ஆர்.தவே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (Medical Council of India) ‘நீட்' தேர்வு நடத்தும் அதிகாரம் இல்லை. இந்திய அரசியல் சாசனம் 19, 25, 26, 29, 30 பிரிவுகளின்படிநீட்' செல்லாது என்பது தீர்ப்பாகும் (18.7.2013).

இதில் குஜராத் பார்ப்பனரான .ஆர்.தவே மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவின்படிநீட்' செல்லாது என்று ஆக்கப்பட்டு விட்டது. இந்தத் தீர்ப்பு மாற்றப்பட்டது எப்போது? நரேந்திர மோடி தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தான் மேல் முறையீடு செய்யப்பட்டது உச்சநீதிமன்றத்தில்.

இந்த அமர்வுக்குத் தலைமை வகித்தது யார் தெரியுமா?

நீட் தேர்வு செல்லாது என்று பெரும்பான்மையாக இரு நீதிபதிகள் தீர்ப்புரை - எழுதியபோது அதில் மாறுபட்டு, ‘நீட்' செல்லும் என்று தீர்ப்பு வரிகளை எழுதிய அதே சாட்சாத் .ஆர்.தவேதான் - இந்த அமர்வின் தலைவர். நண்டைச் சுட்டு நரியிடம் காவல் வைத்த கதைதான் - ‘நீட்' செல்லும் என்று தீர்ப்புக் கூறப்பட்டது.

முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா நீட்டினை எதிர்த்தார். ஓராண்டுக்கு மட்டும் விலக்குக் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றினால் மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினாரா? இல்லையா? அந்த வாக்கு காப்பாற்றப்பட்டதா?

அரியலூர் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த - மூட்டைத் தூக்கும் கூலி வேலையைச் செய்தவரின் மகள் 2017இல் +2 தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1176 பெற்றது; கட் ஆஃப் மார்க் 196.75. அதே மாணவி நீட்டில் 86 மதிப்பெண் பெற்றது. மருத்துவக் கனவு சிதைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தமிழ்நாட்டைக் கொந்தளிக்கச் செய்தது. அஇஅதிமுக ஆட்சியில், ‘நீட்'டிலிருந்து தமிழ்நாட்டுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது (1.2.2017). இந்த இரு மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினார். அந்த மசோதாக்கள் ஏதும் குடியரசு தலைவர் மாளிகையில் நிலுவையில் இல்லை என்று பதில் வந்தது (20.7.2017).

அஇஅதிமுக மூச்சுவிடவில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் போது (6.7.2019) அவ்விரு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உள்துறை அமைச்சகம் தகவலைத் தெரிவித்தது. 22.9.2017 அன்றே நிராகரிக்கப்பட்ட ஒன்றை மறைத்தது ஏன்? 27 மாதங்கள் மூட்டை கட்டி வைத்தது ஏன்?

எவ்வளவுப் பெரிய மகா மகா மோசடி. இந்தத் தன்மையில் உள்ள அஇஅதிமுக தான்நீட்' பிரச்சினையில் புயல் வேகத்தில் செயல்படும் திமுக அரசைக் குறை சொல்கிறது. இது தொடர்பாக திமுக அரசு நீதிபதி டாக்டர் .கே.ராஜன் தலைமையில் நிபுணர் குழு அமைத்து முறையாக அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தும் 142 நாட்கள் கழித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கே திருப்பி அனுப்பியது சட்டப்படிதான் சரியா? நியாயப்படிதான் சரியா?

இதனைக் கண்டிக்க வேண்டிய அஇஅதிமுக - திமுக மீது பழியைப் போடுவது பச்சையான துரோகம் அல்லவா! இது தொடர்பாகக் கூட்டப்பட்ட சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான அஇஅதிமுக கலந்து கொள்ளாத கறையைக் காலாகாலத்திற்கும்  கழுவ முடியாதே!

திமுக பொதுச் செயலாளர் திரு,துரைமுருகன் அவர்களின் அறிக்கை அட்சர சுத்தமானது. 100 விழுக்காடு சரியானது - உண்மையானது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் நீட் வந்தது - நீட் வந்தததற்கு திமுக காரணம்தான் என்று திருப்பித் திருப்பிச் சொல்லும் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தை நமது திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம், மேலே எடுத்துக் காட்டப்பட்ட உண்மைத் தகவல்களை வெகு மக்களிடம் பரப்ப வேண்டியது நமது முக்கிய கடமையாகும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் கவனம் செலுத்தட்டும்!

No comments:

Post a Comment