ஆனால், சமூகநீதி என்பதை பார்ப்பனீயம் - ஆரியம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது!
'மதவெறி கண்டன நாள்! மண்டலும் - கமண்டலும்'
காணொலி சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை
சென்னை, பிப்.1 பார்ப்பனர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள் - அவர்களுக்குக் கடவுள் இல்லை என்று சொல்வதைப்பற்றிக் கூட கவலையில்லை. ஆனால், சமூகநீதி என்பதை பார்ப்பனீயம், ஆரியம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள்.
மண்டலும் - கமண்டலும் காணொலி சிறப்புக் கூட்டம்
கடந்த 30.1.2022 அன்று மாலை ''மதவெறி கண்டன நாள் - மண்டலும் - கமண்டலும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி சிறப்புக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஆகவே, அந்த அடிப்படையிலே அவருடைய ஆட்சியையும், அவருடைய தலைமையையும் ஒழிக்கவேண்டும் என்பதற்காக காந்தியாரைப் பயன்படுத்தலாம் என்று நினைத்த நேரத்தில்,
ஓமந்தூரார், அந்தப் புள்ளிவிவரங்களை காந்தி யாரிடம் கொடுத்தார். இவர் சொன்ன உண்மைகளைக் காந்தியார் புரிந்துகொண்ட பிறகு, அவருக்கு மன மாற்றம் ஏற்பட்டது, தெளிவு ஏற்பட்டது.
பார்ப்பனர்களைப் பார்த்து - காந்தியார் கேட்ட கேள்வி!
பார்ப்பனர்களைப் பார்த்து கேட்டார், ‘‘வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கு அழகு; உங்களுக்கு எதற்கு ஸ்டெத்ஸ்கோப், உங்கள் கையிலே எதற்கு டி-ஸ்கொயர்? நீங்கள் எல்லாம் புத்திசாலிகள்தானே - இந்த வெள்ளைக்காரர்கள் படிப்பு உங்களுக்குத் தேவையா? அதை மற்றவர்கள் படித்துவிட்டுப் போகட்டுமே'' என்று சொன்னார் பாருங்கள்,
அதை அய்யா அவர்கள் தன் கைப்பட டைரியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் தோழர்களே!
இதுதான் அடிப்படையான விஷயம்; வெளியில் அதிகம் பேசப்படாத விஷயம்.
30 நாள்கள்கூட ஆகவில்லை; காந்தியார் கொல்லப்பட்டார்
ஏனென்றால், காந்தியாரைக் கொல்வதற்கு மூல காரணங்கள் என்பது இருக்கிறதே, அது கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால், அதைவிட முக்கிய காரணம், அவர் அப்படி சொல்லி 30 நாள்கள்கூட ஆகவில்லை; காந்தியார் கொல்லப் பட்டார்.
இதை எழுதியிருக்கிறார் அய்யா தமது டைரியில்.
அதைவிட, மதத்தையும், அரசியலையும் கலக்கக் கூடாது என்பதை நான் உணருகிறேன் என்று காந்தியார் சொன்னார்.
அதே காந்தியார், இந்திய அரசியலில், அரசாங்கம் மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும் என்றார்.
இப்படி இந்தக் காரணத்தினாலே, 28 நாள்களில் காந்தியார் கோட்சேவினால் கொல்லப்படுகிறார் என்று தன்னுடைய டைரியில் பெரியார் அவர்கள் குறித்து வைத்திருக்கிறார்.
பெரியார் அவர்கள் அதற்கு முன்பே, தன்னுடைய உரையாடலில் காந்தியாரிடம் சொல்லிவிட்டார்.
உங்களைப் பார்ப்பனீயம் விட்டு வைக்காது; எந்த மதத்திற்காக நீங்கள் சொல்கிறீர்களோ, அவர்கள் உங்களை உயிரோடு விட்டு வைக்கமாட்டார்கள் என்று பெங்களூருவிலே காந்தியாரை கடைசியாக சந்தித்த நேரத்தில் சொன்னவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கிறார் தன்னுடைய டைரியில்.
இந்த சூழலை எண்ணிப் பாருங்கள் தோழர்களே!
கொள்கையா? காந்தியாருடைய உயிரா?
அதுமட்டுமல்ல, அம்பேத்கர் அவர்கள் கோடான கோடி மக்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கின்ற தன்னுடைய சமுதாயம் உரிமையற்று இருப்பதா? என்பதற்காக மிகப்பெரிய அளவிற்குத் தனித் தொகுதி வேண்டும் என்று கேட்டபொழுது,
இதை எதிர்த்து காந்தியார் அவர்கள், புனாவில், பட்டினிப் போராட்டம் இருந்த நேரத்தில், மிகப்பெரிய அளவிற்கு எல்லோரும், காந்தியார் பட்டினிப் போராட்டம் இருக்கிறார்; காந்தியார் மரணமடையப் போகிறார்; காந்தியாரின் உயிர் உங்கள் கையிலே இருக்கிறது; எப்படியாவது காப்பாற்றுங்கள், காப்பாற் றுங்கள் என்று சொன்னபொழுது,
கொள்கையிலே சமரசம் செய்துகொள்ளாத டாக்டர் அம்பேத்கர் அவர்கள், மனிதாபிமானத்தோடு, கருணை உள்ளத்தோடு, அவர் யாரால் ஈர்க்கப் பட்டிருந்தாரோ, அந்த பவுத்தத்தின் அடிப்படையில், பகுத்தறிவு உணர்வோடு சிந்தித்தார்.
''கொள்கையா? காந்தியாருடைய உயிரா? ஒரு தலைவருடைய உயிர் காப்பாற்றப்படுவது முக்கியம் - மடிப்பிச்சை போடுங்கள்'' என்றெல்லாம் கேட் டார்கள்; கஸ்தூரிபாய் காந்தியை விட்டுப் பேசச் சொன்னார்கள். மற்றவர்களும் பேசினார்கள். உயிர்ப் பிச்சை கொடுங்கள் என்றெல்லாம் கேட்டார்கள்.
பிடிவாதமாக இல்லை அம்பேத்கர் அவர்கள், முடியாது என்று சொல்லவில்லை அம்பேத்கர் அவர் கள் - கடைசி நேரத்தில் அவரது உயிரைக் காப்பாற்று வதற்காக முனைந்தார்.
தந்தை பெரியாரின் தந்தி செய்தி!
அந்த நேரத்தில்கூட பெரியார்தான் தெளிவாக தந்தி கொடுத்தார்.
''காந்தியாரின் உயிரைவிட, கோடான கோடி ஒடுக்கப்பட்ட மக்களாக ஆதிதிராவிட மக்கள், தாழ்த் தப்பட்ட சமுதாய மக்கள் இருக்கிறார்களே, அந்த மக்களுடைய உரிமைக் குரலை விட்டுக் கொடுக் காதீர்கள்; இதிலிருந்து நீங்கள் கீழே இறங்கி வரா தீர்கள்'' என்று அந்தத் தந்திச் செய்தியில் குறிப்பிட் டிருந்தார்.
ஆனால், அதை அம்பேத்கர் அவர்கள் பொருட் படுத்தாமல், தெளிவாக, மனிதநேயத்தோடு, கருணை உள்ளத்தோடு, காந்தியாரைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய புனா ஒப்பந்தம் என்பதிலே சமரசம் செய்துகொண்டார்.
அதுதான் இன்றளவும் அந்த மக்களுக்கு மிகப் பெரிய அளவிற்கு வந்த வாய்ப்பு - கதவு தட்டிய நேரத்தில், கதவு திறக்காமல் போனதற்குக் காரணம் என்ன?
அம்பேத்கர், காந்தியாருடைய கொள்கை எதிரி, லட்சியத்தை எதிர்த்துக் கொண்டிருந்தவர்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த அடிப் படையில் எண்ணிப் பாருங்கள்.
அம்பேத்கர் காந்தியாரின் உயிரைப்பற்றிக் கவலைப்படுகிறார்; பார்ப்பனர்கள் காந்தியாரின உயிரை எடுக்கிறார்கள்!
அம்பேத்கர், காந்தியார் அவர்கள் உயிர் பிழைப் பதற்காக, தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்குகிறார்; தளர்த்திக் கொள்கிறார்.
அதேநேரத்தில், தங்களுடைய கொள்கையிலே காந்தியார் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றவுடன், பார்ப்பனர்கள் கோட்சேக்களை உருவாக்குகிறார்கள். உடனே சாவர்க்கர்கள் அதற்குத் தூண்டுதலாக இருக் கிறார்கள்.
இத ற்கு புத்தகங்களும், ஆதாரங்களும் ஏராளமாக இருக்கின்றன.
ஒரு அம்பேத்கர், கொள்கை எதிரி, காந்தியாரின் உயிரைக் காப்பாற்றினார்.
காந்தியாரைப்
பழிவாங்கியது ஆரியம்!
ஆனால், காந்தியாரைப் பலி கொண்டது எது?
ஆரியம்.
காந்தியாரைப் பழிவாங்கியது எது?
ஆரியம்
125 ஆண்டுகள் அவர் வாழக்கூடாது; வாழ விட மாட்டோம் என்று திட்டமிட்டது எது?
சனாதனம்; ஹிந்து சனாதனம், மதவெறி
இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள் - தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.
தந்தை பெரியார் - அவருடைய டைரியில் தன் கைப்பட குறிப்பிட்டிருக்கிறார்; இன்னமும் அந்த டைரி இருக்கிறது; ஆதாரங்கள் இருக்கின்றன.
அப்படிப்பட்ட சூழலில்தான், இன்றைக்கு அவர் கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஒரு பக்கம் காந்தியாரைப் புகழுகிறோம் என்று நாடகமாடிக் கொண்டு, நடிப்பு சுதேசிகள் என்று சொல்வதைப்போல, காந்தியாரின் படத்தை ரூபாய் நோட்டிலே அவருடைய படத்தைப் போடுகிறோம் என்று சொல்லிவிட்டு,
'நான் ஏன் காந்தியைச் சுட்டேன்?'
திரைப்படத்தை அனுமதிக்கிறார்கள்!
காந்தியாருக்கு 150 ஆம் ஆண்டுவிழா கொண் டாடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு,
காந்தியைக் கொன்ற கோட்சேவைப்பற்றி படம் எடுக்கிறார்கள்; அதை அனுமதிக்கிறார்கள்; இது எவ்வளவு கேவலம்!
'நான் ஏன் காந்தியைச் சுட்டேன்?' என்று ஒரு படம் எடுக்கப்பட்டால், அதை அனுமதிக்கலாமா? வெளி யில் வரலாமா?
இது எவ்வளவு மனிதாபிமானற்ற கொடுமை!
அதுமட்டுமல்ல,
இஸ்லாமிய சகோதரர்களை, சிறுபான்மை சகோ தரர்களை எல்லாம் இனப்படுகொலை செய்வோம் என்று பேசுகின்ற சாமியார்கள்மீது சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம் சொன்ன பிறகு, ஏதோ ஒப்புக்காக நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே தவிர, வேறொன்றும் கிடையாது.
அவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
நாடாளுமன்றத்திலே கோட்சேவைப்பற்றி பேசுகிறார் ஒரு சாமியாரிணி!
கோட்சேவைப்பற்றி, நாடாளுமன்றத்திலே பேசு கிறார்- பிணையில் வந்திருக்கின்ற சாமியாரிணி பிரக்யாசிங் தாக்கூர்.
ஆகவே, மதவெறி என்பது இருக்கிறதே, இப் பொழுது படமெடுத்தாடுகிறது.
நச்சுப் பல் இன்னும் பிடுங்கப்படவில்லை.
இந்த சூழல் எண்ணிப்பார்க்கவேண்டிய சூழ லாகும்.
இதில் மிக முக்கியமான, அடிப்படையான விஷயம் என்ன?
புதிய காந்தியார் -
பழைய காந்தியார்!
புதிய காந்தியார் - பழைய காந்தியார் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார்.
பழைய காந்தியார், வருணாசிரமத்தை நம்பிக் கொண்டிருந்தார்; ராமராஜ்ஜியம் என் றெல்லாம் சொன்னார். அவருக்கு சம்பூகனைப் பற்றி கவலையில்லை. தத்துவத்தை கற்பனை செய்துகொண்டி ருந்தார்.
ஆனால், உண்மை நிலை என்னவென்று உணர்த் தும் வகையில், முற்றிலும் மாறான சூழல் ஏற்பட்டது - கடைசியாக அவர் தெளிந்து உணர்ந்தார். அதைத் தான் இன்றைய அறிக்கை யிலும் கூட சொன்னேன்.
ஆறாவது திருமுறை என்பது ஒரு ஒப்புதல் வாக்குமூலம்!
எப்படி இராமலிங்க அடிகள், முன்னாலே அய்ந்து திருமுறைகளைப் பாடியபொழுதெல்லாம், பல சிந்தனைகளில் இருந்தவர்.
பிறகுதான் வேதாகமங்கள், விளையாட்டு என்று சாடினார்.
எப்படி இராமலிங்கருடைய வாழ்க்கையில் ஆறா வது திருமுறை என்பது ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக உணர்ந்த கட்டமாக இருந்ததோ, அதுபோலத்தான், ஓமந்தூராரைப்பற்றி காந்தியாரிடம் சொன்ன புகார்கள், அதற்கு காந்தியார் கேட்ட கேள்வி, ஆகா, காந்தியார் சமூகநீதியை ஆதரிக்கிறாரே, சூத்திரர் களுக்காகப் பேசுகிறாரே, பஞ்சமர்களுக்காகப் பேசுகிறாரே என்று பார்ப்பனர்கள் நினைத்தனர்.
சமூகநீதி என்பதை பார்ப்பனீயம், ஆரியம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது
பார்ப்பனர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள் - அவர்களுக்குக் கடவுள் இல்லை என்று சொல் வதைப்பற்றிக்கூட கவலையில்லை. ஆனால், சமூக நீதி என்பதை பார்ப்பனீயம், ஆரியம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது.
அன்றிலிருந்து இன்றுவரையில் நடைபெறுகின்ற பிரச்சினைகளைப் பார்க்கின்றபொழுது இது தெளிவாகத் தெரியும்.
ஆகவேதான், பார்ப்பனர்கள் ஆரம்பத்திலிருந்து ஜாதியைத் தூக்கிப் பிடிப்பது, ஜாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்குரிய இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பதைக் காலங்காலமாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இதுதான் அடிப்படையான காரணம் - மக்களுக்குத் தெளிவாக வெளிச்சத்தோடு விளக்கப் படாத ஒன்றாகும். அதைத்தான் இந்த நேரத்தில் வெளியே கொண்டுவரவேண்டும்.
ஹிந்துஸ்தானி என்பது உருது சம்பந்தப்பட்டது
அருள்மொழி அவர்கள்கூட ஹிந்துஸ்தானி பிரச் சினைப்பற்றி இங்கே சொன்னார்கள்.
அதிலே ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஹிந்தி என்று சொல்லும்பொழுது அவர்கள் எதை எழுதியிருக்கிறார்கள்?
தேவ்நகரி ஸ்கிரிப்ட்
தேவ்நகரி, கடவுள் பாஷை, தேவபாஷை - அதனுடைய எழுத்து சமஸ்கிருதம்.
ஆனால், ஹிந்துஸ்தானி என்பது உருது சம்பந் தப்பட்டது. உருது என்பது, அந்தக் காலத்தில் ராணுவ வீரர்கள் பேசிய பாசறை மொழி.
ஆகவே, இஸ்லாமியர்கள் பெரும்பாலும் உருது மொழி பேசுவார்கள்.
வடநாட்டில் இருக்கக்கூடியவர்கள், அலகாபாத் மற்ற பகுதிகளில் எல்லாம் இன்றைக்குப் பிரஜா ராஜ்ஜியம் என்று ஆக்கியிருக்கிறார்களே, அங்கே பெரும் பாலும் ஹிந்துஸ்தானி பேசுவார்கள். காரணம், உருது கலந்தது.
இந்த வாய்ப்பையே கொடுக்கக்கூடாது என்பதற் காகத்தான் இப்படி செய்திருக்கிறார்கள்.
கடைசிக் காலத்தில் உணர்ந்தார் காந்தியார்!
அதுமட்டுமல்ல, காந்தியாரைப் பொறுத்தவரையில் கடைசிக் காலத்தில் உணர்ந்தார்.
அரசியல் வேறு - மதம் வேறு என்று.
மதத்தைக் கொண்டு வந்து அரசியலோடு கலக்கக் கூடாது. மதச்சார்பற்ற தன்மை வேண்டும் என்று நினைத்தார்.
மதத்தை காந்தியார் விரும்பியது என்பது வேறு. ஆனால், அரசாங்கம் என்று வரும்பொழுது, செக்கு லரிசம் என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பைப் பெறவேண்டும் என்பதுதான்.
இதைத் தந்தை பெரியார் அவர்களும் குறிப்பிட்டு இருக்கிறார்.
(தொடரும்)
No comments:
Post a Comment