முட்டையின் வெள்ளைக்கருவிலுள்ள புரதம் நமக்கு ஊட்டம் தரக்கூடியது. இதனால்தான் பலரும் 'ஓவால்புமின்' என்ற புரதத்திற்காக முட்டையை உணவில் தினமும் சேர்த்துக்கொள்கின்றனர்.
ஆனால், ஓவால்புமினுக்காக, ஏராளமான கோழிகளை, பண்ணைகளில் வளர்க்கவேண்டிஉள்ளது. முட்டை, முக்கால்வாசி இறைச்சி போக, மீதி எல்லாம் சுற்றுச்சூழலுக்கு கேடுதரும் கழிவுகளாக்கப்படுகின்றன.
இந்த அவலத்தைப் போக்க, தாவரங்கள் மூலமாகவே முட்டையில் உள்ள புரதத்தை வளர்த்து எடுக்க சில விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
அண்மையில் ஹெல்சிங்கி பல்கலைக் கழகம் மற்றும் பின்லாந்தின் வி.டி.டி., தொழில்நுட்ப ஆராய்ச்சி மய்யம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள், பூஞ்சையிலிருந்து ஓவால்புமின் புரதத்தை தயாரித்துள்ளனர். கோழியில் ஓவால்புமினை உற்பத்தி செய்ய உதவும் மரபணுவை எடுத்து, 'டிரைகோடெர்மாரீசி' என்ற பூஞ்சையில் புகுத்தி, விஞ்ஞானிகள் இதை சாதித்துள்ளனர்.
இதையடுத்து அந்த பூஞ்சையில் சுரந்த ஓவால்புமின் புரதத்தை சேகரித்து, ஒரு பொடியாகத் தயாரித்தனர்.இந்தப் பொடியை சோதித்ததில், கோழி முட்டையின் வெள்ளைக் கரு பொடியைப் போலவே பல அம்சங்களைக் கொண்டிருந்தது.
பூஞ்சைப் பொடியை முட்டைப் பொடியைப் போலவே, தண்ணீர் கலந்து அடித்து கிரீம் போலத் தயாரிக்க முடிந்தது.பூஞ்சையில் விளையும் ஓவால்புமின் புரதத்தை இந்த உலகம் உணவாக ஏற்றுக்கொண்டால் என்னவாகும்?
கோழிப்பண்ணை மற்றும் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் நிலத்தில் 90 சதவீதம் மிச்சமாகும். பண்ணைத் தொழில்களால் வெளியேற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களில் 30-55 சதவீதம் தடுக்கப்படும். மொத்தத்தில் பூஞ்சைப் புரதம் பூமியை மாசு குறைந்ததாக ஆக்கும்.
No comments:
Post a Comment