திராவிடர் கழகத் தலைவர் கண்டன அறிக்கை
ஜனவரி 26 ஆம் தேதி, புதுடில்லியில் நடைபெறும் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் வ.உ.சிதம் பரனார் - வேலுநாச்சியார் - சுபாஷ் சந்திரபோஸ் அலங்கார ஊர்திகளுக்கு இடமில்லை என்று மறுப் பதா? என்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
அவரது அறிக்கை வருமாறு:
வன்மையான கண்டனத்திற்குரியது
வருகின்ற ஜனவரி 26 இல் 'குடியரசு நாள்’ விழாவில் புதுடில்லி அணிவகுப்பில் இடம்பெறவேண்டி தமிழ்நாடு அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்தி இரண்டு ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம் பரனாரும், வெள்ளையருக்கெதிராகப் போர்க் குரல் கொடுத்து களத்தில் நின்ற வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோர் கொண்ட ஊர்திகளுக்கு இடமில்லை என்று மறுக்கப்பட்டு இருப்பது வன்மையான கண்டனத்திற் குரியது ஆகும்!
இவர்களைப் பெருமைப்படுத்தல், சிறப்பான எடுத்துக்காட்டுகளாக வரலாற்றின் தியாக ஏடுகளை நினைவூட்டுதல் என்ன தேச விரோதச் செயலா? புரியவில்லை!
எதிர்க்கட்சி ஆட்சியால் அனுப்பப்பட்டதால் மட்டும் அந்த அலங்கார ஊர்திகள் இடம்பெறக்கூடது என்று மறுப்பதும்,
அதுபோலவே, ஜாதி ஒழித்த - ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்குப் போராடிய கேரளத்து நாராயண குருவைப் பெருமைப்படுத்தும் ஊர்திக்கும் பேரணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களது வீரம் செறிந்த தியாகத்தை, விவரிக்கும் ஊர்திக்கும் இடம் இல்லையாம்!
ஜனநாயகம் சீரழிவை நோக்கிச் செல்லுகிறது
ஜனநாயகம் எப்படி நாட்டில் நாளும் சிதைக்கப்பட்டு, சீரழிவை நோக்கிச் செல்லுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு அல்லவா?
ஒன்றிய அரசு என்பதற்குப் பதிலாக மாநிலங்களின் உரிமைகளைப் பறித்த ஒரே அரசு செயலுக்கு வந்து விட்டது என்பதற்கான பிரகடனமா?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.1.2022
No comments:
Post a Comment