பிறஇதழிலிருந்து.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

பிறஇதழிலிருந்து....

தத்துவங்களால் நம்முடன் வாழ்கிறார் தந்தை பெரியார்

.வந்தியத்தேவன்

.தி.மு.கொள்கை விளக்க அணிச் செயலாளர்

பொதுவாழ்வில் இருந்து விலகி, ஓய்வெடுத்துக் கொண்டு நிம்மதியாய், பத்தியமாய் இருந்தால் ஒழிய இனி 4. 5 வருஷத்திற்கு மேல் உயிருடன் இருக்க மாட்டேன் என்பது எனக்கு நன்றாய்த் தெரியும். அப்படி இருந்தாலும் ஒரு வேலையும் செய்யாமல் - செய்ய லாயக்கில்லாமல் உயிருடன் இருப்பதும் சரி, செய்து கொண்டே இருப்பதன் மூலம் சாவதும் சரி என்று கருதியே வேலை செய்கிறேன். நோய்வாய்ப்பட்டும் தொல்லைப்பட்டுக் கொண்டும் சுற்றுகிறேன்.

மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக தமிழ்ச் சமுதாயத்தை, திராவிடர் இனத்தை, மானுட கூட்டத்தை மாற்றி அமைத்திட, வாழ்நாள் முழுக்க, ஓய்வின்றி தொண்டறம் தொடர்ந்திட்ட ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயரிய தலைவராம் நம் அய்யா பெரியார் மறைந்து 47 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

வேலூர் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட நம் அய்யாவின் புகழுடலுக்கு தமிழ் மக்கள் வழி நெடுகிலும் மரியாதை செலுத்தியது, இராஜாஜி மண்டபத்தில் கிடத்தப்பட்டிருந்த நம் ஞானத் தந்தைக்கு இலட்சக்கணக்கானோர் கண்ணீர் மரியாதை செலுத்தியது: காமராசர், கலைஞர், எம்.ஜி.ஆர்., என கட்சித் தலைவர்கள் கண்ணீர்க் கடலில் - தமிழர் திரளில், ஊர்ந்து வந்தது; அய்யாவின் உடலடக்கத்தின்போது மயங்கி விழுந்த அன்னை மணியம்மையாருக்கும், ஆசிரியர் கி.வீரமணிக்கும் காமராசரும் - கலைஞரும் ஆறுதல் கூறியது; அரசு மரியாதையுடன் அய்யாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு, அங்கு பகுத்தறிவுச் சுடரேந்தும் நினைவிடம் அமைக்கப்பட்டது முதலான காட்சிகள் ஒவ்வொன்றும் தொடர்ந்து வரும் கடல் அலையாய் நம் நெஞ்சில் நெகிழ்ச்சியை - இனம் புரியாத ஓர் துயரத்தை இப்போதும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன!

'பெரும் பணியை சுமந்த உடல்

பெரும் புகழைச் சுமந்த உயிர்

பெரியார் என்னும் -

அரும் பெயரை சுமந்த நரை

அழற்கதிரை சுமந்த மதி

அறியாமை மேல்

இரும்புலக்கை மொத்துதல்போல்

எடுக்காமல் அடித்த அடி

எரிபோல் பேச்சு

பெரும் புதுமை! அட்டா, இப்

பெரியாரை தமிழ்நாடும் பெற்றதம்மா!'

என்று மகிழ்ச்சிக் களிப்பில் கவிதை பாடிய பாவலரேறு பெருஞ்சித்திரனார்,

'உரையழகிங் கெவர்க்கு வரும்?

உடலழகிங் கெவர் பெற்றார்?

ஒளிர் முகத்தின்

நரையழகிங் கெவர்க்குண்டு?

நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்

நடை நடந்து

திரையுடலை நோய் உடலை

சுமந்து பல ஊர் திரிந்து

தொண்டு செய்த இரை கடலை

இவ்வெரியேற்றை, அட்டா

தமிழ்நாடும் இழந்ததம்மா'

என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டு கண்ணீர்க் காவியம் படைத்தாரே, அந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியும் நம் செவி களில் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

'சரித்திரம் மறைந்த செய்தி

தலைவரின் மரணச் செய்தி

விரித்ததோர் புத்தகத்தின்

வீழ்ச்சியை கூறும் செய்தி

நரித்தனம் கலங்கச் செய்த

நாயகன் மரணச் செய்தி

மரித்தது பெரியாரல்ல

மாபெரும் தமிழர் வாழ்க்கை !'

என்று கவிஞர் கண்ணதாசன் அப்போது தீட்டிய இரங்கல் கவிதையை எப்படி நம்மால் மறக்க இயலும்?

'மானம் கெடுப்பாரை

அறிவைத் தடுப்பாரை

மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை

யார் இங்கு மறப்பார் பெரியாரை?'

என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் வினவியது, நேற்றைக்கும் கேட்டது; இன்றைக்கும் கேட்கிறது. நாளைக்கும் கேட்கும்! சிவந்தமேனி, தடித்த உடல், பெருத்த தொந்தி, மூப்பை வெளிக்காட்டும் வெள்ளி நிகர் தலைமுடி, அதனையொத்த வெண்ணிற மீசை, திரண்டு நீண்ட மூக்கு, அகன்ற நெற்றி, உயர்ந்து மயிர் கத்தையான புருவங்கள், ஆழமான அழகு விழிகள், அதன் மேல் சன்னமான சாதாரண மூக்கு கண்ணாடி, இடுப்பில் நான்கு முழம் கொண்ட கைலி, மேலே வெள்ளை நிறத்திலான கை வைத்து தைக்கப்பட்ட பாடி (பனியன்) அதன் மேலே முக்கால் கை கருப்பு சட்டை, அதன் உட்புறத்தில் பணம் வைக்கும் சட்டைப் பை, வெளிப்புறத்தில் காகிதம், கடித குறிப்புத்தாள், சிறிய பாக்கட் டைரி இவைகளால் நிரம்பித் ததும்பும் பாக்கட், பவுண்டன் பேனா, அறையில் கடிகாரம், இதன் மேல் காட்சி தரும் சால்வை நிகர் போர்வை, கைகளில் தவழும் வளைந்த கைப்பிடி கொண்ட கைத்தடி, பூட்டு இல்லாத தோலினால் ஆன பெட்டி, அதன் உள்ளே கிடக்கும் சோப்பு, பற்பசை, பிரஷ், கடிதத்தாள், கவர், செய்தித்தாள்கள் என அய்யாவின் அழகு மிகு தோற்றம், நம் நெஞ்சில் ஓவியமாய், திரைக்காவியமாய் இன்றும் காட்சி அளிக்கிறது.

"எனக்கு வயது 90; உடல் நிலை மிகவும் மோசம்; கைகால் நடுக்கம் அதிகம்; சிறுநீர் கழிக்கும் போது சப்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன்; அவ்வளவு வலி! தூக்கம் சரியாக வருவதில்லை . நினைத்தபோது, ...லில் ஏதாவது ஒரு பாகத்தில் வலி ஏற்பட்டு, ஏப்பமோ, காற்றுப் பிரிவோ போன பிறகு நோய் விலகுகிறது. உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவதில்லை. முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடிவதில்லை. எந்தக் காரியம் பற்றியும், மனத்திற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. நெஞ்சில் வலி திடீரென்று ஏற்படுவதும், ஏப்பம் வந்த பிறகு குறைவதுமாக இருக்கிறது, எனக்கு ஞாபகக் கோளாறு அதிகமாகி விட்டது. பேசும் பேச்சுத் தொடர் மறந்து போகிறது. வெகு கெட்டிக்காரத்தனமாக சமாளித்துக் கொள் கிறேன். காது 100க்கு 40 சதவிகிதத்தில் செவிடு. சப்தம் கேட்பதில்லை . கண்கள் கண்ணாடி போட்டாலும் 10 அல்லது 20 வரி - அதுவும் 12 பாயின்ட் எழுத்துக்கு மேல் படிக்க முடிவதில்லை. கண்களில் கண்ணீர் வந்து மறைத்து விடுகிறது. அடிக்கடி நெஞ்சு துடிப்பு அதிகமாகி களைப்பு வந்துவிடுகிறது.

ஹெர்னியா எனும் நோய் (குடல் இறக்கம்) இருப்பதில் உட்கார்ந்து இருக்கும்போது ஒரு இளநீர் அளவு பெறுமானம் குடல் இறங்கி வலி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நின்றால் கால்பந்து உறை அளவுக்கு பெருகி வலி கொடுக்கிறது" என்று தன் உடல்நிலை குறித்து அவர் எழுதிய வரிகள், நம்மை பதைபதைக்க வைக்கிறது. துயரத் தீயில் நம்மைத் தள்ளுகிறது! "பொதுவாழ்வில் இருந்து விலகி, ஓய்வெடுத்துக் கொண்டு நிம்மதியாய், பத்தியமாய் இருந்தால் ஒழிய இனி 4, 5 ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டேன் என்பது எனக்கு நன்றாய்த் தெரியும். அப்படி இருந்தாலும் ஒரு வேலையும் செய்யாமல் - செய்ய லாயக்கில்லாமல் உயிருடன் இருப்பதும் சரி, செய்து கொண்டே இருப்பதன் மூலம் சாவதும் சரி என்று கருதியே வேலை செய்கிறேன். நோய்வாய்ப்பட்டும் தொல்லைப்பட்டுக் கொண்டும் சுற்றுகிறேன்" என்று எழுதியவர். அதன்படி வாழ்ந்து காட்டியவர், நம் அய்யா பெரியார் அவர்கள் என்பதை நினைக்கும் போதே நம் விழிகள் வியப்பினால் விரிவடைகின்றன!

வாழ்வின் இறுதிக் காலத்திலும் சுற்றி விட்ட பம்பரமாய் சுழன்றோடி பணியாற்றியவர் பெரியார். உங்களை எல்லாம் சூத்திரர்களாக, இழி ஜாதி மக்களாக விட்டு விட்டு சாக மாட்டேன் என்று சூளுரைத்தவர் பெரியார். அதற்காக களம் கண்டு, தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டினை பிரகடனம் செய்து அறை கூவல் விட்டவர் நம் அய்யா பெரியார்!

டிசம்பர் 19 அன்று தியாகராயர் நகரில், இறுதி நிகழ்ச்சியாய் அமைந்துவிட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிட அய்யா பெரியார் மேடையில் அமர்ந்துள்ளார். அவருக்கு முன் உரையாற்றிய ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் முன் வருகிறார்.

அப்போது அறிவியல் வளர்ச்சியைப் பற்றி உரையாற்றும்போது, சோதனைக்குழாய் குழந்தை குறித்த   என்ற ஆங்கில வார இதழின் கட்டுரையை எடுத்து விளக்கினார் ஆசிரியர் வீரமணி, விந்து வங்கியில் சேமித்து வைக்கப்படும் விந்தின் மூலம் பத்து ஆண்டுகளுக்குப் பின்பும் குழந்தை பெற்றெடுக்கலாம் என்ற முறை இத்தாலியில் உள்ளது. இப்போது பம்பாயிலும் வந்துவிட்டது என்ற செய்தி யினை அப்போது குறிப்பிட்டார் ஆசிரியர் வீரமணி.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய அய்யா பெரியார் அவர்கள் ஆசிரியர் வீரமணி விளக்கிய அறிவியல் வளர்ச்சியை மகிழ்ச்சியுடன் பாராட்டினார், மனித அறிவின் சக்தி எல்லையற்றது. அதற்கு உதாரணம்தான் இந்த செய்தி, இதனைப் பற்றி கேள்விப்படும் போது, இது போன்ற செய்திகளை படிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. நம் நாட்டில் பாழாய்ப் போனவர்கள், பழைய புராணங்களை மூட நம்பிக்கைகளை கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்களே!" என்று அப்போது பேசினார் பெரியார்.

அந்த கூட்டத்தில் தொடர்ந்து பேசும் போது, "எனக்கு வயதாகிவிட்டதே என்று நான் இப்போதுதான் கவலைப்படுகிறேன். இளமையான வயதாக இருந்தால் நாம் மிகப் பெரிய தலைகீழ் புரட்சியை இம் மாதிரியான விஞ்ஞான வெற்றிச் சாதனை கள் மூலம் அடையலாமே" என்று அந்த நிலையிலும் தன் இலட்சிய வேட்கையை 'மரண சாசனமாக' வெளிப்படுத்தினார் பெரியார்!

"தமிழன் மானம் தவிடு பொடியாகையில் வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில் '' என்று துள்ளி மார்பு தட்டிச் சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று பார்ப்பனர் கோட்டையை நோக்கிய அருஞ்செயல் செய்வார் அல்லால் பெரியார் எவர்? நம் பெரியார் வாழ்கவே!"

என்ற புரட்சிக் கவிஞரின் பாடலுக்கு விளக்கமாய் களமாடிய வீர வேங்கைதான் நம் அய்யா பெரியார்!

தந்தை பெரியார் அவர்களின் 48 ஆவது நினைவுநாள் (24.12.2021) இன்று! பெரியார் உருவத்தினால் நம்முடன் இல்லை என்பது உண்மைதான்; ஆனால் உணர்வால் எங்கும் நிறைந்து இருக்கிறார் பெரியார்!

நாடாளுமன்றத்தில் "பெரியார் வாழ்க! திராவிடம் வெல்க! என்ற முழக்கம் கேட்கிறது. பெண்களின் திருமண வயது 21 என்ற முற்போக்குக் கொள்கை சட்ட வடிவம் பெறுகிறது. தளபதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.. அரசு சமூக நீதி நாளாக பெரியார் பிறந்த நாளை அறிவித்து சமத்துவ உறுதிமொழி ஏற்கச் செய்யும் சாதனையை நிகழ்த்தி உள்ளது. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமித்து, பெண்களையும் கோவில்களில் தேவாரம் - திருவாசகம் பாடும் ஓதுவார்களாக நியமித்து பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய அருஞ்சாதனையை சாதித்துக் காட்டி விட்டது தி.மு.. அரசு.

தந்தை பெரியார் மீது பாய்ந்த 124 என்னும் தேசத் துரோக சட்டம், மதிமுக தலைவர் வைகோ மீதும் பாய்ந்தது; பத்தாயிரம் ரூபாய் அபராதம், ஒரு ஆண்டு தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற விசாரணை என்னும் நாடகத்தை விரைவில் முடித்து வையுங்கள். எவ்வளவு கடுமையான தண்டனை, நீண்ட கால தண்டனை விதித்தால் உங்கள் மனம் மகிழுமோ, அந்த அளவுக்கு கடுமையான தண்டனை கொடுங்கள்" என்று நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பெரியாரின் பேரன் நான். பெரியாரின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன். எவ்வளவு கடுமையான தண்டனை வேண்டுமானாலும் வழங்குங்கள் என்று நீதிமன்றத்தில் உணர்ச்சி முழக்கமிட்டவர்  தலைவர் வைகோ! இத்தகைய பெருமைமிகு பெரியாரின் பேரனாம் வைகோ அவர்களுக்கு பெரியார் ஒளி' எனும் விருது அளித்து பாராட்டி சிறப்பு செய்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி! திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில், நூலகம், அறிவியல் கோளரங்கம், காட்சி அரங்கம் - சிறுவர் பூங்கா - திராவிடர் இயக்க வரலாறு கூறும் ஒலி - ஒளிக்காட்சி ஆகியவைகளோடு 40 அடி பீடத்தில் 35 அடி உயரத்தில் கம்பீரமாய் எழுந்து நிற்கும் பெரியார் சிலை இவைகளுடன் 100 கோடி ரூபாய் திட்டத்தில் பெரியார் உலகம் அமைக்கும் பணியில் திராவிடர் கழகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தின் நீட்சியாய் செயல்பட்டுவரும் தளபதி மு..ஸ்டாலின் தலைமையிலான பொற்கால அரசு, பெரியார் உலகத்திற்கு அனுமதியும், அங்கீகாரமும் அளித்துவிட்டது. தத்துவங்கள் மூலம் நம்மோடு வாழ்கிறார் பெரியார்: நம்மை வாழ வைக்கிறார் பெரியார் என்ற உண்மையை பெரியார் நினைவு நாளில் உலகுக்கு எடுத்துரைப்போம்! வாழ்க பெரியார்! வெல்க அவர்தம் இலட்சியங்கள்!

நன்றி: 'சங்கொலி' 31.12.2021

No comments:

Post a Comment