நோய்கள் பெருகினாலும், விஞ்ஞானம் அவற்றை வெல்லும்; தோழர்கள் உடல்நலம் பேணுவதில் அக்கறை செலுத்துங்கள்! பருவம் பாராது பணியாற்றும் நல்லாட்சிக்குப் பாராட்டுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

நோய்கள் பெருகினாலும், விஞ்ஞானம் அவற்றை வெல்லும்; தோழர்கள் உடல்நலம் பேணுவதில் அக்கறை செலுத்துங்கள்! பருவம் பாராது பணியாற்றும் நல்லாட்சிக்குப் பாராட்டுகள்!

      ஏடுகளைப் பரப்புதல், ஆய்வரங்கம் நடத்துதல் உள்ளிட்ட பணிகளை கழகத் தோழர்களே முடுக்கி விடுவீர்!

‘‘பெரியாரை உலக மயமாக்குவோம்''- அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!



புத்தாண்டில், மக்களை அச்சுறுத்தும் நோய்களை விரட்டி, புது வாழ்வு பெறுவோம் - இயக்க நூல்களைப் பரப்புதல் - ஆய்வு அரங்குகளை நடத்துவோம் - பெரியாரை உலக மயமாக்குவோம் - அனைவருக்கும் புத் தாண்டு வாழ்த்துகள் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (1.1.2022) புத்தாண்டு பிறந்துவிட்டது.-

காலமும், அலைகளும் யாருக்காகவும் காத் திருப்பதில்லை.'

அறிவியல் வளர்ச்சி ஒருபுறம் -

நோய்த் தொற்று இன்னொருபுறம்!

ஒவ்வொரு ஆண்டிலும் மனிதகுலம் மாறுபட்ட அனுபவங்களைச் சந்திக்கவே செய்கிறது.

அறிவியல் வளர்ச்சி பெருகுவதைப்போலவே, மனிதர்களுக்குத் தொற்று நோயும் பல வடிவங்களில் பெருகி, சோதனைக்கு ஆளாக்குகிறது.

இதற்கு முன்பெல்லாம் பஞ்சம், பசி, பட்டினியால் மனிதர்கள் மாண்டார்கள்; அவை பெரிதும் மாறி, இப்பொழுது  புதுப்புது வகை தொற்று நோய்க் கிருமிகளால் தாக்குண்டு பேரிழப்பிற்கு ஆளாகும் அவலம் உள்ளது.

வளர்ந்த நாடுகள், வளராத நாடுகள் என்ற பிரிவினை முறை இப்போது மாறி, அதிகமான தொற்று நோய்க்கு ஆளாகும் நாடுகள், குறைவான அளவுக்குப் பாதிக்கப்படும் நாடுகள் என்ற புதுவகை பிரித்தல் புகுகிறது!

மனிதனின் பகுத்தறிவும், அப்பகுத்தறிவால் ஏற் படும் பயன்மிகு சிந்தனைகளும், புதுப்புது கண்டு பிடிப்புகளால், நலவாழ்வு பாதுகாப்பும் பெருகுகிறது - விஞ்ஞானம் வெல்லும்!

இந்த நோய்த் தொற்று பரவலைப்பற்றி பீதி அடையத் தேவையில்லை - உச்சக்கட்டம் தாண்டி நோய்க் கிருமி வலுவிழந்து நம்முன் வாழ்ந்தாலும், பாதிப்பு ஏற்படாது என்றும் மருத்துவ நிபுணர்கள்  கூறுகிறார்கள். துணிவுடன் - நம்பிக்கையுடன் எதிர் கொள்வோம்!

தமிழ்நாட்டில் 10 ஆண்டு இருண்ட காலத்திற்குப் பின் உண்மையான திராவிடம் வென்ற ஆட்சி - ஒப்பற்ற முதலமைச்சர்  - விடியல் வீரர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் உருவான ஏழு மாதங்களில், மற்றவர்கள் ஏழு ஆண்டுகளில் சாதிக்க முடிவதைவிட, கூடுதலாக விவேகமும், வேகமும் கலந்த சாதனைகள் கொள்கை லட்சியப் பாதை ஆட்சியாகிறது!

விடியல் ஆட்சியாக

வீறுநடை போடுகிறது!

'குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்ற குறளுக் கேற்ப நேற்றுமுன்தினம் (30.12.2021) நள்ளிரவு 12 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் சென்று,  , மழை, வெள்ளத்தால் தேங்கிய மழைநீர் வெள்ளம் வெளியேற்றம் முதல் - அதற்கு முன் மாலை, இரவு திருச்சி நிகழ்ச்சி முடித்துத் திரும்பி, தூங்காமை, துணிவுடைமை என்பதை அப்பட்டமாக (Literally) கடைப் பிடித்து 'திராவிட மாடல்' ஆட்சியை சிறப்புற நடத்துகிறார்!

நிதிப்பற்றாக்குறைமூலம் இவ்வாட்சியைத் திண றச் செய்ய சில பிற்போக்குச் சக்திகளும், நேர்வழி ஜனநாயகத்தின்மூலம் ஆட்சிக்கு வர இயலாத வர்களும் இப்படி குறுக்குசால் ஓட்டினாலும்கூட, மக்களின் மகத்தான பேராதரவு என்ற வெண்கொற்றக் குடையின்கீழ் மு..ஸ்டாலின் ஆட்சி - விடியல் ஆட்சியாக வீறுநடை போடுகிறது!

தடைக்கற்களைத் தாண்டி வரலாறு படைக்கிறது - சாமானிய மக்களுக்கான ஆட்சி என்று சரித்திரம் எழுதிடச் செய்வார் இவர்; காரணம், அவர் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் முறையான பாதையில், சரியான வகையில் ஆட்சித் தேரை செலுத்துகிறார்!

நமது பணி - தொற்றிலிருந்து நம்மையும், மக் களையும் பாதுகாப்பதும், பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி - பாலியல் நீதிப் பிரச்சாரத்தினை ஒரு தொடர் திட்டங்களோடு இடையறாமல்  - தொய் வின்றி நடத்திட ஒவ்வொரு சிற்றூர், பேரூர், பெரு நகரம் அனைத்திலும், காணொலி, அரங்க ஏற்பாடுகள் என கட்டுப்பாட்டுடன் சூழ்நிலை அனுமதிக்கும் அளவுக்குப் பணி செய்வதில் குன்றா ஆர்வத்துடனும், குறையா உழைப்புடனும் செயல் வீரர், வீராங் கனைகளாக செயலில் இறங்கவேண்டும்.

இளைஞர்களும், மகளிரும் புத்தாக்கம் பெற்று, பெரியாரை உலக மயமாக்கி வர கடுமையாக உழைக்க முன்வந்திருப்பது நமக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகிறது!

மேற்கொள்ளப்பட வேண்டிய இயக்கப் பணி

புத்தகங்களைப்பற்றிய ஆய்வு, பரப்புதல், நமது பகுத்தறிவு ஏடுகளை, இன உணர்வு ஏடுகளை மனிதநேயத்தில் கவலை உள்ள நாம், தவறாது, அலுப்பு சலிப்பின்றி நாளும் பரப்பவேண்டும்.

ஒவ்வொரு நாளும் படுக்கைக்குப் போகும்போது இயக்கப் பணி - நாட்டுப் பணி இன்று என்ன செய் தோம் என்று கரிசனத்துடன் மனதிற்குள் கேட்டு கடமையாற்றுங்கள்!

ஒவ்வொரு தோழரும், குடும்ப உறுப்பினர்களும் உடல்நலம் பேணுவதில் மிகுந்த அக்கறை காட் டுங்கள்.

நடுத்தர வயதுள்ள நம் கழக செயல் வீரச் சிங்கங்கள் திடீர் மாரடைப்பு போன்ற நோய்களுக்குப் பலியான செய்தி நம்மை வாட்டுகிறது.

அலட்சியம் வேண்டாம் - மருத்துவப் பரி சோதனை - கட்டுப்பாடான வாழ்க்கை முறை - ஒழுங்கும், ஒழுக்கமும் ஒன்றை ஒன்று போட்டியிட்டு முந்துறும் முத்திரைப் பதிக்கும் வாழ்க்கை முறையை உங்கள் முதல் உடைமையாக ஆக்கிக் கொள் ளுங்கள்!

''பெரியார் உலக மயம்'' ஆக்குவோம்!

தோழர்களே, உங்களை நம்பி குருதிக் குடும்பமும், கொள்கைக் குடும்பமும் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்!

புத்தாண்டில் புது உறுதியுடன் கடமையாற்ற ஆயத்தமாவீர்! அணி திரள்வீர் - அடக்கத்தோடு, ஆர்ப்பாட்டமின்றி!

தன்னை வென்று, தரணியையும் வென்று காட்டுங்கள்!

வெற்றி நமதே!

உலகு பெரியார் மயம் -

பெரியார் உலக மயம்!  ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பதே 2022 இல் நம்முன் உள்ள ஒரே முக்கியக் கடமை என்பதை மறவாதீர்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

சென்னை      தலைவர்,

1.1.2022               திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment