பொ.நாகராஜன்
சென்னை.
கி. வீரமணி - பெரியார் சுயமரியாதைப்
பிரச்சார நிறுவன வெளியீடு
* ஈரோடும் காஞ்சியும் தமிழகத்தின் இரண்டு ஊர்கள்! திராவிடக் கொள்கைகளுக்கோ அவை இரண்டு வேர்கள்! பெரியாரும் அண்ணாவும் பிறந்த ஊர்கள். தந்தையும் தனயனும் தடம்பதித்த ஊர்கள். அதனால் அவைகளுக்கு வரலாற்றில் நிலையான பேர்கள். அந்த இரண்டு ஊர்களையும் இணைத்து, அண்ணாவின் நினைவுநாளில் (03.02.2009) சென்னை பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பே இந்த நூல்.
* அண்ணாவை அருகிலிருந்து கவனித்து வாழ்ந்த ஆசிரியர், நிறைய தகவல்களை தந்துள்ளார். அதில் ஒரு முக்கியமான செய்தியை பதிவு செய்துள்ளார்.
* அண்ணா மார்ச் 1967இல் தமிழக முதல்வராகி விடுகிறார். அந்த ஆண்டு செப்டம்பர் 17இல் தந்தை பெரியாரின் பிறந்த நாள் மலருக்காக, அண்ணா விடமிருந்து சிறப்பு கட்டுரையை வேண்டி அவரை ஆசிரியர் கி. வீரமணி சந்திக்கிறார். அண்ணாவும் தனது அரசு, கட்சிப் பணிகளுக்கிடையே கட்டாயமாக எழுதி தர சம்மதிக்கிறார்.
* அதன்படி, அண்ணா அவர்கள் அருமையான கட்டுரையொன்றை எழுதி தருகிறார். அதன் தலைப்பு - அந்த வசந்தம். அந்த வசந்தத்தின் வாசமும், பாசமும் அண்ணாவின் அழகிய வரிகளில்
* " நான் இன்றைக்கு கவலையோடு இருக்கின்றேன். பதவி பொறுப்புகளினால். ஆனால் நான் மகிழ்வாக இருந்த காலம் எது? என்னுடைய வாழ்வில் வசந்த காலம் என்று ஒன்று இருக்கிறதென்றால், அது நான் பெரியாருடன் இருந்து தொண்டு செய்தேனே! ..... பெரியாருடன் சென்று எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்தேனே! .... அதுதான் என் வாழ்வின் வசந்த காலம்! ". ஈரோடும் காஞ்சியும் இணைந்த காலம் வசந்த காலம்!
* அண்ணா வேறொரு சமயத்தில் இவ்வாறு எழுதினார், " நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்! "..என்று. தந்தை பெரியாரின் முதலான, முக்கியமான சீடராக இருந்து, பிரிந்து, தனிக்கட்சி துவங்கி, போராடி, தேர்தலில் வென்று, ஆட்சியைப் பிடித்து, அரியணையில் அமர்ந்த பின்பு, "இந்த ஆட்சியே பெரியார்க்கு சமர்ப்பணம்" என்று சட்டசபையில் பெருமைப்பட்டு சொன்னாரே, அந்த அண்ணாதான் சுயமரியாதை இயக்கத்தின் சுடரொளி!
● பெரியார் பற்றி அண்ணா வியந்து சொல்கிறார், "இரண்டு நூற்றாண்டுகள் பாடுபட்டு உண்டாக்க வேண்டிய புரட்சியை, இருபது ஆண்டுகளில் அவர் சாதித்து கொடுத்ததால் தான், நமக்கெல்லாம் எளிதாக இருக்கிறது"
● மார்க்சிய கொள்கைகளை முதன் முதலில் செயல் படுத்தினார் தோழர் லெனின்! பெரியாரிய கொள்கைகளை முதன் முதலில் செயல் படுத்தினார் அறிஞர் அண்ணா! அவைகளை நினைவுக்கு கொண்டு வரும் நல்ல முயற்சியே இந்த நூல்.
- தா. பாண்டியன் - திராவிடர் கழக வெளியீடு.
சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார்
* தோழர் தா. பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராய் விளங்கியவர். சிறந்த பேச்சாளர். எழுச்சி மிக்க எழுத்தாளர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். நிறைய புத்தகங்களை எழுதியுள்ளவர்.
* மதுரைக்கு அருகே உசிலம்பட்டியில் 25 செப்டம்பர் 1932இல் பிறந்தவர். நீண்ட நெடிய அரசியல் பயணம் செய்து கடந்த 26 பிப்ரவரி 2021இல் மறைந்தவர். கம்யூனிச கட்சி தலைவர்களிலேயே திராவிடர் இயக்கம் மீதும் பெரியார் மீதும் மிகுந்த நம்பிக்கையும் தோழமையும் கொண்டவர்.
* தோழர் தா. பாண்டியன், தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவின் போது ஈரோட்டில் அவர் ஆற்றிய உரையை இந்த நூல் வடிவமாக கொண்டு வந்துள்ளார்கள். இந்த நூல் பல லட்சம் வாசகர்களை சென்றடைந்துள்ளது என்ற செய்தி, தா. பாண்டியனின் பெருமைக்கு மேலும் சிறப்பை சேர்க்கின்றது.
அவரின் சொற்பொழிவுகளிலிருந்து சில முத்துக்கள்:
* "இன்றும் பலர் கஷ்டங்கள் வருகின்றபோது சொல்கின்றார்கள் - இதனைத் தட்டி கேட்க பெரியார் இல்லாமல் போய்விட்டாரே என்று! ... ஏன்.. அவர் தான் கேட்க வேண்டுமா..நீங்கள் ஏன் கேட்கக் கூடாது?" என்று நாம் திருப்பிக் கேட்டால் - நாம் சொல்லி யார் சார் கேட்பார்கள்? என நம்மிடமே திருப்பி கேட்கின்றார்கள்.
* அவர்களுக்கு சொல்வேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு, நாம் சொன்னால் யார் கேட்பார் என்று பெரியார் அவர்கள் ஒதுங்கி நின்றிருந்தால் - இன்று பேச பலருக்கு நா எழுந்திருக்காது. எழுதுவதற்காக பலருக்கு பேனா துணிந்திருக்காது ".......
* " பெரியார் செய்ததை எந்த பல்கலைக்கழகம் செய்தது? எந்த விஞ்ஞானி செய்தார்? இந்த சமுதாயத்தின் மீது அன்பு கொண்ட ஒரு மனிதனைத் தவிர வேறு யாரும் செய்ய மாட்டார்கள். அதைத்தான் பெரியார் செய்தார்.
* அன்று தமிழனுக்கு எழுதப் படிக்க தெரியாது. புத்தகங்களை காசு கொடுத்து வாங்க மாட்டான். இதற்காக நாம் சும்மா இருந்தால் கெடுதல் என்று எண்ணி, வாயிலேயே கருத்துப் பிரச்சாரம் செய்து மக்களது அறியாமையை போக்குவதற்கு என்று மேடைக் கலைக்கே முதல் மேடை போட்டு தந்தவர் தமிழகத்தில் பெரியார் தான். ".....
* " முற்போக்கு இயக்கங்களில் உள்ள பலரும் கூட - பெரியார் பார்ப்பனர்களை எதிர்த்தார்! பார்ப்பனர்களை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்? மற்ற ஜாதிக் காரர்கள் வேற்றுமை காட்டவில்லையா? என்று கேட்கின்றார்கள்.... நான், சோஷியலிசத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர் களுக்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
* வெற்றிலை பாக்கு கடைக்காரர்கள் சுரண்டு கிறார்களா? சுரண்டுகிறார்கள்! ஓட்டல்காரர் சுரண் டுகிறாரா? சுரண்டுகிறார்! மளிகைக்காரர், கைத்தறி, விசைத்தறி, நிலம் வைத்திருப்பவர், டிரான்ஸ்போர்ட் முதலாளி, வட்டி கடைக்காரர்கள், டிவிஎஸ் கம்பெனி என எல்லோரும் சுரண்டுகிறார்கள்.
* கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும், சோஷியலிச கொள்கைவாதிகளும் பின் ஏன் ஏக போக முதலாளி சுரண்டலை சொல்லி எதிர்க்கிறார்கள்? நீங்கள் சிந்திக்க வேண்டும்!
* எல்லோரும் சுரண்டுகிறார்கள்! ஆனால், உச்ச முதலாளி சுரண்டலுக்கே முக்கியத்துவம் தந்து, அதை தாக்கினால் உச்சம் சரியும்! மற்றதெல்லாம் பின்னே சரியும்! அதே போல, ஜாதியில் எது ஏக போகமாக இருக்கின்றதோ, அதை தாக்க வேண்டியது அவசியம். அது சரிந்தால் மற்றதும் சரியும். அதைத் தான் பெரியார் செய்தார் "
* தோழர் தா. பாண்டியனின் இந்த அருமையான வாதங்கள், ஆழமான சிந்தனைகள் பெரியாரின் கொள்கைகளுக்கு உரமாக அமைகிறது. அதை இந்த நூலில் அறிய முடிகின்றது!
No comments:
Post a Comment