ராஜன் குறை கிருஷ்ணன் பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடில்லி
நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்றி அதை ஆளுநரி டம் அனுப்பி மூன்று மாதங்களுக்கு மேலாயிற்று. நீட் தேர்வு என்பது கல்வி தொடர்பானது என்பதால் ஒன்றிய அரசாங்கம், மாநில அரசு இரண்டுக்கும் சட்டம் இயற்றும் உரிமை உள்ளது. ஏனெனில் கல்வி ஒன்றிய அரசாங்கம், மாநில அரசு ஆகிய இரண்டும் சேர்ந்து நிர்வகிக்கும் துறை. எனவே மாநில அரசு இயற்றியுள்ள சட்டத்துக்கு ஒன்றிய அரசின் சார்பாக குடியரசுத் தலைவர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒன்றிய அரசில் சட்ட அமைச்சகம் இருக்கிறது, அதில் போதுமான சட்ட வல்லுநர்கள் உள்ளார்கள், குடியர சுத் தலைவருக்கும் நாட்டின் சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசிக்கும் வசதி வாய்ப்புகளும், உரிமையும் உள்ளது. அப்படியிருக்கையில் ஆளுநருக்கு இந்தச் சட்டத்தை ஆராய வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்புவதுதான் அவர் செய்ய வேண்டிய ஒரே பணி.
ஆனால் அந்தப் பணியைச் செய்யாமல் அவர் காலம் கடத்துகிறார். இப்படிச் செய்யும்போது மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி என்பது காணாமல் போய், ஆளுநரின் எதேச்சதிகார ஆட்சி தொடங்குகிறது. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடை யாது. அவர் ஒன்றிய அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயற்றிய சட்டத்தை தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் கையாளுவது என்பது மக்களை நேரடியாக அவமதிப் பதாகத்தான் பொருள்படும். ஆனால் அவராக இப்படிச் செயல்படுவார் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். ஒன்றிய அரசாங்கத்தின் விருப்பத்தின் பேரில்தான் அவர் இவ்விதம் நடந்துகொள்கிறார் என்பதே சாத்தியம். இதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறது பாரதிய ஜனதா கட்சி அரசு? அதுதான் நம்முன் உள்ள கேள்வி.
பாரதிய ஜனதா கட்சி: போகாத ஊருக்கு வழி தேடுதல்
இந்த நீட் பிரச்சினையில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்திருக்கும். அது தமிழ்நாடு மக்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்பது தான். ஏனெனில் அவர்கள் மாநிலத்தின் தனித்து வத்தை நம்புகிறார்கள். அரசியல் விழிப்புணர்வு பெற்றவர் களாக இருக்கிறார்கள். அவர்கள் கூட்டணி கட்சியான அஇஅதிமுககூட நீட் தேர்விலிருந்து தமி ழகத்துக்கு விலக்கு வேண்டும் என்றுதான் கூறுகிறது. அவர்கள் ஆட்சியிலிருக்கும்போதும் பாஜக விலக்கு அளிக்க வில்லை. இப்போது அவர்கள் பாஜக அடிமைகள் என்று அழைக்கப்பட்டு ஆட்சியிழந்த பிறகும், பாஜக-வை எதிர்க்கும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகும் விலக்கு அளிக்க மறுக்கிறது. ஜல்லிக் கட்டுக்கு நாடா ளுமன்றத்தில் சட்டம் இயற்றி விலக்கு அளித்தது போல, இதற்கும் ஒரு தனிச்சட்டம் இயற்றி, தமிழ் நாட்டின் சட்டத்தை அங்கீகரித்து, நீட் தேர்விலி ருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்விதம் செய் தால் தமிழ்நாடு மக்களுக்கு பாரதிய ஜனதாவின் மீது இருக் கும் வெறுப்பு சிறிதாவது குறையும். ஆனால் பாஜக அதை விரும்புவதாகத் தெரியவில்லை. மக்கள் தங் களை வெறுக்க வேண்டும் என்று நினைக்கிறது. இது தான் இந்திய அரசியலில் இன்று மிகப்பெரிய புதிர்.
பாரதிய ஜனதா கட்சி அடிப்படையில் ஒரு பாசிச கனவு கொண்ட கட்சி. அது பெரும்பாலான இந்திய மக்களை “இந்து” என்ற ஒற்றை மத அடையாளத்தில் திரட்டி, இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற ஆசையைக் கொண்டது. அதைத் தான் இந்துத்துவா என்று கூறுவார்கள். இந்த கனவு நிறைவேற வேண்டுமானால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். அதுதான் அவர்கள் போக விரும்பும் ஊருக்கு வழி.
ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், போகாத ஊருக்கு வழி தேடுகிறார்கள். பஞ்சாபில் விவசாயிகள் விரும்பாத சட்டங்களை அவர்கள் மீது திணிக்கிறார்கள். அந்த விவசாயிகள் திரண்டு வந்து உலகமே வியக்கும் வண்ணம் ஓராண்டுக் காலம் தலைநகருக்கு வெளியே தங்கியிருந்து போராடுகிறார்கள். பிரதமர் அவர்களைச் சந்தித்துப் பேசவும் மறுக்கிறார். பல விவசாயிகள் குளிரிலும், பல நெருக்கடிகளிலும் போராட்டக்களத்தில் மரணிக் கிறார்கள். பாஜக அரசும், பிரதமரும் கவலையே படாமல் இருக்கிறார்கள். ஒன்றிய அமைச்சரின் மகன் போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொல்கிறார். பிரதமர் அந்த அமைச்சரை பதவி விலகக்கூட சொல்லவில்லை. என்ன செய்தும் போராட்டம் அடங்காததால் சட்டத்தைத் திரும்பப் பெறுகிறார் பிரதமர். அதைக்கூட அவர்களிடம் சென்று பேசாமல், தொலைக்காட்சியில் தேச மக்களிடம் கூறுகிறார்.
இத்தனையும் செய்துவிட்டு பஞ்சாப் மாநிலத் துக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்கிறார். அதுவும் சாலை மார்க்கமாகச் செல்கிறார். அங்கே போராடும் விவசாயிகள் காரை மறிக்கிறார்கள். வெகுண்டு போய் தன் பயணத்தை நிறுத்திக்கொண்டு தலைநகர் திரும்பு கிறார். பஞ்சாப் மக்களின், குறிப்பாக சீக்கியர்களின் ஆதரவு என்பது இனி இரண்டு தலைமுறைக்கு பாரதிய ஜனதா கட்சிக்குக் கிடைக்காது.
அதேபோலத்தான் தமிழகத்திலும் அவர்கள் முயற்சி இருக்கிறது. தமிழில் சில வார்த்தைகள் பேசுவது, திருக்குறளை தப்புத் தப்பாக உச்சரித்து உயிரை எடுப்பது ஆகியவற்றின் மூலம் தமிழ் மக்க ளின் மனங்களைக் கவரலாம் என்று பிரதமர் நினைக் கிறாரா என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தக்க நேரத் தில் முடிவு எடுக்காமல் இழுத்தடித்து, மக்கள் கோப மெல்லாம் பாரதிய ஜனதா அரசின் மீது குவிந்தபிறகு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் சட்டத்தை இயற்றினார். ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகனாக மாற்ற நினைத்தார். அதனால் ஒரு ஓட்டு கூட தமிழகத்தில் ஓபிஎஸ்ஸுக்கோ, பாஜகவுக்கோ கிடைக்கவில்லை. ஏனெனில் மக்கள் அதை தங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியென்றுதான் நினைக்கிறார்கள்.
இப்போது நீட் விஷயத்தில் மீண்டும் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் போல ஒரு புதிய கொதி நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அப்படி நடந்தால் அது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த காலத்திலும் ஒரு முனிசிபல் வார்டில்கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலையைத்தான் ஏற்படுத்தும். அதன் மூலம் அவர்கள் எப்படி இந்தியாவை ஒரு முகப்படுத்தி ஆட்சி செய்வார்கள்?
இந்தியாவை சர்வாதிகாரத்தால் ஆள முடியுமா?
இந்தியாவை சர்வாதிகாரத்தால் ஆள முடியாது என்பதே வரலாறு கற்றுத்தரும் பாடம். ஏனெனில் இந்தியாவில் எந்த பேரரசும் நிலைத்து நீடித்ததில்லை. இன்றைய இந்திய குடியரசின் பரப்பை எந்த ஒரு பேரரசனும் ஆண்டதில்லை. அப்படி சில பேரரசுகள் கோலோச்சிய காலத்திலும், பல்வேறு குறுநில மன்னர் களின் கூட்டமைப்பாகத்தான் அவை இருந்தன. ஓயாமல் போரிட்டுத்தான் கிளர்ச்சிகளை அடக்கி வந்தன. இந்திய மக்கள் தொகுதிகளை அடக்கியாள் வது எளிது என்பது வரலாற்றை சரியாக வாசிக்காத வர்களின் அபத்தக் கருத்து. இங்கே ஊருக்கு ஊர் காவல் தெய்வங்கள் இறையாண்மை பெற்றவை. ஒருபோதும் இறையாண்மையை ஒரு புள்ளியில் குவிக்க முடியாது.
பாரதிய ஜனதா கட்சியோ இந்தியாவை ஒருமைப் படுத்தி, அதை வல்லரசாக்க நினைக்கிறது. அப்போது அது என்ன செய்ய வேண்டும்? அனைத்து மக்களும் தங்களை ஆதரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் பாருங்கள்... அந்தக் கட்சி அதற்கு நேர்மாறாக அனைத்து மாநிலங் களிலும் மக்கள் வெறுப்பை சம்பாதிப்பதிலேயே கவனமாக இருக்கிறது.
மக்களின் ஆதரவையும் பெற முடியாது, சர்வாதி காரமும் நடக்காது என்றால் பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ்ஸும் எப்படி இந்தியாவை வலிமையான நாடாக மாற்றும்? அவர்களால் அதை செய்யவே முடியாது என்பதுதான் நிதர்சனம். மாறாக இந்தியா வைப் பெரும் உள் நாட்டுக் குழப்பங்கள், போராட் டங்கள் என்று அழிவுப் பாதைக்குத்தான் கொண்டு போக முடியும்.
ஒரு கூட்டுக் குடும்பம் தொடர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அனைவரும் அவரவருக்கு பிடித்த வகையில் உண வருந்தவும், உடை உடுத்தவும், தொழில் புரியவும் அனுமதிக்க வேண்டும். ஆனால் யாராவது ஒரு பெரியவர் நான் சொல்லும்படிதான் அனைவரும் உண்ண வேண்டும், உடுக்க வேண்டும், தொழில் புரிய வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தினால் என்னவாகும்? எல்லாரும் பிய்த்துக்கொண்டு தனிக் குடித்தனம் போய்விடுவார்கள்.
இது கூட தெரியாமலா ஒரு கட்சி இருக்கும்? இந்த பாரதிய ஜனதா கட்சியையும், ஆர்எஸ்எஸ்ஸையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
பாரதிய ஜனதாவின் இன்றைய நிலை என்ன?
பத்தாண்டுகள் நரேந்திர மோடி ஆட்சி நடந்து விடும். அதிலும் கடந்த அய்ந்தாண்டுகளாக முதல் முறையாக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி பெரிதும் பலவீனப்பட்டுள்ளது. காந்தி குடும்பத்தின் பரம்பரை கோட்டையான அமேதி தொகுதியிலேயே சென்ற தேர்தலில் ராகுல் காந்தியை பாரதிய ஜனதா கட்சி தோற்கடித்துவிட்டது. இவ்வளவெல்லாம் செய்த பிறகு அந்தக் கட்சி எப்படி நாடு முழுவதும் வலு வடைந்து இருக்க வேண்டும்? அதுதான் சுத்தமாக இல்லை. நாட்டின் எந்த மாநிலத்திலுமே, குஜராத் உட்பட, பாரதிய ஜனதா கட்சி கடும் போட்டியின்றி தேர்தலில் வென்றுவிடும் என்ற நிலையே இல்லை.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு முக்கிய நகரங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இல்லை. கருநாடகா, மத்தியப்பிரதேசம் ஆகிய இரண்டிலும் தேர்தலில் தோற்ற பிறகு குதிரை பேரம் நடத்தி ஆட்சியைப் பிடித்துள்ளது. பீகாரில் நிதிஷ் குமார் முதுகில் சவாரி செய்கிறது. மகாராஷ்டிராவிலும், மேற்கு வங்கத்திலும் ஏகப்பட்ட ஆள்பிடிப்பு வேலை கள் செய்தும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. கேரளத்திலும், தமிழ்நாட்டிலும், பஞ்சாபிலும் கால் வைக்கவே வழியில்லை. ஹரியானாவில் கூட்டணி ஆட்சி. பெரிய மாநிலங்களில் குஜராத், உத்தரப்பிர தேசம் ஆகிய இரண்டு மாநிலங்கள்தான் கடைசியில் மிஞ்சுகின்றன. அதில் உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத், மோடி, அமித் ஷா எல்லோரும் சேர்ந்து அகிலேஷ் யாதவை சமாளித்து விடுவார்களா என்பது கேள்வியாக உள்ளது.
இதற்கெல்லாம் என்ன காரணம்? பாரதிய ஜனதா கட்சி கார்ப்பரேட் நலன்களுக்காக ஆட்சி செய்கிறது. மக்கள் நலன்களைப் புறக்கணிக்கிறது. மக்களை இந்து - முஸ்லிம் என்று பிரிட்டிஷ்காரர்கள் போல பிரித் தாளும் சூழ்ச்சி செய்துவிடலாம் என்று நினைக்கிறது.
இதில் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவென் றால், முஸ்லிம்களையும், பாகிஸ்தானையும் காட்டி வெறுப்பரசியல் செய்வதுதான் பாரதிய ஜனதாவின் வெற்றிக்கான ஒரே சூத்திரம். ஆனால் பாருங்கள், உள்ளபடியே தேசம் இரண்டாகப் பிரிந்தபோது சரி பாதியாக பிரிந்த மாநிலங்கள் பஞ்சாபும், வங்காளமும். அந்த இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி வேரூன்ற முடியவில்லை.
இந்த நிலையில் ஏன் பாரதிய ஜனதா ஒன்றிய அரசாங்கத்தை (Union Government) ஒற்றை அரசாக (Unitary State) மாற்றி இறையாண்மையில் மாநிலங்களின் பங்கினை மறுக்க நினைக்கிறது? நீட் தேர்வுக்கு விலக்களிப்பது தன் போக்கை மாற்றிக் கொள்ள அதற்குக் கிடைக்கும் நல்ல சந்தர்ப்பம் எனலாம்.
நன்றி: மின்னம்பலம் இணையம், 10.1.2022
No comments:
Post a Comment