இரு பெரும் பத்திரிகையாளர்கள் - மகத்தான ஆளுமைகளிலும் முத்திரை பதித்தவர்கள் மறை வெய்தியது பத்திரிகை உலகிற்குப் பேரிழப்பாகும்.
'ஹிந்து' - குழுமத்தின், ஆங் கில மாதமிருமுறை வெளிவரும் 'ப்ரண்ட் லைன்' ('Front Line') ஏட்டிலும், 'ஹிந்து' ஏட்டிலும் நீண்ட காலம் பணியாற்றி - அண்மையில் திருச்சியில் (ஓய்வுக்குப்பின்) வாழ்ந்து வந்த நண்பர் எஸ்.துரைராஜ் (வயது 71) அவர்கள் காலமானார் (15.1.2022) என்பது வருத்தத்திற்குரியதாகும்.
பத்திரிகையாளர் துரைராஜ் அவர்கள் எந்தப் பிரச்சி னையையும் நுணுக்கமாக, தனது நுண்ணறிவு ஆற்றலோடு விவாதித்து - பல பேட்டிகள் எடுத்து, உண்மைச் செய்தி களை உலாவரும்படிச் செய்த ஒப்பற்ற மூத்த செய்தி யாளராவார்.
'விடுதலை'யின்பால் மிகுந்த பாசமும், பற்றும் உடையவர்; அமைதியும் ஆழமும் கொண்டவர். 'விடுதலை இராதா'வுடன் நெருக்கமாக இருப்பார்; நம்மிடம் பல்வேறு முக்கியச் செய்திகளை பரிமாறிக் கொள்வார். அவரது கருத்தில் சமரசம் காணாது, அதே நேரத்தில் பக்குவமாக எதையும் எடுத்துரைப்பார் (இடித் துரைக்கும் செய்தி - பேட்டி எடுப்பதில் கைதேர்ந்தவர்).
அவரது மறைவு பத்திரிகை உலகத்திற்கு, அவரது குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல; நமக்கும் பெரும் இழப்பாகும்.
அவரை இழந்து வருந்தும் அவரது துணைவியார், மகள் மற்றும் உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
அதுபோலவே கனடாவில் தனது மகன் வீட்டில் கடந்த ஞாயிறு (16.1.2021) அன்று மறைந்த மூத்த பத்திரிகையாளர் மாமனிதர் சாம் இராஜப்பா (வயது 82)அவர்கள் மறைவும் நம்மை துயரத் திற்குள்ளாக்கும் நிகழ்வு ஆகும்.
இன்று (18.1.2022) வந்துள்ள 'இந்து 'தமிழ் திசை' நாளேட்டில் மார்க்சிய - பெரியாரியல் அறிஞர் எஸ்.வி. இராஜதுரை அவர்கள் எழுதிய இரங்கல் கட்டுரையில் சிறப்பாக சுட்டிக்காட்டியபடி 'அவர் ஒரு பெரும் இதழியல் ஆளுமை' என்பது பொருத்தமான பாராட்டாகும்.
மறைந்த சாம் இராஜப்பா அவர்கள் துணிச்சலுடன், ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமலே எதையும் ஆராய்ந்து எழுதி அம்பலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தி, அதற்கு நீதி கிடைக்க இறுதி வரைப் போராடி வெற்றி கண்டவர்.
'மனித உரிமைக் காவலர்' என்றே சொல்ல வேண்டும். வடபுலத்து நாளேடுகளான 'ஸ்டேட்ஸ்மேன்', 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஏடுகளில் செய்தியாளராக, கட்டுரையாளராக இருந்த அவர், ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை களிலும் மிகுந்த ஆர்வம் காட்டியவர்.
தந்தை பெரியார் மீதும். திராவிட இயக்கத்தின் மீதும் மிகுந்த பற்று உள்ளவர். நம்மிடம் பல முறை பேட்டி எடுத்துள்ளார்.
அவர் மிகப் பெருமை ஆளுமை, துன்பம் வரினும் துணிவுடன் எழுதும் நேர்மையாளராக இறுதி வரை வாழ்ந்தவர்.
எவராலும் விலை கொடுத்து வாங்க முடியாத பத்திரிகையாளர், எதிலும் ஈடுபாடும் உறுதியும் மிக்கவர்.
இந்த இருபெரும் ஆளுமைகள் ('ப்ரண்ட் லைன்' துரைராஜ், மாமனிதர் சாம் இராஜப்பா) நினைவு போற்றும் நிகழ்ச்சியை, இந்த கரோனா காலக் கொடுமை சற்று தணிந்த பின் - சீரிய பத்திரிகையாளர்களை அழைத்துப் பெரியார் திடலில் நடத்துவோம். அவர்களை எடுத்துக் காட்டுகளாக (Role - Models) இன்றைய இளம் பத்திரிகை நண்பர்களுக்குக் காட்டுவது அவசியத் தேவையாகும்.
அவர்கள் மறைந்தும் மறையாத புகழ்ப் பூக்கள்!
அவர்களுக்கு நமது வீர வணக்கம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18-1-2022
No comments:
Post a Comment