உளவுத்துறையில் முதல் பெண் அய்.ஜி. ஆசியம்மாளுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 11, 2022

உளவுத்துறையில் முதல் பெண் அய்.ஜி. ஆசியம்மாளுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து

சென்னை, ஜன.11 தமிழ்நாடு உளவுத்துறையில் முதல் பெண் அய்.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் ஆசியம்மாளுக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் முக்கியப் பிரிவாக பார்க்கப்படுவது உளவுத்துறை. அதில் பணியில் அதிக அனுபவமும், திறமையும், நுண்ணறிவும் நிறைந்தவர்களே அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் இதுவரை தமிழ்நாடு காவல்துறை உளவுத்துறையில் திறமை வாய்ந்தவர்களே நீடித்துள்ளனர்.

கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழ்நாடு உளவுத்துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர். அதனால் அவருக்கு உளவுத்துறை ஏடிஜிபி பதவியை புதிய திமுக அரசு வழங்கியுள்ளது. அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியாக டிஅய்ஜி தகுதியில் பெண் அதிகாரியான ஆசியம்மாள் அமர்த்தப்பட்டுள்ளார். இது தமிழ்நாடு காவல்துறையிலேயே முதன்முறையாகும்.

குரூப்-1 அதிகாரியான ஆசியம்மாள் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். 56 வயது நிறைந்த இவர் எம்எஸ்சி, எம்டெக் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக் குறிச்சி இவர் பிறந்த ஊர். முதல் பணியாக மதுரையில் வரதட்சணைக் கொடுமைத் தடுப்புப்பிரிவில் ஆசியம்மாளுக்கு டிஎஸ்பி பணி வழங்கப்பட்டது.

அதனையடுத்து மாமல்லபுரம் டிஎஸ்பி, சென்னை திருவொற்றியூர் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர், சென்னை போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு உதவி ஆணையராகவும் பணிபுரிந்தார்.

அதன் பிறகு தேனி ஏடிஎஸ்பியாக ஆசியம்மாள் இரண்டே முக்கால் ஆண்டுகளும், தமிழ்நாடு உளவுத்துறையான எஸ்பிசிஅய்டியில் இரண்டே முக்கால் ஆண்டுகளும் திறம்பட பணிபுரிந்தார்.

அதனையடுத்து எஸ்பியாக பதவி உயர்ந்து ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையில் 3 ஆண்டுகள் திறமையாக பணிபுரிந்து தனி முத்திரை பதித்தார்.

இந்நிலையில்,  தமிழ்நாடு உளவுத்துறையில் முதல் பெண்  அய்.ஜி. யாக நியமனம் பெற்றிருக்கும் தூத்துக்குடி கொங்கராயக்குறிச்சியில் பிறந்த ஆசியம்மாள் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என தி.மு.. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment