ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் ஜனவரி 17 முதல் 30ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போட்டி அமைப்பு குழுவும், ஆஸ்திரேலிய அரசும் அறிவித்து இருந்தன.
ஆனால், கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத உலகின் 'முதல் நிலை' வீரரும், ஆஸ்திரேலிய ஓபனை 9 முறை வென்ற வரும், நடப்பு வாகையருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் நோக்குடன் போட்டி அமைப்புக் குழுவின் மருத்துவ குழுவிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5ஆம் தேதி மெல்போர்ன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத் தப்பட்ட ஜோகோவிச்சின் விசர ரத்து செய்யப்பட்டதுடன், குடியேற்ற விதிமுறைகளை மீறுபவர்கள் தங்க வைக்கப்படும் மெல்போர்னில் உள்ள தங்கும் விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவரை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது
தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அங்குள்ள கூட்டு (Federal) நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்த ஜோகோ விச்சுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. ஜோகோவிச்சின் விசா ரத்து நடவடிக்கையை திரும்பப் பெறவும். அவரை தடுப்புக் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்கவும் கடந்த 10ஆம் தேதி நீதிமன்றம் உத்தர விட்டது. இதனை அடுத்து தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜோகோவிச் ஆஸ்திரேலியா போட்டிக்கு தயாராக பயிற்சியில் ஈடுபட்டார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அட்டவணையில் அவர் முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 78ஆவது இடத்தில் உள்ள சக நாட்டு வீரர் மியோமிர் மெக்மனோவிச்சுடன் மோதுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே ஆஸ்திரேலிய குடியுரிமை அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோ விச்சின் விசாவை கடந்த 14.1.2022 அன்று மீண்டும் ரத்து செய்தார். பொதுமக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜோகோவிச் மறுபடியும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவரை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டது. எனவே ஆஸ்திரேலிய ஒபன் போட்டியில் அவர் விளையாடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.
தன் மீதான இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜோகோவிச் கூட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பு வழக்குரைஞர்களும் தங்கள் வாதத்தை முன் வைத்தனர். அரசு தரப்பு வழக்குரைஞர் வாதாடுகையில், "ஜோகோவிச் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். அதனை ஆஸ்திரேலிய அரசால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவரை பார்த்து அவரது ரசிகர்களும் கரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளது. எனவே ஆஸ்திரேலிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
3 மணி நேரம் விசாரணை முடித்து, 2 மணி நேரத்துக்கு பிறகு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அளித்தனர். நீதிபதிகள் 3 பேரும், குடியுரிமை அமைச்சர் எடுத்த நடவடிக்கை நியாயமானது தான் என்று ஒரு மனதாக முடிவுக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து ஜோகோவிச்சின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கில் ஆஸ்திரேலிய அரசுக்கு ஏற்பட்ட செலவுத் தொகையை ஜோகோவிச் செலுத்த வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.
விசா ரத்தை எதிர்த்து ஜோகோவிச் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற ஆஸ்திரேலிய அரசு உடனடியாக நடவடிக் கையில் இறங்கியது. ஆஸ்திரேலிய நாட்டில் விசா ரத்து செய்யப்பட்டு வெளியேற்றப்படுபவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது என்பது விதிமுறையாகும். இதனால் 34 வயதான ஜோகோவிச் அடுத்து வரும் 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள முடியுமா? என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஜோகோவிச் விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம் என்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிஅமைப்புக் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
"ஜோகோவிச் புகழ் பெற்ற டென்னிஸ் வீரர்தான். உலகில் டென்னிஸ் விளையாட்டில் முதல் இடத்தில் இருக்கக் கூடியவர்தான். அதற்காக சட்டத்தை வளைத்து அவரை வரவேற்க முடியாது" என்று ஆஸ்திரேலிய அரசு எடுத்த நடவடிக்கையை மற்ற மற்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். ஏன், பின்பற்றவும் வேண்டும்.
கரோனா என்னும் நோய் உலக மக்களை அரற்றிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் உலகக் குடிமக்கள் ஒவ்வொருவரும் கரோனா தடுப்பு விதி முறையினைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டியது - தனிப்பட்ட மனிதருக்காக மட்டுமல்ல - அவர் மூலம் அந்த நோய் மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
அதுவும் புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர் ஒருவர் தடுப்பூசிக்கு எதிரான கருத்துடையவர் என்று சொல்லிக் கொள்வது அதிர்ச்சிக்கு உரியது. அவர் ஒன்றும் படிக்காத பாமரரும் அல்லர்.
நல்லதற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர்களே இப்படி கோணல் புத்தியுடன் செயல்படுவது - மனிதர்களில் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நினைத்து ஜீரணித்துக் கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.
இந்தப் பிரச்சினையில் ஆஸ்திரேலிய அரசு சட்டத்தினைச் செயல்படுத்துவதில் உறுதி காட்டியது வரவேற்கத்தக்கதாகும்.
முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரியும் மனிதர்களை தலை நகரமான சென்னையிலும் கூடப் பார்க்கத்தான் முடிகிறது. 'மயிலே மயிலே' என்றால் இறகு போடாது. உறுதியாக சட்ட விதிகள் மூலம் இரும்புக்கரம் கொண்டு ஒழுங்கு முறையைக் கொண்டு வருவது என்பதுதான் அரசின் நல்ல நிர்வாகத்திற்கான இலக்கணமாகும். மக்கள் நல அரசு என்பதும் அதுதான்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முகக் கவசம் அணியாதவர் களுக்கு அபராதம் விதிப்பது மிகச் சரியான நடவடிக்கையே ஆகும்.
No comments:
Post a Comment