கேள்வி-1. கேரளாவில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் பொதுச்சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போன்று தமிழ்நாடு அரசும் பள்ளிகளில் ஒரே சீருடை என்ற நிலையைக் கொண்டுவந்து தந்தை பெரியார் எண்ணத்தை நிறைவேற்றுமா?
- க. தமிழ்ச்செல்வி, செய்யாறு.
பதில்: பாலின வேற்றுமையைக் களைய அனைவருக்கும் ஒரே சீருடை என்பது கேரள அரசின் மிகச்சிறந்த ஏற்பாடு. தமிழ்நாடு அரசின் கல்வித்துறையும் இதை இங்கே செயல்படுத்துவது அவசியம்.
தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்தநாள் ‘விடுதலை’ மலரில் அய்யாவிடம் கேட்கப்பட்ட 10 கேள்விகளில் இதுவும் ஒன்று. தந்தை பெரியார் “அனைத்து பாலருக்கும் ஒரே சீருடை இருப்பது வரவேற்கத்தக்கது; பேத ஒழிப்பு உணர்வினை உருவாக்க உதவும்“ என பதில் அளித்தார். அதையும் நினைவூட்டுகிறோம்.
கேள்வி-2. மோடி தலைமையிலான ஒன்றிய அரசை நாங்கள் இயக்கவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறியிருப்பதை 2021 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாமா?
- க. மாயவன், மயிலாப்பூர்.
பதில்: பொய்யும் வழுவும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அன்றாட நடைமுறையாக உள்ளன என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இப்பதிலே சான்று ஆகும்.
கேள்வி-3. தமிழ்நாடு அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளுமா?
- தி. இரவிச்சந்திரன், திருவண்ணாமலை
பதில்: நிச்சயம் கொண்டு வரும்; நாம் - பகுத்தறிவாளர்கள் - தொடர்ந்து வற்புறுத்தி வருவோம்.
கேள்வி-4. டுவிட்டர் பதிவுகளில் நாத்திகத்தை ஊக்குவித்த யேமன் நாட்டவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது சரியா?
- க. வேதகிரி, வியாசர்பாடி
பதில்: அந்தநாட்டு சட்டம் என்று கூறப்பட்டாலும் மனித உரிமைக்கு எதிரானது இது! நம்மால் ஏற்க முடியாது. கடவுள் நம்பிக்கை இயல்பாக வராமல், இப்படி கட்டாயத்தினாலா நிலை நிறுத்தப்பட வேண்டும்?
அதுவே சர்வ சக்தி வாய்ந்த கடவுள் என்பதை பொய்யாக்குகின்றதே!
கேள்வி-5. மாணவர்கள் விரும்பினால் அவர்களுக்கு பகவத் கீதையை கற்பிக்க மாநில அரசுகள் அனுமதிக்கலாம் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறியிருப்பது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் செயல் அல்லவா?
- ம. அருள், மேட்டுக்குப்பம்
பதில்: இது மனித நேயம், அறிவியல் மனப்பாங்கு, கேள்வி கேட்கும் திறனறிவு, சீர்திருத்தம் என்பதை ஒவ்வொரு குடிமகனுக்கும் பரப்புதலே அவசியமான அடிப்படைக் கடமை என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51கி, பிரிவுக்கு எதிரானது. ‘சூத்திரர்களும், பெண்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் என்பதைப் பரப்புவதா?
கேள்வி-6. அய்.அய்.டி. காரக்பூர் வெளியிட்டுள்ள 2022 நாள்காட்டியில் இடம்பெற்றுள்ளவை வரலாற்றுச் செய்திகளா?
- நா.ராமசாமி, பரமக்குடி
பதில்: காரக்பூர் அய்.அய்.டி. அதன் எல்லைத்தாண்டி இப்படி ஹிந்துத்துவா கொள்கையை, திட்டமிட்ட புரட்டினைப் பரப்புகிறது!
1. புராணத்தை வரலாறாக்குவது
2. அறிவியலையும், போலி அறிவியலையும் ஒன்றாக்குவது.
3. தத்துவத்தின் இடத்தில் மதப் பிரச்சாரம்
இவைதான் அத்தகைய புரட்டுகள். முன்பு முரளி மனோகர்ஜோஷி, ஹரப்பா, மொகஞ்சதாரோ - சிந்துவெளி திராவிடர் நாகரிகத்தை ஆரிய நாகரிகமாக மாற்றிக் காட்டிட காளை மாட்டை ஆரியர்களின் குதிரையாகத் திரித்ததை மறக்க முடியுமா?
கேள்வி-7. ஜாதிக் கட்டமைப்பை மேலும் வலுவாக்க, புற்றீசல் போல் கிளம்பியுள்ள ஜாதி வாரியான திருமண இணையதளங்களைச் (விணீtக்ஷீவீனீஷீஸீவீணீறீ) சட்டப்படியாகத் தடுக்க முடியாதா?
- சோ.தமிழரசன், மதுரை
பதில்: ஜாதி ஒழிப்பு என்பது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மீது வந்தால்தான் இதுபோன்ற தீமைகளுக்கு நிரந்தர விடியல் பிறக்கும்.
கேள்வி-8. பி.ஜே.பி. ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம், சுகாதாரச் செயல்பாட்டில் கடைசி இடத்தில் இருப்பதாக ஒன்றிய அரசின் ‘நித்தி ஆயோக்‘ அமைப்பு அறிக்கை வெளியிட்டிருப்பது அம் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா?
- இராசு. மணி, காட்பாடி
பதில்: யோகி படுமோசம் என்பது உலகறிந்த செய்தி! அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணைய சட்டத்திட்டங்கள் மாற்றம் போன்ற பல விஷயங்களை அதனால் தான் வகுத்து முன்கூட்டியே திட்டமிடுகிறது பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.
கேள்வி-9. கரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என்றும் இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் என்றும் அய்.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளதே!
- பா. அங்காளம்மாள், திருவொற்றியூர்.
பதில்: அது அறிவியல் ரீதியான உண்மைதானே. பீதி அடையாமல், சிகிச்சைக்கான புதிய கண்டுபிடிப்புகளை நாட வேண்டும் - மனித குலம்!
கேள்வி-10. உத்தரப்பிரதேசத்தில், பகல் நேரத்தில் நடைபெறும் அரசியல் கட்சிப் பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடிவிட்டு இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் படுவதால் என்ன பயன் ஏற்படப் போகிறது? என்று பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி கேள்வி எழுப்பி இருப்பது நியாயமான வினாதானே!
- க. ஷெரிப், செங்கல்பட்டு
பதில்: நெற்றியடி கேள்வி. இப்படி உண்மைகளைப் புட்டுபுட்டு வைப்பதால்தான் பா.ஜ.க..விலிருந்து அவருக்கு ‘கல்தா’ போலும்.
No comments:
Post a Comment