கேள்வி: விசுவாமித்திரர்கூட பெண்ணிடம் மயங்கியவர் தானே?
பதில்: ‘இவ்வுலகம் இல்லை - அவ்வுலகம் இல்லை’ என்று திரிசங்காக நின்று பெண்களைப்பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்துவிட்டார் விசுவாமித்திரர். அவர் எச்சரித்ததை மதிக்காத எத்தனை பேர் படுபாதாளத்தில் விழுந்ததை ‘மீ-டூ’ கதைகளில் பார்க்கிறோம்.
- இன்று வெளிவந்த ‘துக்ளக்‘ (19.1.2022)
அப்படியா! பெண்கள் என்ற பேச்சு வந்தால் போதும், ‘துக்ளக்‘ மூளையில் மனுதர்ம குரங்கு குடிபுகுந்து இப்படி யெல்லாம் தாறுமாறகப் பேசும்!
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் விசுவாமித்திரர் எச்சரித்ததை - காமகோடி ஜெயேந்திரர் புரிந்துகொள்ளவில் லையே! (உபயம்: எழுத்தாளர் அனுராதா ரமணனின் பேட்டிகள்)
கேள்வி: ஒரு வாசகன் மாதம் ரூ.60 கொடுத்து ஏன் ‘துக்ளக்‘ வாங்கவேண்டும்? அதற்குப் பதில் முட்டை வாங்கிச் சாப்பிட்டால், உடல்நலம் பெறும் அல்லவா?
பதில்: முட்டை வாங்கிச் சாப்பிட்டால் உடல் பருக்கும்; ‘துக்ளக்‘ வாங்கிப் படித்தால் மூளை வளரும் - சாய்ஸ் உங்களு டையது.
‘துக்ளக்‘, 19.1.2022
முட்டை சாப்பிட்டால் உடல் பருக்கும் என்று எந்த முட்டாள் சொன்னான் என்று தெரியவில்லை; ‘துக்ளக்‘ அலுவலகத்தில் அப்படி யாராவது இருக்கலாம்.
‘துக்ளக்‘ படித்தால் மூளை வளருமாம்;
அப்படியா சேதி!
இவர்களுடைய வழிகாட்டி ‘துக்ளக்‘கை ஆரம்பித்த திரு வாளர் ‘சோ’ ராமசாமி வேறுவிதமாகத்தானே கூறியுள்ளார்
.‘‘குழப்புவது எனது பிறப்புரிமை’’ (‘துக்ளக்‘, 1.12.1987, பக்கம் 9) என்று எழுதி இருக்கிறாரே, இதன் பொருள் என்ன? ‘துக்ளக்‘ என்பது மக்களைக் குழப்புவதற்காகத்தான் என்பது விளங்கவில்லையா?
ஒரு வாசகர் ரூ.60 கொடுத்து ‘துக்ளக்‘ வாங்கினால் மூளை வளரும் என்று பதில் கூறும் குருமூர்த்திக்கும் சேர்த்து அவரின் குருநாதர் ‘சோ’ மட்டையடி கொடுத்திருக்கிறார்.
அந்த அடி இதோ:
கேள்வி: ‘துக்ளக்‘கை 35 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியும், எந்த ஒரு பயனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லையென்று என்றாவது நீங்கள் விரக்தி அடைந்தது உண்டா?
பதில்: எந்தப் பலனும் இல்லை என்று எப்படி சொல்லுவது? எனக்கும் பிழைப்பு நடக்கிறதே?
(‘துக்ளக்‘, 24.10.2005, பக்கம் 26)
குருநாதரே வயிற்றுப் பிழைப்புக்காக நடத்தப்படும் பத்திரிகை ‘துக்ளக்‘ என்று சொன்னதற்குப் பிறகு, கத்துக்குட்டிகள் கதையை மாற்றுவது ஏன்? ஏன்??
No comments:
Post a Comment