எவையெல்லாம் சாத்தியமாகாது என்று முற்றுப்புள்ளி வைத்தார்களோ - அவற்றிற்கு கமா போட்டு தொடரச் செய்தவர் தந்தை பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 17, 2022

எவையெல்லாம் சாத்தியமாகாது என்று முற்றுப்புள்ளி வைத்தார்களோ - அவற்றிற்கு கமா போட்டு தொடரச் செய்தவர் தந்தை பெரியார்!


தமிழ்நாட்டில் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஓர் ஆட்சி; பெரியாரின் நினைவுகளைச் சுமந்திருக்கின்ற ஆட்சிதான்!

தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கருத்துரை

சென்னை, ஜன.17  எவையெல்லாம் சாத்தியமாகாது என்று முற்றுப்புள்ளி வைத்தார்களோ, அதையெல்லாம் கமா போட்டுத் தொடரச் செய்து, அது முற்றுப்புள்ளியல்ல - சாத்தியமாகும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஒரு மகத்தான தலைவர் பெரியார். தமிழ்நாட்டில் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஓர் ஆட்சி - அதுவே பெரியாரின் நினைவுகளைச் சுமந்திருக்கின்ற ஆட்சி தான் என்றார் நாகை சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்  அவர்கள். 

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின்  48 ஆம் ஆண்டு நினைவு நாள்

கடந்த 23.12.2021 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற   தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் நாகை சட்டப்பேரவை உறுப் பினர் ஆளூர் ஷாநவாஸ்  அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் - நூல் வெளியீட்டு நிகழ்வில், தலைமையேற்று, நூலை வெளி யிட்டு நம்மையெல்லாம் வழிநடத்திக் கொண்டிருக்கின்ற ஆசிரியர் அய்யா அவர்களே,

வரவேற்புரை ஆற்றி அமர்ந்திருக்கின்ற வழக் குரைஞர் செ.மெ.மதிவதினி அவர்களே,

பொத்தனூர் சண்முகம் அவர்களே,

நோக்கவுரையாற்றி அமர்ந்திருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன் றனார் அவர்களே,

முன்னிலை வகித்துக் கொண்டிருக்கக்கூடிய திரா விடர் கழகப் பொருளாளர் அய்யா வீ.குமரேசன் அவர் களே, பொதுச்செயலாளர் அருமைத் தோழர் வீ.அன்பு ராஜ் அவர்களே, அமைப்புச் செயலாளர் அன்புத் தோழர் வி.பன்னீர்செல்வம் அவர்களே, பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் அன்புத்தோழர் இரா.தமிழ்ச் செல்வன் அவர்களே,

எனக்கு முன்பாக, கருத்துரை வழங்கி அமர்ந் திருக்கின்ற மூத்த பத்திரிகையாளர் தோழர் ராதிகா சுதாகர் அவர்களே,

எனக்குப் பிறகு உரையாற்றவிருக்கின்ற நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராசன் அவர்களே, நன்றியுரையாற்ற விருக்கின்ற தே.செ.கோபால் அவர்களே,

இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கின்ற தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

இந்நிகழ்வில் சிறப்பாகப் பங்கேற்று இருக்கின்ற தோழர்களே, பெரியாரின் கொள்கை உறவுகளே, அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வயதிலும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர் அய்யா!

ஆசிரியர் அய்யா அவர்கள் இந்த வயதிலும் ஓயா மல் உழைத்துக் கொண்டிருக்கிறார். அக்டோபர் 20 ஆம் நாள், நாகப்பட்டினத்திற்கு வருகை தந்திருந்தார்கள். அப்பொழுது நான் ஆசிரியர் அவர்களிடம் கேட்டேன், ‘‘நேற்று எங்கே இருந்தீர்கள்?’’ என்று.

நேற்று இராஜபாளையத்தில் இருந்தேன் என்று சொன்னார்கள்.

நேற்று முன்தினம் எங்கே இருந்தீர்கள்? என்று கேட்டேன்.

நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்தேன் என்று சொன்னார்கள்.

அதற்கு முன் ஓர் ஊரை சொன்னார்கள்; அதற்குமுன் இன்னொரு ஊரைச் சொன்னார்கள்.

இன்றைக்கு நாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச் சியை முடித்துவிட்டு எங்கே போகப்போகிறீர்கள்? என்று கேட்டேன்,

தஞ்சைக்குப் போகப் போகிறேன், நாளைக்கு அங்கே கூட்டம் என்றார்கள்.

நான் நினைத்துப் பார்த்தேன், இன்றைக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, காலையில் நாகப்பட்டி னத்தில் புறப்பட்டு, இங்கே வருவதற்குள், போதும் போதும் என்றாகிவிட்டது; அந்த அளவிற்குப் பயணம் அலுப்பைத் தருகிறது.

ஓய்வு என்பது மரணத்திற்குச் சமமானது!

ஆசிரியர் அவர்களுடைய வயதில், பாதியை அடைந்திருக்கின்ற எங்களுக்கே இவ்வளவு சோர்வும், உடல்வலியும் இருக்கும்பொழுது, நம்மைவிட வயதில் பல மடங்கு பெரியவர்; அவர் உழைத்துக் கொண்டி ருக்கிறார்; ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்; ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊரில் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால், பெரியார், பெரியார் வாழ்கிறார்!

பெரியார் சொன்னார், ஓய்வு என்பது மரணத்திற்குச் சமமானது என்று. ஓயாமல் உழைப்பதுதான், அதுவும் தனக்காக அல்ல; தன்னுடைய சுற்றத்திற்காக அல்ல; தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காக அல்ல - ஒடுக் கப்பட்டுக் கிடக்கிற, அடித்தட்டில் கிடக்கிற - அதிகாரம் பகிரப்படாமல் கிடக்கிற, ஏழை, எளிய மக்களுக்கு, சாதாரண மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, சிறுபான்மையின என அத்தனை மக்களுக்கும், அவர்களுடைய மீட்சிக்காக உழைப்பதற்காக ஒருவர் தன்னை ஒப்புக் கொடுக்கிறார் என்றால், அதற்காகத் தன்னை ஒப்படைத்திருக்கிறார் என்றால், அதன்மூலம்தான் அய்யா பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வழிகாட்டியாக, உந்து சக்தியாக...

எனவே, அந்த அடிப்படையில் ஆசிரியர் அவர்கள், நமக்கெல்லாம் ஒரு பெரிய வழிகாட்டியாக, உந்து சக்தியாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.

அதுபோல, இந்த நிகழ்வில் பங்கேற்று இருக்கின்ற நம்முடைய நிதியமைச்சர் அவர்கள். நான் சட்டப் பேரவையில் இருக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சட்டப்பேரவைக்கு வெளியே, ஊடகங்களில் எல்லாம் இனப்பகைவர்களோடு மிகப்பெரிய சமர் புரிந்திருக்கிறோம்; வாதம் புரிந்திருக்கிறோம்.

ஆனால், சட்டப்பேரவையில், அவர்களை எப்படி கையாளவேண்டும் என்கிற வித்தையை அவர்தான் எங்களுக்கும் கற்றுத் தந்திருக்கிறார்.

அவதூறுகளைக் கட்டவிழ்த்துவிடுகின்ற பாணி பெரியாரிஸ்டுகளுக்குக் கிடையாது

அந்த அளவிற்கு உடனுக்குடன் சான்றுகளோடு பதில் சொல்லக்கூடிய, போகிற போக்கில் அவதூறுகளைக் கட்டவிழ்த்துவிடுகின்ற பாணி பெரியாரிஸ்டுகளுக்குக் கிடையாது; நமக்குக் கிடையாது. சான்றுகளோடு பதிலடி கொடுக்கக்கூடிய ஒரு திறன்வாய்ந்த அமைச்சர்.

இந்தியா, தமிழ்நாட்டை - எப்போதும் திரும்பிப்பார்க் கும் - இப்பொழுது கூடுதலாகத் திரும்பிப் பார்க்கிறது நம்முடைய நிதியமைச்சரின் மூலம்.

இந்தியாவிற்கே ஒரு மிகப்பெரிய, மற்ற மாநிலங் களுக்கும் சேர்த்தே வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

பேரவையில் அவர் சொன்னார் - மிக முக்கியமான கருத்து - ஒரு பிரகடனம்.

எப்பொழுதும் கொள்கையைப்  பேசுகின்றவர்கள் நாங்கள்!

நாங்கள் இப்பொழுது ஆளுங்கட்சியாக இருப்பதி னால், இந்தக் கொள்கைகளைப் பேசுகின்றோம் என் றில்லை; இந்தப் பதவியில் இல்லாமல், எதிர்க்கட்சியாக இருந்தாலும், இதையேதான் பேசுவோம். எதிர்க்கட்சி யாகக்கூட இல்லை - மக்கள் அதற்கும் வாய்ப்புத் தர வில்லை - வெளியேதான் மக்கள் நிறுத்தி வைத்திருக் கிறார்கள் - போராட்டக் களத்தில்தான் நிறுத்தி வைத்தி ருக்கிறார்கள் என்று சொன்னால், அங்கேயும் அதைத் தான் பேசுவோம் என்று சொன்னார்.

போராட்டக்களத்தில் நின்றாலும் கொள்கையைத் தான் பேசுவோம்; எதிர்க்கட்சியாக நின்றாலும் கொள் கையைத்தான் பேசுவோம்; ஆளுங்கட்சியாக இருந் தாலும், கொள்கையைத்தான் பேசுவோம். 

எங்களுடைய கொள்கைகளை நடைமுறைப் படுத்து வதற்கான வாய்ப்பாகத்தான் இந்த அதிகாரத்தைப் பார்க்கிறோம் என்று பிரகடனம் செய்தார்.

எங்களுக்கு மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது.

இதுதான் பெரியார் கண்ட கனவு!

எனவே, அந்த அடிப்படையில் இன்றைக்கு இந்தத் தலைவர்கள் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள். இப்படிப் பட்ட ஒரு சூழலில், நாம் பெரியாரை நினைவுபடுத்தி பேசுகிற, பெரியாரை நினைவூட்டுகிற ஒரு நிகழ்வில் ஒன்று கூடியிருக்கின்றோம்.

தமிழ்நாட்டினுடைய விழிகள் எங்கு திரும்பினாலும் பெரியாருடைய நினைவுகள்தான்!

பெரியார், வெறுமனே ஒரு நிகழ்வில் பேசி முடிக்கப்படக் கூடிய ஒரு தலைவர் அல்ல. தமிழ் நாட்டினுடைய விழிகள் எங்கு திரும்பினாலும், அவருடைய நினைவுகள்தான்.

இன்றைக்குத் தமிழ்நாட்டை இந்தியா திரும்பிப் பார்க்கிறதென்றால், உலகம் திரும்பிப் பார்க்கிறதென்றால், மிக முக்கிய அடையாளம், குறியீடு பெரியார்தான்.

சமூகநீதிக்கு இந்தியாவிற்கே நாம் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவில், எந்த மாநிலத்திலிருந்தும் சமூகநீதிக்காக முதன்முதலில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற குரல் எழும்பவில்லை. தமிழ்நாட்டிலிருந்து தான் அந்தக் குரல் எழுந்தது; அந்தக் குரலுக்குக் காரணமானவர் அய்யா பெரியார்.

அவர் அரசியல் கட்சி தொடங்கவில்லை; அதி காரத்தில் போய் அமரவில்லை. ஆனால், அதி காரத்தில் இருக்கின்றவர்களை அந்த சட்டத் திருத்தத்தை செய்ய செய்தார் என்றால், அவர்தான் பெரியார்.

சமூகநீதிக்காக சட்டத் திருத்தத்தை செய்துகொண்டு வந்தார்கள்.

எந்த மாநிலத்திலிருந்தும் அப்படிப்பட்ட சிந்தனை யும் எழவில்லை; அப்படிப்பட்ட குரலும் எழுவில்லை.

தமிழ்நாட்டிலிருந்துதான் எழுந்தது; பெரியார் என்ன செய்துவிட்டார்? பெரியார் என்ன செய்துவிட்டார்? என்று கேட்கிறார்களே, பெரியார் இதை செய்திருக்கிறார்; சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

உச்சநீதிமன்றம் விதித்திருக்கின்ற வரம்பை எந்த மாநிலமும் உடைக்கவில்லை; தமிழ்நாடுதான் உடைத்தது

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சாத்தியப்படாத ஒன்று 69 சதவிகித இட ஒதுக்கீடு. 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்பது உச்சநீதிமன்றம் விதித்திருக்கின்ற வரம்பு. அந்த வரம்பை எந்த மாநில மும் உடைக்கவில்லை; தமிழ்நாடுதான் உடைத்தது. அதற்கு ஆசிரியர் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டை எட்டுவதற்கு, முத் தமிழ் அறிஞர் கலைஞர், அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். அதில் ஒரு இடையூறை செய்தாலும், பின்பு மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு அதை சரி செய்தார்.

அதற்குப் பிறகு ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்காலத்தில், அதற்கு ஒரு பாதுகாப்பு அரண் உருவாக்க வேண்டும் என்றபொழுது, அதை எப்படி உருவாக்கவேண்டும் என்று வழிகாட்டியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

பெரியார் திடலிலிருந்து முளைத்த விதை - கருத்து!

அவர் வரையறுத்துக் கொடுத்த அந்த டிராஃப்ட் தான். இப்படி செய்யுங்கள் என்று வழிகாட்டினார்; அதற்குப் பிறகு இன்றைக்கு வரைக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து வைத் திருக்கிறோம் என்றால், அது பெரியார் திடலி லிருந்து முளைத்த விதை. பெரியார் திடலிலிருந்து உருவான கருத்து. பெரியார் ஏற்படுத்திய கருத்து.

இன்றைக்கு அப்படித்தான் பெரியாரை நாம் நினைவுப்படுத்திப் பார்க்கவேண்டும்.

இந்தி பேசாத எந்த மாநிலத்திலிருந்தும் இந்தித் திணிப்பிற்கு எதிராகக் குரல் எழவில்லை

இந்தியாவில், இந்தி பேசாத எந்த மாநிலத்திலிருந்தும் இந்தித் திணிப்பிற்கு எதிராகக் குரல் எழவில்லை அல்லது கிளர்ச்சி எழவில்லை. இந்தி பேசாத மாநிலங் களின்மீது இந்தித் திணிப்பு. தமிழ்நாட்டின்மீது இந்தித் திணிப்பல்ல. அப்படி சுருக்கிப் பார்க்கக் கூடாது.

தமிழ்நாட்டின்மீது இந்தியைத் திணித்தார்கள்; எனவே, தமிழ்நாடு கிளர்ந்து எழுந்தது என்பதா வரலாறா? இல்லை; இந்தி பேசாத அத்தனை மாநிலங் களின்மீதும் இந்தித் திணிப்பு. ஆனால், இந்தி பேசாத மாநிலங்கள் எல்லாம் அமைதியாக இருந்தன; தமிழ்நாடு மட்டும்தான் கிளர்ந்தெழுந்தது என்றால், அதுதான் தமிழ்நாட்டிற்குரிய சிறப்பு. 

ஏன்?

இது பெரியார் மண்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

புதிய கல்விக் கொள்கை என்ற ஒன்றை அனைத்து மாநிலங்களின்மீதும் திணிக்கிறது ஒன்றிய அரசு

இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற ஒரு கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஒன்றிய அரசு, மோடி அரசு - ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின்மீதும், அனைத்து மாநிலங்களின்மீதும் திணிக்கிறது.

அதனுடைய நோக்கமாக - அந்தப் புதிய கல்விக் கொள்கையினுடைய இலக்காக ஒன்றிய அரசு சொல்கிறது - 2030 இல் இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய எல்லா மாநிலங்களிலும், ஒட்டுமொத்த நாட்டிலும், உயர்கல்வி படிப்போர் - விழுக்காடு 50 விழுக்காட்டை எட்ட வேண்டும் - அதுதான் இந்தப் புதிய கல்விக் கொள்கையினுடைய நோக்கம் என்று சொல்கிறார்கள்.

2030 இல் - இன்னும் பத்தாண்டுகள் கழித்து, இந்தப் புதிய கல்விக் கொள்கை எதை சாதிக்கப் போகிறது என்றால், இந்தியா முழுவதும் உயர்கல்வி படிப்போர் விழுக்காடு கிராஸ் எண்ட்ரோல்மெண்ட் ரேஷியோ - ஜிஇஆர் - 50 விழுக்காட்டை எட்டவேண்டுமாம். அதை 51.4 விழுக்காடாக ஏற்கெனவே எட்டிவிட்ட மாநிலம் தமிழ்நாடு.

இப்பொழுது உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்கவேண்டும் என்று.

தமிழ்நாட்டில் இது எப்பொழுதோ சாத்தியம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபொழுதே - 30 ஆண்டுகளுக்கு முன்பே - அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், தமிழ் நாட்டின் சிறப்பை.

மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி

இன்றைக்கு இருக்கக்கூடிய  மோடி அரசு, ஒன்றிய அரசு ஓர் உத்தரவைப் போடுகிறார்கள்; ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டாயம் இருக்கவேண்டும். அதை இலக்காக வைத்து மருத்துவக் கல்லூரியைத் தொடங்குகிறோம் என்று சொல்லி, பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என் பதை ஏற்கெனவே நாம் எட்டிவிட்ட மாநிலம் தமிழ்நாடு.

இப்படி இன்றைக்குத் தமிழ்நாட்டினுடைய சிறப்பு என்று சொல்கிறோமே, வடமாநிலங்கள் முழுவதும் வகுப்புவாதக் கலவரங்கள்; சமூக மோதல்கள்; மாட்டுக் கறியை வைத்திருந்தார் என்று சொல்லி,  ‘வைத்திருந்தார்’ என்பதற்காகக்கூடப்  போய் அடித்துப் படுகொலை செய்யக்கூடிய வன்முறைக் காட்சிகள்.

தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் பார்க்க முடியாது; வகுப்பு மோதல்களைப் பார்க்க முடியாது; சமூக நல்லிணக்கத்தைத்தான் பார்க்க முடியும்.

கருப்புச் சட்டைப் போட்ட பெரியாரும் -

காவி உடுத்தியிருந்த குன்றக்குடி அடிகளாரும் -

தொப்பியும், தாடியும் வைத்திருந்த கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத்தும் கைகோர்த்துப் பயணித்து, சமூக நல்லிணக்கக் களத்தை உருவாக்கி வைத்திருக் கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டினுடைய சிறப்பு.

இப்படிப்பட்ட சிறப்பையெல்லாம் இன்றைக்குச் சொல்லிச் சொல்லி, தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன் னோடியாக இருக்கிறது; மேலோங்கி இருக்கிறது, மேலோங்கி இருக்கிறது என்று சொல்கிறோமே - நாம் சொன்னால், இவர்கள் வழக்கம்போல், பெரியார் புகழ் பாடக்கூடிய கோஷ்டி - ஆகவே, பாடுகிறார்கள் என்று சுருக்கி விடுவார்கள்.

இப்பொழுது என்ன தெரியுமா டிரண்ட்?

ஆளுநர் வரப் போகிறார், பராக்,பராக் - வந்தால், அப்படியாகி விடும் தமிழ்நாடு - இப்படியாகிவிடும் தமிழ்நாடு. 

முதலமைச்சர் அவர்கள் அஞ்சி விடுவார் -

தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி வரப் போகிறது என் றெல்லாம் பீடிகைப் போட்டார்கள். வாதப் பிரதிவாதங்கள் நடந்தது; வீடியோக்களை வெளியிட்டார்கள்; கட்டுரை களைத் தீட்டினார்கள்.

ஆளுநர் வந்தார் - இவ்வளவு நேரமும் நான் போட்ட பட்டியலை இப்பொழுது அவரும் போட்டுக்கொண் டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இன்றைக்கு சிறந்த ஆட்சி நடை பெறுகிறது. முதலமைச்சர் கம்பீரமான ஒரு ஆளுமைத் திறன் மிக்க முதலமைச்சர் என்று அவர் பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

சரி, அதோடு நின்றாரா?

பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடுதான் சிறப்பாக இருக்கிறது என்று பட்டியல் போட்டுக்கொண்டிருக்கிறார்.

இதுதான் பெரியார் மண்!

நீதிபதி சொல்கிறார், ஒரு முதலமைச்சர் அவருடைய சக்திக்கு மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று.

நீதிபதி பாராட்டுகிறார், ஆளுநர் பாராட்டுகிறார் - இதுதான் தமிழ்நாட்டிற்கு இருக்கின்ற சிறப்பு.

நான் இவ்வளவு நேரம் போட்ட பட்டியலை, இன் றைக்கு நாம் சொல்கிறோம் என்பதைவிட, இன்றைக்கு இனப் பகைவர்களே அல்லது இன எதிரிகளே அல்லது அந்த சித்தாந்தத்தில் இருந்து முளைத்து கிளைத்து வந்தவர்களே ஒப்புக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள் என்றால், இதுதான் பெரியார்! இதுதான் பெரியார் மண்!

எனவே, பெரியாருடைய சிறப்பு என்பது, அது எல்லைகளற்றது  - விரிந்தது.

ஊடகத்தில் எப்படிப்பட்ட  அரசியல் நடக்கிறது?

இங்கே நம்முடைய ராதிகா சுதாகர் அவர்கள் சொன்னார்களே, ஊடகத்தைப்பற்றி சொன்னார்களே, ஊடகத்தில் எப்படிப்பட்ட அரசியல் நடக்கிறது என்று.

ஊடகத்தில் எப்படிப்பட்ட ஒரு நிலை இருக்கிறது; ஒரு கருத்தை எப்படி உருவாக்குகிறார்கள்? அதற்குப் பின்னணி என்ன? ஒரு செய்தியை சொல்வதற்குப் பின்னணி என்ன? சொல்லாமல் இருப்பதற்குப் பின்னணி என்ன? எப்படிப்பட்ட வலைப் பின்னல் அதற்கு இருக்கிறது என்று ஒரு பட்டியல் போட்டு சொன்னார்கள்.

யாருடைய முகத்தைக் காட்டவேண்டும்; யாருடைய முகத்தைக் காட்டக்கூடாது; யாருடைய செய்தியை முன்னிலைப்படுத்தவேண்டும்; யாருடைய செய்தியை முன்னிலைப்படுத்தக் கூடாது என்பதற்குள் எவ்வளவு அரசியல் இருக்கிறது என்பதைச் சொன்னார்கள்.

இன்றைக்கு நான் அரசியல் களத்தில் அடையாளப் படுத்தப்பட்டு இருக்கிறேன்; சட்டமன்றத்தில் பங்கேற்று இருக்கிறேன்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய ஒரு சட்டமன்ற உறுப்பினராக, தலைவர் திருமாவளவன் அவர்களுடைய வழிகாட்டுதலில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்றால், இதற்கு அடையாளம் எது என்றால், ஊடக வெளிச்சம்.

பெரியாரால் விழுந்த வெளிச்சம்!

நண்பர் பிரசன்னா அங்கே அமர்ந்துகொண்டிருக் கிறார்; அவர் இன்றைக்கு அரசியல் களத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர்மீது விழுந்திருக்கின்ற ஊடக வெளிச்சம். இந்த வெளிச்சம் சாதாரணமாக விழுமா? ராதிகா சுதாகர் அவர்கள் போட்ட பட்டியலைப் பார்த்தால், எங்கள்மீது எப்படி இந்த வெளிச்சம் விழுந்தது? பெரியாரால் விழுந்த வெளிச்சம்.

எப்படி நாங்கள் வந்து உட்கார முடியும். இந்தக் கேமராக்களும், இந்தக் மைக்குகளும் யாரிடம் நீளும்? யார் இங்கே ஒப்பினியன் மேக்கர்ஸ்? யார் இங்கே கருத்துருவாக்கம் செய்யக் கூடியவர்கள்? யார் இங்கே வந்து ஒரு அரசியல் அதிர்வுகளைப்பற்றி கருத்துச் சொல்லக்கூடியவர்கள்.

எல்லாம் அவாள்கள்தான்!

முற்போக்குப் பேசினாலும் சரி, பிற்போக்கைப்பற்றி பேசினாலும் சரி, யாராக இருந்தாலும், அவர்களிடம்தான் இந்த மைக்குகள் நீண்டன; இந்தக் கேமராக்கள் போய் படம் பிடித்துக் கொண்டிருந்தன. அந்த நிலை மாறி, தமிழ்நாட்டில்தான், இப்படிப்பட்ட ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை சமூகங்களிலிருந்தும், ஆளுமைகள் வந்து கருத்து சொல்வார்கள், பேசுவார்கள் - அவர்கள் சொல்லக்கூடிய கருத்து விவாதத்திற்கு வரும் - அதன் மூலம் அவர்களும் அரசியல் அரங்கில் வெளிச்சம் பெறுவார்கள் என்கின்ற நிலை இருக்கிறது என்றால், அதுதான் இந்த திராவிட இயக்கம் உருவாக்கி இருக்கக்கூடிய இந்த மண்.

முற்றுப்புள்ளியல்ல - சாத்தியமாகும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஒரு மகத்தான தலைவர் பெரியார்

எனவே, பெரியார் இப்படி எல்லாவற்றிலும் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

எதெல்லாம் சாத்தியமாகாது என்று முற்றுப்புள்ளி வைத்தார்களோ, அதையெல்லாம் கமா போட்டுத் தொடரச் செய்து, அது முற்றுப்புள்ளியல்ல - சாத்தியமாகும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஒரு மகத்தான தலைவர் பெரியார்.

தமிழ்நாட்டில் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஓர் ஆட்சி - அதுவே பெரியாரின் நினைவுகளைச் சுமந்திருக்கின்ற ஆட்சிதான்.

நாளைக்கு இதே திடலில், நம்முடைய மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், எங்களுடைய தலைவர் அம்பேத்கர் சுடர் விருதை அறிவித்து, நாளைக்கு வழங்கவிருக்கிறார்.

எதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு விருது?

அது தொடர்பாக இன்றைக்கு ‘விடுதலை’யில், முதல் பக்கத்தில் எங்களுடைய துணைப் பொதுச்செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான பாலாஜி அவர்கள் ஒரு விளம்பரத்தைக் கொடுத்திருக்கிறார். அந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் வியப்பாக இருந்தது.

அதில் அவர் பட்டியல் போட்டு இருக்கிறார்.

எதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது?

மாநில ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் அமைக்க சட்டம்.

ஆணையத்தின் தலைவர் மற்றும் பிற பொறுப்பாளர்கள் உடனடியாக நியமனம்.

பண்டிதர் அயோத்திதாசர் பெயரில் மணிமண்டபம்.

மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு நியமனம்.

அரசு பணிகளில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் பின்னடைவு - பணியிடங்கள் நிரப்ப ஆணை.

தொழிற்கல்விப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு கட்டணமில்லா கல்விக் கிடைக்க ஆணை.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டங்களில், பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு உயர்த்தி ஆணை.

ஏழு ஆணைகள் - ஏழு மாதத்தில்.

ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைக் குரலாக முதலமைச்சர் திகழ்கிறார்!

இந்த ஆட்சிப் பொறுப்பேற்று ஏழு மாதங்களில், ஏழு ஆணைகளின்மூலம், ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைக் குரலாக முதலமைச்சர் வெளிப்பட்டு இருக்கிறார்.

இவ்வளவு காலமும், கடந்த 10 ஆண்டுகளுக்குமேலாக இங்கே ஆட்சி இருந்தது. ஆட்சியில் இருப்பவர்கள் செய்யவேண்டிய வேலைகளைத்தானே முதலமைச்சர் செய்திருக்கிறார்; அவருடைய கடமையைத்தானே செய்திருக்கிறார் என்று கடந்து போய்விட முடியுமா?

எல்லா முதலமைச்சர்களும் இதனை செய்துவிட்டார்களா?

எல்லா ஆட்சிகளும் இதனை செய்துவிட்டதா?

கடந்த ஆட்சியில் இது சாத்தியமா?

இல்லை.

பெரியார் கருத்துகளை உள்வாங்கியிருக்கிறார்!

ஏன் இந்த முதலமைச்சர் செய்கிறார்? இந்த ஆட்சி செய்கிறது இதை?

அவர் பெரியார் கருத்துகளை உள்வாங்கியிருக்கிறார் என்பதினால் செய்கிறார்.

அவரை வழிநடத்தக் கூடிய கருத்தியல் எது என்பதுதான் முக்கியம்.

எனவே, அந்தக் கருத்தியல் அவரை வழிநடத்துகிறது என்பதினால், கோரிக்கை வைத்தவுடனேயே நிறைவேற்றுகிறார்.

தமிழ்நாட்டில், எல்லா ஆணையங்களும் இருக்கிறது; எல்லா தேசிய ஆணையத்திற்கும் மாநில ஆணையம் இருக்கிறது; பட்டியல் இன பழங்குடியின மக்களுக்கான ஆணையம் இல்லை என்று போய் சொல்கிறோம்.

உடனடியாக அது அமைக்கப்படுகிறது.

நாம் சொல்லக்கூடிய கருத்தைப் புரிந்துகொள்வதற்கும், ஒரு கருத்துப் புரிதல் வேண்டும். அதுதான் இன்றைக்கு இந்த ஆட்சியில் பார்க்க முடிகிறது; நம்முடைய முதலமைச்சரிடம் பார்க்க முடிகிறது.

அந்த அடிப்படையில்தான், பெரியாருடைய நினைவுகள் எல்லா இடங்களிலும் பற்றிப் படர்கின்றன. அது இன்றைக்கு ஆட்சித் தளத்திலும் வெளிப்படுகிறது; இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான், ஒரு காலத்தில் பெரியாரை நோக்கி செருப்பை வீசினார்கள்; இப்பொழுது செருப்பை எடுத்துக் காட்டுகிறார்கள்.

நமக்கு செருப்பையும் வீசி பழக்கமுமில்லை;  செருப்பை எடுத்துக் காட்டியும் பழக்கமில்லை.

செருப்புப் போடாத மக்களுக்கு செருப்புப் போட வைத்துத்தான் பழக்கம்.

அதுதான் நம்முடைய பழக்கம்.

ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு  இந்தப் பயணம் தொடரும்

செருப்புப் போட்டுத் தெருவில் வராதே என்று தடுத்து, ஒடுக்கப் பார்த்த அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து, செருப்புப் போட வைத்து, சமூகநீதியை நிலைநாட்டித்தான் நமக்குப் பழக்கம்.

எனவே, இந்தப் பயணம் தொடரும்!

பெரியார் எப்பொழுதும் அவருடைய வரலாற்றின் வழி - நமக்கு வழிகாட்டுவார் என்று சொல்லி,

ஆசிரியர் அவர்களுடைய அந்த வழிகாட்டுதலோடு நம்முடைய பயணம் தொடரும் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, அமர்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு நாகை சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்  அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment