"கோட்சேயின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது" என்று இரா. உமா ஒரு நூலை சிறப்பாக எழுதியுள்ளார்.
"நாதுராம் கோட்சே" பெயரை கேட்டவுடன் அநேகர்களுக்கு 'காந்தியை கொன்ற கயவன்' என்றே புரியும், மிக சிலருக்குத்தான் ஆர்.எஸ்.எஸ். எனும் பயங்கரவாதிகளினால் ஏவப்பட்ட அம்பு என தெரியும்.
"இந்திய விடுதலைக்குப் பின் நாட்டில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு எல்லாம் நேருதான் காரணம். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, காந்தி படுகொலை உள்ளிட்ட அனைத்துத் துயரங்களும் நேருவின் சுயநலத்தினால் விளைந்த கேடுகளே, அந்த வகையில், கோட்சே, தவறான நபரைக் கொலை செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது. காந்திக்குப் பதிலாக நேருவைக் கொலை செய்திருக்கலாம்" - இவை கோபாலகிருஷ்ணன் எனும் பா.ஜ.க.வின் (2014 தேர்தலில்) சாலக்குடி வேட்பாளரால் "கேசரி" எனும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரப்பூர்வ கேரள வார இதழில் "காந்திஜியைப் பின்னிருந்து குத்தியவர்" என்ற தலைப்பில் கட்டுரையாக (பக். 21-25இல்)எழுதப்பட்டது.
மத்தியில் பாஜக அமர்ந்த நாள் முதலே ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ சனாதன இயக்கங்கள் தங்கள் நடவடிக் கைகளை, வெளிப்படையாகவும், தீவிரமாகவும் செயல்படுத்தத் தொடங்கி, சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுகள் மூலம் வகுப்புவாதப் பரப்புரைகள், இந்தியா ஹிந்துக்களுக்கே என்னும் முழக்கம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கலவரங்கள் என தங்களுடைய அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் வெளிப்படையாக நிலைநாட்டி வருகின்றன.
'பால்தாக்கரே' கூறியதைப் போல,
"எதிர்காலத்தில் காந்திகளுக்கு அல்ல, கோட் சேக்களுக்குத் தான் சிலை வைப்பார்கள்" என்ற கணிப் புக்களுக்கு உயிரூட்டுவதைப் போல் வெளிப்படை யாகவே கோட்சேவின் வாரிசுகள் தங்களின் சித்தாந்த விரோதிகளை நோக்கி துப்பாக்கிகளை ஏந்தி வருகின்றனர்.
"கோட்சேவின் கைத்துப்பாக்கி காந்தியை மட்டும் கொல்லவில்லை - மாறாக நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கவுரி லங்கேஷ் உள்ளிட்ட ஆறு பேரைப் பதம் பார்த்து விட்டு, இன்னும் பலரையும் குறி பார்த்துதான் இருக்கின்றது. அந்தப் பட்டியல் நீண்டு கொண்டுதான் இருக்கின்றது. ஏன், அதில் நீங்களும் நானும் கூட இருக்கலாம்?" என்று அந்த நூல் எச்சரித்துள்ளது.
அவ்வகையில் "கோட்சேவின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது" என்னும் அந்த நூல், "மீதமிருக்கும் கோட்சேவின் குண்டுகள் யாருக்கு?" என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளது.
இந்தக் கால கட்டத்தில் சிறப்பாக வெளிவந்த நூல் இது. வெளிப்படையாக கோட்சேயைப் புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டனர். கோட்சேயின் சிலைகளைத் திறக்கவும் துடிக்கின்றனர்.
அரசால் கட்டப்பட்ட பாலம் ஒன்றுக்குக் கோட்சே பெயர் சூட்டப்பட்டு, கடும் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது.
காந்தியாரின் நினைவு நாளில், அவர் போல உருவம் செய்து, துப்பாக்கியால் சுட்ட குரூரத்தை எல்லாம் வெளிப்படையாகக் காண முடிகிறது.
காந்தியாரின் படுகொலைக்கு மூளையாக இருந்த சாவர்க்காரின் உருவம் நாடாளுமன்ற அவையில் இடம் பெற்று, அவரது படத்திற்கு அவரின் பிறந்த நாள்களில் பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்துகின்றனர்.
இந்த நாட்டுக்குக் "காந்தி நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதின் பொருளை இப்பொழுதாவது உணர்ந்து பார்க்கட்டும்.
No comments:
Post a Comment