நீதிமன்றத்தை வைத்து ஓர் ஆட்சிக்கு இடையூறு செய்யலாம் என்று நினைத்தால் ஏமாந்து போவார்கள்!
காகிதக் கப்பலை ஓட்ட முடியாது!
தந்தை பெரியாரின் நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்!
பகுத்தறிவுப்
பகலவன் தந்தை பெரியாரின்
48 ஆம்
ஆண்டு நினைவு நாள்
கடந்த 23.12.2021 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய பேராசான் தந்தை பெரியார் அவர்களுடைய நினைவு நாள் கருத் தரங்கம் - சுயமரியாதைச் சுடரொளிகள் நூல் வெளியீட்டு விழா - இன்றைய இளைய தலைமுறை எப்படியெல்லாம் பெரியாரைப் பார்க்கிறது; பெரியாரால் பயனடைகிறது; மற்றவர்கள் பயனடைய வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இங்கே அமைந்துள்ளது. இங்கே உரையாற்றிய மூன்று அறிஞர் பெருமக்களும், நூலை வெளியிட்ட, நூற்றாண்டைத் தொட்டுக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் அறக்கட்டளையின் தலைவரும், கழகத் துணைத் தலைவரும், அறிஞர் பெருமக்கள் நிறைந்திருக்கின்ற இந்த அவையில், நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, வருகை தந்து கருத்துரை வழங்கியுள்ளனர். பாரம்பரியமிக்க நம்முடைய நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம் இன்றைக்குப் பரிமளித்துக் கொண்டிருக்கிறது. அதிலே, தெளிவானவர்கள் உருவாகிறார்கள்.
வேர்கள் மட்டும் பலமாக இல்லை; விழுதுகளும்கூடத் தெளிவாக,
உறுதியாக உள்ளன!
வேர்கள் மட்டும் பலமாக இல்லை; விழுதுகளும் கூடத் தெளிவாக இருக்கிறது; உறுதியாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் நம்முடைய மாண்பமை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராவார்கள். அத்தகைய மாண்மை நிதியமைச்சர் அருமை சகோதரர் மானமிகு பழனிவேல் தியாகராசன் அவர்களே,
ஒரு நல்ல நம்பிக்கை நட்சத்திரமான இளைஞர், தோழர் ஆளூர் ஷாநவாஸ்
இந்த நிகழ்ச்சியில் நம்முடைய அருமையான அழைப்பை ஏற்று, சட்டமன்றமானாலும், மக்கள் மன்ற மானாலும் அல்லது ஊடகத் துறையானாலும், நாளும் அதில் கூர்மையான வாதங்களை தன்னுடைய சிறப்பு அம்சங்களாகக் கொண்டிருக்கக்கூடிய நாடறிந்த ஒரு நல்ல நம்பிக்கை நட்சத்திரமான இளைஞர், சட்டமன்ற உறுப்பினர், நாகை தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களே,
அவர் ஒரு சிறுத்தை - சிறுத்தை இருக்கவேண்டிய இடம் பெரியார் திடல்தான். ஆகவேதான், நாளைக்குக்கூட பெரியார் திடலில்தான் நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. அது பாயவேண்டிய நேரத்தில், அது பாயும். ஆனால், ஒன்றே ஒன்று, இது சர்க்கஸ் சிறுத்தையல்ல; சுதந்திரமாக உலாவக்கூடிய ஒரு வனப்பகுதி சிறுத்தைதான். ஆனால், யாரையும் கடிக்காது; மற்றவர்களைப் பாதுகாக்கக்கூடிய அளவிற்கு சிறப்பானவை.
மூத்த பத்திரிகையாளர் தோழர் ராதிகா சுதாகர்
அதுபோலவே, ஊடகத் துறையில், ஆண்களில், ஒடுக்கப்பட்டவர்கள், மற்றவர்கள் வருவதே மிக அபூர்வம். அதிலும் பெண்கள் வருகிறார்கள் என்று சொன்னால், அவர்களைக் கொச்சைப்படுத்தக் கூடியவர்கள், மலிவாக இருக்கக்கூடியவர்கள் எல்லாம்கூட இன்றைக்கு இருக் கிறார்கள். அதையெல்லாம் தாண்டி, இங்கே தன்னுடைய குமுறல்களையெல்லாம் எடுத்துவைத்து, சிறப்பாக தன்னுடைய கடமையை ஆற்றிய அருமை மூத்த பத்திரிகையாளர் தோழர் ராதிகா சுதாகர் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய, எம்.எல். படித்துக் கொண்டிருக்கக் கூடிய மாணவி, தங்கமெடல் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்களே,
அதேபால, நோக்கவுரையாற்றிய நம்முடைய கழகத் துணைத் தலைவர் அவர்களே,
கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களே, பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
சுயமரியாதைச் சுடரொளிகள் மூன்று தொகுதிகள்
‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ என்ற இந்த மூன்று புத்தகத் தொகுதிகள் தந்தை பெரியார் அவர்களுடைய நீண்ட பொதுவாழ்க்கையிலே - நீதிக்கட்சி தொடங்கி, சுயமரியாதை இயக்கம் காணும் வரையில், அவரோடு தோளோடு தோள் நின்று, மறைந்தும் மறையாமல், நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய சுயமரியாதைச் சுடரொளி கள், கருப்பு மெழுகுவத்திகள் - அவர்களைப்பற்றிய ஒரு நல்ல நினைவூட்டம் - சுருக்கமான ஒரு நூல் - வரலாற்று ஆவணம் என்று சொல்லக்கூடிய அந்த நூலை - நம்முடைய பேராசிரியர் இறையன் அவர்களும், பெரியார் பேருரையாளர் நம்முடைய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும், மற்ற தோழர்கள், பெயர்த்திகளும் இணைந்து, மிக அருமையான ஓர் ஆவ ணமாக உருவாக்கப்பட்டு இருப்பதை - வெளியிட்ட, நம்மு டைய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் அய்யா பொத்தனூர் க.சண்முகம் அவர்களே,
வந்திருக்கின்ற பெரியோர்களே, தாய்மார்களே, நண் பர்களே, கழக உறவுகளே, கொள்கை உறவுகளே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த நண்பர்களே, ஊடக நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.
மிகச் சிறப்பான ஒரு சூழல் - இங்கே சரியாக சொன் னார்கள். எந்த அளவிற்கு, எதிர்ப்புக் காட்டுகின்றவர் களைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல், இந்த இயக்கத்தில் தான் மூன்றாவது தலைமுறையாக வந்தி ருக்கிறேன் என்பதை அழகாக நம்முடைய மாண்பமை நிதியமைச்சர் அவர்கள் சொன்னார்கள்.
இந்த நினைவு நாள் கருத்தரங்கிற்கு, யாரை அழைப்பது என்று இயக்க ரீதியாகக் கலந்துரையாடிக் கொண்டிருந்த நேரத்தில், நான் சொன்னேன், அடுத்த தலைமுறையில், யார் யார் வளர்ந்துகொண்டு, அறிமுகமாகவேண்டும் என்று மற்றவர்கள் நினைக்கிறார்களோ, அவர்களையே அறிமுகப்படுத்துவோம்.
பெரியார் எப்படி பயன்பட்டு இருக்கிறார் என்பதற்கு இந்த மூன்று பேர்!
பெரியார் எப்படி பயன்பட்டு இருக்கிறார் என்று சொல்லும்பொழுது, அதில் முதலில் வந்த மூன்று பெயர் - இங்கே இருக்கின்ற மூவர் பெயர்தான்.
இவர்கள் அத்தனை பேரும், ஒரு துப்பாக்கியிலிருந்து, பீரங்கியிலிருந்து குண்டுகள் பாய்வதைப்போல, மிகத் தெளிவாகக் கருத்துகளை எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் - அதைத்தான் இன்றைக்கும் நாம் பார்த்தோம்.
நாம் மறந்தால் அல்லவோ நினைப்பதற்கு!
தந்தை பெரியார் அவர்களுடைய நினைவு நாள் என்பது - கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, நாம் மறந்தால் அல்லவோ நினைப்பதற்கு! வரலாற்றுக் குறிப்பு நாள்!
ஆனால், நினைவூட்ட வேண்டியவர்களுக்கு நினை வூட்டவேண்டும்.
பெரியார் ஒரு போராயுதம் - பேராயுதம்.
அந்த ஆயுதத்திற்கு எப்பொழுதும் வேலையில்லை. எதிரிகள் நமக்கு வேலை கொடுக்கிறார்கள். எந்த ஆயு தத்தை எடுப்பது என்பது நாம் தீர்மானிப்பதல்ல; நம்முடைய இன எதிரிகள், கொள்கை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் என்று நினைக்கின்ற நேரத்தில்தான், அதை வேகமாக எடுக்கின்றோம்.
சில கருத்துகளை மட்டும் இங்கே முத்தாய்ப்பாக எடுத்து வைக்கிறேன்.
பெரியாருடைய நினைவு நாள் நமக்கொன்றும் சிரார்த்தம் அல்ல - நமக்கொன்றும் ஒரு சடங்கல்ல, சம்பிரதாயமல்ல.
பெரியார் என்கிற தத்துவம் வாழும் தத்துவம் -
சுவாசக் காற்று எப்படி நாம் வாழுவதற்கு மிக முக்கியமோ -அதுபோல, இந்த இனம் மக்கள் இனம் வாழுவதற்குப் பெரியார் காற்றுத் தேவை. அதிலே மாறுபாடுகள் கிடையாது.
மனித குலத்தினுடைய உரிமைகள் எங்கெங் கெல்லாம் நசுக்கப்படுகின்றனவோ, எங்கெங்கெல் லாம் பறிக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் பெரியார் தேவைப்படுகிறார்; என்றைக்கும் தேவைப் படுவார்.
அவர் தன்னந்தனியாக வந்தார் - ஒன்றை அய்யா அவர்கள் அளவுகோலாகக் கொண்டார்கள்; இன் றைக்கு இளைஞர்கள் எல்லாம் இந்த இயக்கத்தை நோக்கி வந்தார்கள், வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால், இது காலத்தின் கட்டாயம்; விஞ்ஞானம் வளர்ந்துகொண்டுதான் இருக்கும். செல் போன்களை யாரும் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வதில்லை. இன்றைக்கு ஒவ்வொருவருடைய கைகளிலும் செல்போன்கள் இருக்கின்றன. அதுபோல, இன்றைக்கு சமூக விஞ்ஞானமாக திராவிடர் இயக்கம் வளர்ந்து கொண்டி ருக்கிறது. இதை எந்தக் கொம்பனாலும் சுலபமாக அசைத்து விட முடியாது.
ஒப்பனைகள் வேறு; உண்மைகள் வேறு
திராவிடம் வெல்லும் - வரலாறு என்றைக்கும் அதை சொல்லும்.
காரணம் என்ன?
உண்மையின்பால் நாம் நிற்கிறோம்.
போலித்தனத்திலே நாம் இல்லை.
ஒப்பனைகள் வேறு; உண்மைகள் வேறு.
ஒப்பனைகள் கலையலாம்; உண்மைகள் ஒருபோதும் கலையாது
ஆனால், ஒப்பனைகள் வெளியில் பளிச்சென்று தெரியும்; உண்மைகள் பளிச்சென்று தெரியாது; நாம் தான் விளங்க வைக்கவேண்டும்.
இதுதான், பெரியார் இயக்கத்திற்கும், இதுதான் திராவிட இயக்கத்திற்கும் - மற்ற இயக்கங்களுக்கும் உள்ள வேறு பாடு. அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
பெரியார் விட்டுச் சென்ற சொத்துகள்!
மூன்று செய்திகள் -
இங்கே சுயமரியாதைச் சுடரொளிகள் நூல்கள் வெளியிடப்பட்டன.
தன்னுடைய தொண்டர்களைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில் -
“என்னுடைய இயக்கம் ஓர் அதிசயமான இயக்கம் -
நான் யாருக்கும் பணம் கொடுக்கமாட்டேன்; இயக் கத்திற்கு வரும்பொழுது அவர்கள் பணம் கொடுப்பார்கள். அதை வாங்கி முடிச்சுப் போட்டுக் கொள்வேன். கையெழுத்துப் போடு என்று சொன்னால்கூட, நாலணா கேட்பேன். என் புத்தகம் வாங்கினால், அதைத் திருப்பிக் கொடுப்பேன்” என்று சொன்னார்.
இப்படியெல்லாம் வளர்ந்த இயக்கம்தான் இந்த இயக்கம்.
அதைத்தான் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உற்சாகமாக சொன்னார்கள். கேட்ட நமக்கும் உற்சாகமாக இருந்தது.
பெரியார் விட்டு சென்ற சொத்துகள் - நான் அடிக்கடி சொல்லுவதைப்போல, அசையா சொத்துகளும், அசையும் சொத்துகளும் ஏராளம் இருக்கின்றன என்று பல மேடைகளிலும் சொன்னாலும், மீண்டும் மீண்டும் அதை நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கிறோம்.
அசையாத சொத்துகள் - அவருடைய கொள்கைகள், லட்சியங்கள். அதை யாராலும் அசைக்க முடியாது.
அசையும் சொத்துகள் - அவருடைய உற்சாகமான, மானம் பாராத, நன்றி பாராட்டாத, புகழ் பாராட்டாத, பதவி எதிர்பார்க்காத தொண்டர்கள், தோழர்கள்.
இவைதான் அசையும் சொத்துகள்.
பெரியார் தன்னுடைய தோழர்களைப்பற்றி, தன்னிடம் பணியாற்றிய தோழர்களைப்பற்றி வரிசையாக சொல்லு கிறார்.
அவருடைய கொள்ளுத் தாத்தா அவர்களது வீட்டிலே, பெரியார் விருந்தாளி. உத்தமபாளையத்தில் உள்ள மாளிகைக்கு நாங்கள் சென்றிருக்கின்றோம்; விருந்து உண்டிருக்கிறோம் - இவருடைய தந்தையார் காலத்தில், தேர்தல் பிரச்சார நேரம், மற்ற நேரங்களில்.
தன்னுடைய தொண்டர்களைப்பற்றி தந்தை பெரியார்!
அப்படி ஒரு பாரம்பரியமான சூழ்நிலையில் வளர்ந்த நேரத்தில், தன்னுடைய தொண்டர்களைப்பற்றி தந்தை பெரியார் சொல்கிறார்.
“என்னுடைய இயக்கம் விசித்திரமானது; என்னுடைய தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள்” என்று.
துறவி என்று சொல்லும்பொழுது, மிக ஜாக்கிரதையாக சொல்லவேண்டும். ஏனென்றால், பல துறவிகளையெல்லாம் நம்முடைய நிதியமைச்சர் அம்பலப்படுத்தி இருக்கிறார்.
‘ஊரை அடிச்சி உலையில் போடுவது’ என்று சொல்லு வார்கள். அதுபோன்று, கோயம்புத்தூர் பக்கத்தில் இருக்கக் கூடியவரை நடிப்பு சாமியார் பற்றியெல்லாம் துணிச்சலாக எடுத்துப் பேசி, அவருடைய அக்கிரமத்தை, ஆக்கிரமிப்பை யெல்லாம் எடுத்துப் பேசிய ஓர் அருமையான தோழர் நம்முடைய நிதியமைச்சர். அவருக்கு உண்மையைத்தான் பேசத் தெரியும்.
அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், சிறந்த கொள்கைவாதியாகவும் இருக்கிறார்!
இவரிடத்தில் விளையாதது எதுவுமில்லை; ஆனால், வளையாதது இவரிடத்தில் உண்டு. ஏனென்றால், உண்மையாக இருக்கக்கூடிய அளவிற்கு அந்த உணர்வை வைத்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால்.
துறவிக்கும் மேலானவர்கள் என்னுடைய தோழர்கள் என்றார் தந்தை பெரியார்.
அவர்களுக்குப் பாதுகாப்பாக யார் யார் இருக்கிறார்கள்?
துறவி என்றால், கொலை செய்கிறார்கள்; மடத்தில் உட்காருகிறார்கள்; அவர்களுக்குப் பாதுகாப்பாக யார் யார் இருக்கிறார்கள்? 82 பிறழ் சாட்சியங்களால் விடுதலை ஆகி வருகிறார்கள்; மேல்முறையீடு செய்யாததால்!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்பொழுது, எழுந்து நிற்காமல் கண்களை மூடிக்கொண்டு இருந்தால், அவர் தியானத்தில் இருக்கிறார் என்று சொன்ன நீதிபதிகளும் இந்த நாட்டில் மிகச் சாதாரணமாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில்தான் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார். இவர்களுடைய மத்தியில்தான் பெரியா ருடைய சிந்தனைகள் வருகின்றன.
உண்மையான துறவு மேற்கொண்டவர்களையும் பார்க் கிறோம். குன்றக்குடி அடிகளார் போன்று, பொன்னம்பல அடிகளார் போன்று இருக்கக்கூடியவர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் போன்று இருக்கக்கூடியவர்களை முன்வைத்து, பெரியார் சொன்னார் - துறவிகளைப் பார்த்து, நீங்கள் ஏன் துறவு பூண்டீர்கள் என்று கேட்டால், அவர்கள் சொல்வார்கள் ‘‘இந்த உலகத்தில் வாழ்வது சிற்றின்பம்; மேலே ஓர் உலகம் இருக்கிறது; அதுதான் பேரின்பம்; அங்கேதான் மோட்சம், ரம்பை, திலோத்தமை எல்லாம் இருப்பார்கள்; அங்கே பசியே எடுக்காது’’ என்றெல்லாம் விளக்கம் சொல்வார் களாம்.
பெரியார் சொன்னார், “ஒன்றுமில்லாத பித்தலாட்டமான அந்த நரகம் - மோட்சம் என்பதைப்பற்றியும் கூட கவலைப்படாதவர்கள் என்னுடைய தொண்டர்கள்.
மோட்சத்திற்குப் போகவேண்டும் என்ற ஆசைக்காக துறவு பூணுகிறார்கள்; மோட்சத்திலேயும் நம்பிக்கை இல் லாதவர்கள் என்னுடைய தொண்டர்கள் என்கின்ற கார ணத்தினால்தான், என்னுடைய தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள் என்று நான் சொன்னேன்”.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான வரலாற்று ரீதியான - எல்லாவற்றிற்கும் உயிர் உள்பட கொடுத்து, உழைத்த பல பேருடைய உழைப்புதான் இந்த மேடை - நாம் கட்டியிருக்கின்ற மேடை.
இயக்கத்திற்கு ரத்தவோட்டம் போன்றவர்கள் தோழர்கள்!
எந்த இயக்கத்திற்கும் ரத்தவோட்டம் தோழர்கள். ஆகவே, அதனை நினைவூட்டி, எப்படியெல்லாம் இருந்தார்கள் நம்முடைய தோழர்கள் என்பதை யெல்லாம் நினைவூட்டக் கூடிய நிகழ்ச்சியாக இன்றைய நிகழ்ச்சி அமைந்திருக்கிறது என்பது ஒன்று.
இரண்டாவதாக நண்பர்களே, இப்பொழுதும் பெரியார் தேவைப்படுகிறார்; நாளைக்கும் பெரியார் தேவைப்படுகிறார்.
ஏன்?
இன்றைக்கு ஒரு விசித்திரமான சூழல் - என்ன விசித்திரமான சூழல் என்று சொன்னால்,
முன்பெல்லாம் எதிரிகள் எதிர்க்கிறார்கள் என்று சொன்னால், எதிர்ப்பதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள், “தேனிருக்க சுளை முழுங்கி” என்று சொல்வதைப்போல, அரசமைப்புச் சட்டம் இதோ இருக்கிறது- அந்த அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் அமைச்சர்கள் உள்பட அத்தனை பேரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒரு விசித்திரமான சூழல்
ஆனால், இன்றைய விசித்திரமான ஒரு சூழல் - ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஒரு விசித்திரமான சூழல்.
பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, மற்றவர்களைப்போல, பதவிப் பிரமாண வாசகங்களைப் படித்தார்; படித்துவிட்டு, கீழே இறங்கிப் போனார். யாரையோ வணங்கப் போகிறார் என்று நாமெல்லாம் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த பொழுது,
அங்கே அரசமைப்புச் சட்ட கல்வெட்டிற்கு முன்பாக சென்று, கீழே விழுந்து வணங்கினார்.
‘ஆகா, என்ன ஓர் அருமையான அரசியல்கூட பக்தி’ - அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றித்தான் ஆட்சியை நடத்துவார் என்று நினைத்தால், ஆனால், அந்த அரச மைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியைப் பின்பற்றி ஆட்சியை நடத்துகிறார்?
இதுதான் இன்றைய கேள்வி.
அதைத்தான் ராதிகா அம்மையார் அவர்கள் கேட்டார் கள் இங்கே.
ஊடகங்கள் எப்படியெல்லாம் மிரட்டப்படுகின்றன; கருத்துரிமைகள் - எப்படியெல்லாம் குரல்வளைகள் நெறிக்கப்படுகின்றன என்பதைப்பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தினைப் பாதுகாப்போம் என்பதுதான் - பஞ்சாயத்துத் தலைவர்களிலிருந்து, நாடா ளுமன்ற உறுப்பினர்கள் முதல், குடியரசுத் தலைவர் வரையில் சொல்லிக் கொண்டிருக்கும் நிலை.
ஆனால், என்ன நடந்திருக்கிறது என்பதற்கு, இரண்டு செய்திகளை மட்டும் நேரத்தின் நெருக்கடியின் காரணமாக சொல்கிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதக் காலத்திற்குள்ளாகவே...
சமூகநீதிக்கான சரித்திர நாயகரான நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்தியாவினுடைய முதல மைச்சர்களிலேயே முதல் முதலமைச்சர் என்று ஆட்சிப் பொறுப்பேற்ற ஏழு மாதக் காலத்திற் குள்ளாகவே பெயர் எடுத்திருக்கக்கூடிய ஒரு முதலமைச்சர்.
அவருடைய உறுதிமொழி - பெரியார் கண்ட வெற்றி யைக் கண்டோம். அந்தக் காட்சியைக்கூட இங்கே ஒளி பரப்பப்பட்ட காணொலி காட்சியின்மூலமாக நாமெல்லாம் பார்த்தோம்.
சமூகநீதி உறுதிமொழியில், பெரியார் சுயமரி யாதை இயக்கத்தைத் தொடங்கியபொழுது என்ன சொற்றொ டரைப் பயன்படுத்தி இருந்தாரோ, அதே சொற்றொடர் அந்த உறுதிமொழியில் இடம் பெற்றி ருந்தது.
என்ன அந்த சொற்றொடர்?
“அனைவருக்கும் அனைத்தும்'' என்பதுதான்.
அனைவருக்கும் அனைத்தும் - என்பார்
அதுவே எல்லாருக்கும் எல்லாமும்
குறள் நெறி, மனித நெறி.
யாரையும் வஞ்சிப்பதில்லை. பார்ப்பனர்களுக்குக் கூட சமூகநீதி என்று சொல்லும்பொழுது, கொடுக் காதே என்று சொல்வது திராவிட இயக்கத்தினுடைய வாதமல்ல.
முத்தையா முதலியார் அவர்களால், கம்யூனல் ஜி.ஓ. என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நீதிக்கட்சியி னுடைய ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் வந்த அந்த ஆணை,
மூன்று சதவிகிதமாக இருந்தவர்களுக்கு
16 சதவிகிதம் ஒதுக்கினார்கள்!
பார்ப்பன சமுதாய மக்களுக்கு, அவர்கள் வெகு சிறுபான்மையாக இருந்த நேரத்தில்கூட, நூறு சதவிகிதத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சதவிகிதம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு?
16 சதவிகிதம்.
அவர்கள் இருந்ததோ 3 சதவிகிதம் - அவர்களுக்காக ஒதுக்கப்பட்டதோ 16 சதவிகிதம். அய்ந்து மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டது. என்றாலும், அவர்கள் திருப்தி அடைய வில்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றார்கள்.
ஏன் தெரியுமா? தோழர்களே,
“எல்லாமும் எங்களுக்கே” - என்பது அவாளின் நிலைப் பாடு.
அனைவருக்கும் அனைத்தும் என்பதற்கும்,
எங்களைத் தவிர வேறு எவருக்கும் கூடாது என்ப தற்கும் உள்ள வேறுபாட்டினை நீங்கள் தெரிந்துகொள் ளுங்கள்.
படிக்காதே என்று மட்டும் அவர்கள் சொல்லவில்லை - படித்தால் நாக்கை அறுப்போம் என்றார்கள்; காதிலே கேட்டால், ஈயத்தை காய்ச்சி ஊற்றுவோம் என்றெல்லாம் இருந்ததை அம்பேத்கர் அவர்கள் அவருடைய நூலில் எழுதியிருக்கிறார்.
இப்படி ஒரு மதம் -
இப்படி ஒரு கொள்கை -
இப்படி ஓர் அராஜக சமூக அநீதி வேறு எங்கேயாவது உண்டா?
கேட்டவர் தந்தை பெரியார் - சிந்திக்க வைத்தார் - அதனுடைய விளைவுதான் நீதி கேட்டார்.
எப்பொழுது நீதி கேட்பார்கள்?
சமூகநீதி என்கிற தத்துவம் எப்பொழுது தேவைப்படும்?
எங்கே அநீதி இருக்கிறதோ, அங்கேதான் நீதி கேட் பார்கள்-
எங்கே சமூக அநீதி கொடி கட்டிப் பறக்கின்றதோ, அங்கேதான் சமூகநீதி தேவை என்கின்ற குரல் எழுப்ப வேண்டிய அவசியம் வரும். அப்படித்தான் அன்றைக்கும் எழுந்தது.
இன்றைக்கு எதிர்க்கட்சியில் இருக்கின்றவர்கள் எல் லாம் அரசமைப்புச் சட்டத்தை அமல்படுத்துங்கள் என்று சொல்வதற்கு, வலியுறுத்தக் காரணம் என்ன?
அரசமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறிக் கொண்டு, புத்தகங்களைக் கரையான் அரிப்பதைப்போல, புத்தகத்தின் மேல் அட்டை இருக்கும்; உள்ளே பக்கங்கள் இருக்காது; கரையான் தின்றிருக்கும். அதுபோல, இன் றைக்கு நடந்துகொண்டிருக்கிறதே - ஒரே ஒரு உதார ணத்தைச் சொல்லவேண்டும் பெரியாருடைய நினைவு நாள் கருத்தரங்கத்தில், இந்தக் கருத்து மிக முக்கியம்.
அடிப்படை உரிமைகள் - மறுக்கப்பட முடியாதது.
அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானம்.
அரசமைப்புச் சட்டத்தின் 29 ஆம் பிரிவு
அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற ஒன்று, 29 ஆவது பிரிவில்,
(1) Any section of the citizens residing in the territory of India or any part thereof having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same.
(2) No citizen shall be denied admission into any educational institution maintained by the State or receiving aid out of State funds on grounds only of religion, race, caste, language or any of them.
நமக்கு உரிமை உண்டு. எந்தப் பகுதியாக இருந்தாலும், சிறப்பான மொழி, கலாச்சாரம் இவைதான். இதைச் சொல்லிவிட்டு,Protection of interests of minorities என்று ஒரு துணைத் தலைப்பு இருக்கிறது; ஆனால், உள்ளே அதற்குரிய வார்த்தைகள் இல்லை.
சிறுபான்மை சமுதாய மக்களாக இருக்கக்கூடியவர் களுக்கு, பெரும்பான்மையினர் ஆளக்கூடிய இடத்தில் பாதுகாப்பு இருக்கவேண்டும்.
அவர்களுடைய கல்வி, கலாச்சாரம், பண்பாடு இவை இருக்கவேண்டும் என்பது அரசமைப்புச் சட்டத்தில் மாற்றப்படி முடியாத, பறிக்கப்பட முடியாத மிக முக்கியமான அடிப்படையான கருத்தாகும்.
இதற்குப் பின்னாளில், விளக்கம் எழுதிய உச்சநீதி மன்றத்தினுடைய ஒரு தீர்ப்பு குறித்துப் பார்ப்போம்.
இன்றைய திராவிட இயக்கத்தினுடைய போராட்டம் என்பது இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு முக்கியமானது; அதற்கு எப்படி பெரியார் ஒரு போராயுதமாகக் கையிலே இருக்கிறார்கள். அதன் காரணமாக, வெற்றி நிச்சயம்.
எப்பொழுதுமே பெரியாருடைய போராட்டங்கள் உடனடியான வெற்றியைத் தராது; உரிய நேரமானாலும், தொடர்ந்த போராட்டத்திற்குப் பிறகு, வெற்றியை கண்டே தீருவார் என்பதுதான் இந்த நேரத்தில் நீங்கள் பார்த்த பல செய்திகள்.
குஜராத் மாநிலத்தில் நடந்த
ஓர் நிகழ்வு - வழக்கு
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பைப் பற்றி பார்ப்போம். அந்தத் தீர்ப்பு குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி என்பதைத்தான் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. பலரும் அறியாத ஒன்று.
Ahmedabad St. Xaviers College Society vs State of Gujarat,
“Although, commonly article 29(1) is assumed to relate to minorities, its scope is not necessarily so confined, as it is available to “any section of citizens resident in the territory of India”.
எனவே, சிறுபான்மையினருக்கு மட்டும்தான் அந்தப் பாதுகாக்கின்ற உரிமை என்று வராதீர்கள். சிறுபான்மை, பெரும்பான்மை எந்த மக்களாக இருந்தாலும், distinct language, script or culture இதுதான் மிக முக்கியம். குறிப் பிடத்தகுந்த அளவிற்கு செம்மொழி எம்மொழி என்றால், பாதுகாக்கக் கூடிய உரிமை நமக்கு உண்டு.
இதில் இன்னொரு மொழியை, சமஸ்கிருதத்தையோ, இந்தியையோ திணித்துவிட முடியாது.
கலாச்சாரத்திற்கு விரோதமாகத் திணிக்கிறார்கள் என்றால்,
எதிர்க்க நமக்கு உரிமை உண்டு!
மீண்டும் மீண்டும் சொன்னால்தான் பதியும் என்பதற்காக சொல்கிறோம்
மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியை ‘கன்கரண்ட் லிஸ்ட்டி‘ற்குக் நீங்கள் மாற்றிய பிறகும்கூட, மாநிலப் பட்டியலிலிருந்து ஒன்றிய லிஸ்ட்டிற்க்கு மாற்றவில்லை. கன்கரண்ட் லிஸ்ட்டிற்குத்தான் மாற்றியிருக்கிறார்கள். கன்கரண்ட் லிஸ்ட் என்பதை தமிழில் மொழி பெயர்க் கும்பொழுது - பலமுறை சொல்லியிருக்கிறோம் - மீண்டும் சொல்கிறோம் - ஏனென்றால், மீண்டும் மீண்டும் சொன் னால்தான் பதியும் என்பதற்காக சொல்கிறோம்.
கன்கரண்ட் லிஸ்ட் என்றால் ‘பொதுப் பட்டியல்‘ என்று மொழி பெயர்க்கிறார்கள் - அது சரியானதல்ல. 'கன்கர்' (concur) என்றாலே ஒத்துக்கொள் என்று அர்த்தம். கன் கரண்ட் லிஸ்ட் என்றால், ஒத்திசைவுப் பட்டியல் என்ப தாகும்.
அந்த ஒத்திசைவுப் பட்டியலின்படி குறைந்தபட்சம் கருத்தையாவது கேட்டிருக்கிறார்களா? கருத்து சொல்ல எங்களுக்கு உரிமையில்லையா?
எங்களுக்கும் உரிமை உண்டு; உங்களுக்கும் உரிமை உண்டு.
எனக்கு வேண்டாம் என்று சொன்னால், நீங்கள் எப்படி திணிக்கலாம்?
மீண்டும் மீண்டும் சட்டமன்றத்திலே ஒருமுறை அல்ல - இருமுறை மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டது.
ஒரு அனுபவம் உள்ள ஒரு குழு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் அறிக்கை கொடுத்து, நிறை வேற்றப்பட்ட மசோதா கிண்டியில் ஊறுகாய் ஜாடியில் ஊறிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால், இதைவிட அரசமைப்புச் சட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள் யார்?
அரசமைப்புச் சட்டத்தை கொச்சைப்படுத்துகின்றவர்கள் யார்?
ஏழு பேர் விடுதலையில், அரசாங்கத்தினுடைய முடிவு என்று உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும்கூட, எதை எதையோ காரணம் சொல்லி மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றத்தில் நடை பெற்ற வழக்கில், இனிமேல் வாய்தா கொடுக்க மாட்டோம் என்று கண்டிப்பாக நீதிபதி சொன்ன பிறகும், இன்னமும் ஆடாமல், அசையாமல் அப்படியே இருந்துகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், இவர்களைவிட அரசமைப்புச் சட் டத்தை கொச்சைப்படுத்துகின்றவர்கள் யார்? அரசமைப்புச் சட்டத்தை மதிக்காதவர்கள் யார்?
மதிக்க வைக்கக்கூடிய முறை - பெரியார் முறை தான் - மக்களிடத்திலே செல்வதுதான். அதற்குப் பெரியார் தேவைப்படுகிறார்.
சட்டமன்றம், மக்கள் மன்றம் இருக்கின்ற காரணத் தினால், வெற்றி பெற்றது திராவிடம்.
சரி, இவர்கள் வெற்றி பெறட்டும்;
நாங்கள் வேறொரு ஆயுதம் வைத்திருக்கிறோம்; என்ன ஆயுதம் தெரியுமா? வெற்றி பெறுவதற்கு.
நீதிமன்றம்.
உச்சநீதிமன்றமாக இருக்கட்டும்; உயர்நீதிமன்றங்களாக இருக்கட்டும்; நாங்கள் உள்ளே உட்கார்ந்திருப்போம்.
சமூகநீதிக்கும், அதற்கும் சம்பந்தம் உண்டா? என்று தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டை பெரு மையாகக் கொண்டாடுகிறீர்களே,
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டு இருக்கின்ற justice Social, Economic and Political என்று சொல்லக்கூடிய அந்த மூன்று நிலைகளில் இருக்கக்கூடிய வாய்ப்புகளில், சமூகநீதி, உச்சநீதிமன்றத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் அல்லவா!
சுதந்திரமடைந்த 75 ஆண்டு காலத்தில்?
எத்தனை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் நீதிபதிகளாக இதுவரை வந்திருக்கிறார்கள்- சுதந்திரமடைந்த 75 ஆண்டுகாலத்தில்?
ஒரே ஒரு வரதராஜன் - கலைஞர் இல்லையானால், அவர்கூட இந்தியாவில் உயர்நீதிமன்றத்தையோ, உச்சநீதி மன்றத்தையோ எட்டிப் பார்த்திருக்க முடியாது.
பெரியார் கேட்டார் - கலைஞர் செய்தார்
அவர் உயர்நீதிமன்றத்தில் அமர்ந்தார் - அதற்குப் பிறகு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார்.
வழக்குரைஞர்கள்
இந்த சமுதாயத்தில் இல்லையா?
அதற்குப் பிறகு ஒரு பாலகிருஷ்ணன் - அதற்குப் பிறகு இன்னொருவர் - அதிகம் போனால், விடுபட்டிருந்தால், இப்போது இன்னொருவர் இருக்கலாம் ஒருவேளை - இந்த 75 ஆண்டுகாலத்தில் நான்கே பேர் - இவர்களைத் தவிர வேறு யாருமே அறிவு இல்லாதவர்களா? சட்டம் படிக் காதவர்களா? வழக்குரைஞர்கள் இந்த சமுதாயத்தில் இல்லையா? நீதிமன்றத் தகுதி இல்லையா?
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகுதி பெற்றவர்கள் உள்பட இன்றைக்கு இருக்கிறார்கள். ஆனால், உச்சநீதி மன்றத்திற்கு ஏன் அவர்கள் உயர்த்தப்படவில்லை?
ஒரே ஒரு காரணம்,
அரசமைப்புச் சட்டத்தில் சொன்னாலும், அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டே சமூக நீதியை நாங்கள் கடைப்பிடிக்கமாட்டோம் என்று மறுப்பது தான் கொடுமை.
உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்களிலே பிற்படுத்தப் பட்டோர் எத்தனை பேர்?
கிடையாது.
உயர்நீதிமன்றத்தினுடைய நிலை என்ன?
சட்டப்படி சமூகநீதிக்கு வியாக்கியானம் சொல்லுகிறார் என்றால்...
உயர்ஜாதிக்காரராக இருந்தாலும், நியாயப்படி நடந்து கொள்கிறார்; சட்டப்படி சமூகநீதிக்கு வியாக்கியானம் சொல்லுகிறார் என்றால், காரணம் இல்லாமல் ஒரு நாள் அவர் தூக்கி எறியப்படுவார் - சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபடி,
75 நீதிபதிகள் இருக்கின்ற ஒரு நீதிமன்றத்திலிருந்து, வெறும் மூன்று அல்லது 5 நீதிபதிகள் இருக்கின்ற ஒரு உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுவார் - காரணமே தெரியாமல்.
இதுதான் இன்றைக்கு அவர்களுடைய ஆயுதம்!
நீங்கள் சட்டமன்றத்தில், மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்று - சட்டமன்றத்தில் எவ்வளவு பெரிய காரியம் செய்தாலும் - நாங்கள் நீதிபதிகளாக வந்துவிடுவோம்.
நாங்கள் அரைக்கால் சட்டை போட்டு ஷாகாக்களில் கலந்தவர்களாக இருப்போம்; ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக இருப்போம் - அதன் காரணமாகவே நாங்கள் நீதிபதிகளாக வருவோம் என்று - சென்னையிலேயே இருக்கிறார்கள் - தீர்ப்புக் கொடுத்துக்கொண்டு மகிழ்கிறார்கள்.
ஆட்சி உங்களிடம் இருக்கலாம் - அதிகாரம் எங் களிடத்தில் இருக்கிறது - அதை நாங்கள் பயன்படுத்துவோம் என்று சொல்லக்கூடிய நிலை தானே இது?
பெரியார் என்கிற பேராயுதம் இருக்கிறது
‘பெரியார் இருக்கிறார்' என்பதை மறந்து விடா தீர்கள் - பெரியார் என்கிற பேராயுதம் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
எடுத்துக்காட்டாக இரண்டு சம்பவங்கள் -
தமிழ்மொழி வாழ்த்துப் பாடுகிறார்கள் என்றால் - அவை மரபு என்னவென்றால், எல்லோரும் எழுந்து நிற்கவேண்டும் என்பதுதான்.
95 ஆண்டுகள் வாழ்ந்த பெரியார் - எழுந்து நிற்க முடியாத பெரியார் - இரண்டு பேரைப் பிடித்துக்கொண்டு - மொழி வாழ்த்துப் பாடும்பொழுது எழுந்து நின்றாரா, இல்லையா?
அதுதான் அவை அடக்கம் - அவை நாகரிகம்.
அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை என்று ஒரு நீதிபதி தீர்ப்பு எழுதுகிறார்.
அவருடைய பழைய வாடையை
அவர் மாற்றிக்கொள்ளவில்லை
இன்றைக்குப் பிற்பகல் ஒரு தீர்ப்பு -
அந்த நீதிபதி சொல்கிறார் - அவரும் அரைக்கால் சட்டை போட்டு பயிற்சி பெற்று வந்தவர். நான் உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால், அவருடைய பழைய வாடையை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்பதற்கு அடையாள தீர்ப்பு.
இதை நான் சொல்லவில்லை - பெகாசஸ்
விவகாரத்தை விசாரிப்பதற்காக ஒரு ஆணையம் அமைத்திருக்கிறார்கள்
அல்லவா - அந்த ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் அவர்களைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் கருத்து
அவர் ஒரு கருத்தை எழுதியிருக்கிறார் - அந்தக் கருத்தைத்தான் நான் இப்பொழுது சொல்ல விரும்புகிறேன்.
அவர் என்ன சொல்கிறார் என்றால்,
ஒவ்வொரு நீதிபதிக்கும், அவர்கள் நீதிபதி ஆவதற்கு முன்னால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளைச் சார்ந்த கருத்துகளோ மற்றவையோ இருக்கலாம். அது தவறல்ல - அது அவருடைய உரிமை.
ஆனால், பொறுப்புக்கு வந்த பிறகு, துலாக்கோல் பிடிப்பதைப்போல, நடந்துகொள்ளவேண்டுமே தவிர, அவர்கள் தங்களுடைய பழைய சிந்தனையைக் கொண்டுவரக்கூடாது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஆனால், பல பேருக்கு அந்தப் பழைய சிந்தனையை விட்டுவிட்டு வெளியே வரமுடியவில்லை என்பதற்கு அடையாளம்தான் - ஒரு தீர்ப்பு.
தமிழ் வாழ்த்துப் பாடினால், நீங்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. அதற்குக் காரணம், ஜன கன மண ஹதி நாயகே பாடலுக்கு எழுந்து நிற்கவில்லை என்றால், தண்டிப்பதற்கு ஒரு சட்டம் இருக்கிறது; தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு அப்படியொரு சட்டம் இல்லை என்று சொன்னார்.
திராவிடம் வெல்லும் -
இதை நாளைய வரலாறு சொல்லும்
ஆனால், சட்டம் இல்லை என்று நீங்கள் தப்பிக்க முடியாது - இதோ நாங்கள் சட்டத்தையும் ஆணையாகப் போட்டிருக்கிறோம் என்று சொல்லி, உடனே தமிழ்நாடு அரசு அடித்த அடி - திராவிடம் வெல்லும் - இதை நாளைய வரலாறு சொல்லும் என்பதைக் காட்டியிருக்கிறது.
அதுமட்டும் போதாது -
இன்றைக்குப் பிற்பகல் ஒரு தீர்ப்பு -
பெண் ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்தி, தாறுமாறாகத் தரங்கெட்டு எழுதிய ஒருவர்மீது ஆறு வழக்குகள் - குண்டம் சட்டம் பாய்ந்திருக்கிறது.
அந்த வழக்கில் தீர்ப்பு எழுதுகிறார், பழைய ஆர்.எஸ்.எஸ்.காரரான நீதிபதி.
எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்று
நான் பேசுகிறேன்!
இதற்காக எங்கள்மீது அவதூறு வழக்குப் போட்டால், அதை நீதிமன்றத்தில் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என்று பொறுப்பேற்று நான் பேசுகிறேன்.
இதை மறுக்கட்டும் அவர்கள் -
இந்த ஆட்சியை வேறு வகையில் நீங்கள் தொட முடியாது என்பதற்காக -
ஆட்சியினுடைய நியாயமான சட்டப்படியான செயல் - காக்கவேண்டியது பெண்ணுரிமையல்லவா!
அந்தப் பெண் நிருபர்களைக் கொச்சைப்படுத்தியவரை - குண்டர் சட்டத்தில் போடுவது சாதாரணமான விஷயம். வேறு சட்டங்கள் அவர்மீது பாய்ந்திருக்கவேண்டும்.
ஏனென்றால், பல ‘சாமியார்கள்' இப்பொழுது சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள் - சில சாமியார்கள் தப்பித்தாலும்கூட!
அந்த சூழ்நிலையில், இன்றைக்கு மதியம் வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பில்,
நிறைய நாள் இவர் ஜெயிலில் இருந்துவிட்டார்; ஆகவே, இவரை விட்டுவிடலாம்.
நீண்ட நாள்களாக ஜெயிலில் இருப்பவர்களையெல்லாம் நீங்கள் விடுதலை செய்து விடுவீர்களா?
30 ஆண்டுகாலமாக சிறையில் இருந்திருக்கிறார்களே, குற்றமே செய்யாமல், அவர்களை விடுவதற்கு நீங்கள் தயாராக இருந்திருக்கிறீர்களா?
இந்தக் கேள்விகள் எல்லாம் எழாதா?
தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
எனவே, இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார்!
அதே நீதிமன்றத்தில் பெரியார் சொன்னார் - பகிரங்கமாகச் சொன்னார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் என்று சொன் னார்கள்-
உடனே பெரியார் சொன்னார், நான் எதிர்வழக்காடு வதில்லை என்று.
ஏ.எஸ்.பி. அய்யர் அய்.சி.எஸ்.
ஒரு பார்ப்பன நீதிபதியும் அமர்ந்திருக்கிறார், நீதிபதி ராஜமன்னாருக்குப் பக்கத்தில், ஏ.எஸ்.பி. அய்யர் அய்.சி.எஸ்.
(பிறகு அவர் எங்களுக்கெல்லாம் சட்டக் கல்லூரியில் டைரக்டர் ஆஃப் லீகல் ஸ்டெடிஸ் என்று இருந்தார். பிறகு பெரியார் கூட்டத்திற்கு நான் தலைமை வகிக்கிறேன் என்று முன்வந்தார்; பெரியாரைப் பாராட்டிப் பேசினார்.)
அந்த இரண்டு நீதிபதிகள் இருந்தபொழுது,
உங்கள்மீது கோர்ட் அவமதிப்பு என்றார்.
மனதறிய நான் அவமதிக்கவில்லை யாரையும் - ஆனால், இது நியாய கோர்ட் அல்ல - சட்டக் கோர்ட் - என்று சொல்லிவிட்டு பெரியார் சொன்னார்,
இதில் என்னுடைய கருத்தை சொல்லுவதற்கு நீங்கள் என்னை அனுமதித்தால், ஓர் அறிக்கைக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சொன்னார்,
பெரியாருடைய அய்க்கோர்ட் ஸ்டேட்மெண்ட்
அந்த அறிக்கையாக கொடுத்ததுதான் -
பெரியாருடைய அய்க்கோர்ட் ஸ்டேட்மெண்ட்
மலையப்பன் அய்.ஏ.எஸ். வழக்கில், அவர்கள் பேசியது - ஆர்.எஸ்.எஸ்.மலையப்பன் கலெக்டராக இருந்த நேரத்தில், கோர்ட் அவமதிப்பு என்ற பெயராலே, நீதிமன்றத் தைப்பற்றிப் பேசினார் என்பதற்காக - பெரியாரும், அன்னை மணியம்மையார் அவர்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட நேரத்தில் பெரியார் சொன்னார்-
“நான் என் மனதில்பட்டதை சொல்லியிருக்கிறேன், நியாயத்தை சொல்லியிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சொன்னார்,
‘‘பார்ப்பான் நீதிபதியாக இருக்கிற நாடு
கடும்புலி வாழும் காடே ஆகும்''
என்று மிகத் தெளிவாக சொன்னார்.
பொதுக்கூட்டத்தில் அல்ல - நீதிமன்றத்திலேயே சொன் னார் - குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டு இருக்கின்ற நேரத்திலே சொன்னார்.
இல்லை, இல்லை பார்ப்பனர்கள் கொஞ்சம் மாறியிருப்பார்கள் என்றெல்லாம் நம்மவர்களே சிலர் சொல்கிறார்கள் அல்லவா!
அதற்கு இலக்கிய ரீதியான சொற்களையே பதிலாகச் சொன்னார் பெரியார்!
இன்னமும் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக இருக்கிறது பெரியாருடைய அந்த அறிக்கை.
‘‘வாயில், நாக்கில் குற்றம் இருந்தாலொழிய
வேம்பு இனிக்காது; தேன் கசக்காது''
தேன் கசக்குது என்று சொன்னால், அவனுடைய நாக்கில் கோளாறு - தேனில் அல்ல. அது போல வேம்பு இனிக்காது.
பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய
புலி புல்லைத் தின்னாது -
ஆடு மனிதனைக் கடிக்காது!
பார்ப்பனர்கள் தங்களுடைய பிறவிச் சிந்தனையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்
அதுபோலத்தான் பார்ப்பனர்களுடைய தன்மை. அவர் கள் தங்களுடைய பிறவிச் சிந்தனையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
அவர்களுடைய நோக்கமெல்லாம், அவர்கள் பதவிக்கு வருவதெல்லாம் மனுதர்மப்படி மற்றவர்களை, சூத்திரர் களை அழிப்பதற்காக. எனவேதான், அந்த முறைகளைக் கையாளுகிறார்கள் என்று சொன்னார்கள்.
அதுபோலவே, அவர்களைத் தங்களைக் காப்பாற்று வதற்காக.
ஒரு சமுதாயத்தில், பெண்கள் ஊடகத் துறையில் வருவதற்கே எவ்வளவு தயக்கம்? அந்தப் பெண்களை எவ்வளவு அவதூறாகப் பேச முடியுமோ அந்த அளவிற்குப் பேசியிருக்கிறார். அதற்காக அவர்மீது வழக்குத் தொடுத்தால், அவர்கள் வருத்தம் தெரிவிக்கவேண்டும்.
இன்னொரு வழக்கில், உங்களுக்குத் தெரியும் - தேவையில்லாமல், மற்றவர்களுக்கு ஒரு தடை கூட கொடுக்காமல் - இந்தக் கருத்தை நான் மட்டும் சொல்ல வில்லை - உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
நீதிமன்றத்தை வைத்து மக்கள மன்றத்தில் வெற்றி பெற்ற ஓர் ஆட்சிக்கு இடையூறா?
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நண்பர்களே, இன்னமும் அவர்கள் நீதிமன்றத்தை வைத்து - மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற ஓர் ஆட்சிக்கு இடையூறு தரலாம் என்று நினைத்தால், நீங்கள் ஏமாந்து போவீர்கள்.
அதுபோன்றவர்களை நீங்கள் நம்பாதீர்கள்!
அவர்கள் உங்களுக்கு ஆயுதமாகப் பயன்படமாட் டார்கள். காகிதத்தாலே கப்பலோட்ட முடியாது என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
எனவே, பெரியார் என்ற அந்த ஆயுதம் -
என்றைக்கும் முனை மழுங்காத ஆயுதம் -
என்றைக்கும் கூர்மையான ஆயுதம் -
என்றைக்கும் நீதி தவறாது, நெறி தவறாது அறவழியில் போராடக் கூடிய ஆயுதம் அது!
அந்த ஆயுதத்தைத்தான் நாங்கள் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம்.
எனவே, பெரியார் எப்போதும் தேவை -
என்றைக்கும் தேவை - இன்றைக்கும் தேவை! தேவை!!
வாளாகவும் இருப்போம் -
கேடயமாகவும் இருப்போம்
அதிலும் குறிப்பாக இன்றைய ஆட்சிக்குத் திராவிடர் கழகம் - இந்த இயக்கம் - பெரியாருடைய தொண்டர்கள் - வாளாகவும் இருப்போம் - கேடயமாகவும் இருப்போம்.
இதை உங்களுக்கு நினைவூட்டி - செய்தியாக சொல்லி - அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க திராவிடம் -
திராவிடம் வெல்லும் -
நாளைய வரலாறு என்றைக்கும் இதைச் சொல்லும்!
நன்றி! நன்றி!! நன்றி!!!
வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment