14.1.2022 இல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 'தி ஹிந்து' நாளேட்டிற்கு அளித்த ஒரு பேட்டியில்,
''சமூகநீதியுடன் இணைந்த சமத்துவப் பொருளாதார வளர்ச்சியே எமது ஆட்சியின் குறிக்கோள்!
அடுத்த அய்ந்து ஆண்டுகளுக்கான ஆட்சியையும் மக்கள் மனமுவந்து எங்களிடம் ஒப்படைக்கும் வகையில் செயல்படுவோம்'' என்று தெளிவாகக் கூறியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது மட்டுமல்ல; இன்றைய அளவில் மட்டுமல்லாது, எப்போதும் ஒரு நல்லாட்சிக்குரிய தேவையும் ஆகும்.
நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினையான பொருளாதார வளர்ச்சி என்பதில், நாட்டில் ஒரு சதவிகிதம் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளிடமே செல்வம் குவிந்து, ஏழைகள் - ஏழைகளாகவும், பெருமுதலாளிகள் மேலும் கொழுத்து, 'திமிலங்களாக'வுமே பெருகும் நிலையே ஏற்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் ஜி.டி.பி. (G.D.P) பற்றிதான் இலக்கு நிர்ணயிக்கிறார்களே தவிர, விவாதம் நடத்துகிறார்களே தவிர, சமூகநீதி என்பதுபற்றி சிறிதளவும் சிந்திப்பதில்லையே! சமூகநீதி என்பதன் முழுதாய்ந்த பொருளை உணர்ந்து, அதனை அத்துணை மக்களும் அனுபவிக்கிறார்களா? அதன்மூலம் சமூகத்தில் அதிகாரப் பங்களிப்பு நிரவலாக அனைவருக்கும் கிடைக்கிறதா என்பதுபற்றி சிந்திப்பதே இல்லை என்பது வேதனைக்குரியதே!.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை (Preamble) யில் உள்ள அனைவருக்கும் சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி என்பன எந்த அளவிற்கு கடந்த 75 ஆண்டுகால சுதந்திரத்தில் கிட்டியுள்ளன என்பதை உண்மையாக ஆராயாமல், வெறும் தொழில் வளர்ச்சி என்பதுபற்றிதான் இலக்கினை பொருளாதாரத் துறையில் நிர்ணயிக்கிறார்களே தவிர, முன்னுரிமை பெற்றுள்ள சமூகநீதிக்கு முதலிடம் தந்துள்ளார்களா என்றால், 'இல்லை' என்பதே நமக்குக் கிடைக்கும் உறுதியான பதில் ஆகும்.
'அனைவருக்கும் அனைத்தும்' என்பதும், அனைத்துத் துறைகளிலும் உள்ளவர்களுக்குக் குறிப்பாக கல்வி, வேலை வாய்ப்புத் துறைகளில் சமூகநீதி அவரவர்க்கு உரிய எண்ணிக்கையில் உரியவர்களுக்கு உரிய வகையில் கிடைப்பதுதான் சமூகநீதி என்பதாகும்.
ஆனால், இந்நாட்டில் உயர்ஜாதி வர்க்கத்திடம் சிக்கிக்கொண்டு ஏகபோகமாக உள்ள ஊடகங்களும், அதிகாரவர்க்கத்தினரும் (Bureaucracy) சமூகநீதி என்ற உயர்ந்த இலக்கைக் கொச்சைப்படுத்தி, அதனால் 'தகுதி திறமை' பறிபோகிறது என்பது போன்ற தவறான கருத்தையே பரப்பி, அதன் முன்னுரிமையை மூலைக்குத் தள்ளுகிறார்கள்!
இதற்குச் சரியான பதிலடிதான் 'திராவிட மாடல்' ஆட்சியின் நீட்சியான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் எடுத்துக்காட்டான ஆட்சி. இதைச் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார் முதலமைச்சர்!
சமூகநீதி நாளாக தந்தை பெரியார் அவர்களது பிறந்த நாளை அறிவித்து, அவர் அரசு ஊழியர்களுடன் - எடுத்த சமூகநீதி உறுதி மொழிகள் அதிகாரவர்க்கம் என்றும் சமூகநீதியை மறக்காமல் செயல்படுத்தத் தவறவே கூடாது என்பதைச் சுட்டிக்காட்டும் முறையிலேயே அமைந்தது.
அதை வெறும் உறுதிமொழியோடு நிறுத்தவில்லை; மாறாக, சமூகநீதி கண்காணிப்புக் குழு 'எல்லாத்' துறைகளிலும் எந்த அளவுக்குச் சமூகநீதி செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை கண்காணிக்கும் முயற்சியிலே ஈடுபடுவதோடு, சட்டக் களமாக அக்கொள்கை செயல்பட உச்சநீதிமன்றத்திலும் வாதிட்டு, வெற்றிக் கனி பறித்து இந்தியா முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்டோரின் குரலை, ஒலிக்கச் செய்துள்ளார்!
பொருளாதார நீதி என்பது ஒரு விழுக்காடு பெருத்த முதலாளிகளின் வளர்ச்சி அல்ல.
கரோனா காலத்து கொடுந்தொற்றால் முழு அடைப்பு - ஊரடங்கு - தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழத்தல் என்பன போன்ற வறுமை வாட்டி, அவர்களை வதைக்கும் காலத்தில், அம்பானிகளின் வருமானம் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கோடியாம்!
அம்பானி, அதானிகள், டாட்டாக்கள் வளர்ச்சிதான் பொருளாதார வளர்ச்சியா?
வளர்ச்சி அல்ல, அது வீக்கம்!
பரவலான எல்லா உடல் உறுப்புகளும் வளர்ந்தால் 'வளர்ச்சி;' ஒரு சில பாகம் மட்டுமே வளர்ந்தால், அது வீக்கம் - நல்ல ஆரோக்கிய வளர்ச்சி அல்ல!
'பூடான்' என்ற நமது அண்டையில் உள்ள சிறிய நாட்டின் தலைவர் (பவுத்தம் அங்கே தழைத்த நாடு) கூறும்போது,
''எங்களுக்கு G.D.Pபெருத்த (பொருளாதார) வளர்ச்சி என்பதைவிட, Gross Domestic Pleasure - மொத்த மக்களின் மகிழ்ச்சி என்பதே எங்கள் இலக்கு'' என்றார்.
அதுபோன்ற நிலையை அடைய, தமிழ்நாட்டு திராவிட மாடல் ஆட்சியின் இந்தக் கொள்கையான சமூகநீதி கலந்த பொருளாதார வளர்ச்சி என்பதுதான் சரியான கலங்கரை வெளிச்சம்!
இக்கொள்கையை நாளும் வளர்க்க - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கப் பாடுபடும் இவ்வாட்சி, நமக்குப் பயன் தருவது மட்டுமல்ல; நாட்டின் நாலா திசைகளுக்கும் வழிகாட்டும் வையப் பிரகடனமும் ஆகும்.
உண்மையான மக்களாட்சியின் மாண்பு இவ்விரண்டும் இணைந்து செயல்படுவதிலும், அதிலும் சமூகநீதி முன்னுரை பெறுவதிலுமே அடங்கும்.
சமூகநீதி என்பது 100 இல் 97 பேருக்கும் ஆனது, 3 சதவிகிதத்தினர் மட்டுமே அனைத்தும் பெறுவதல்ல.
அதுவே, பொருளாதார நீதி என்பதும் 99 சதவிகித மக்கள் பெறவேண்டிய வாய்ப்பை ஒரு சதவிகிதத்தினர் பெற்று, ஏக போகத்தில் புரளுவதும் அல்ல.
இக்கொள்கை திராவிட ஆட்சியின் மாட்சியைப் புலப்படுத்தும் மகத்தான பிரகடனமாகும்!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment