1935ஆம் ஆண்டு திருச்சியில் தமிழர் மாநாடு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் தந்தை பெரியார், கா.சு.பிள்ளை, தமிழவேள் பி.டி.ராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகள் முதலான பெருமக்கள் பங்கேற்றனர்.
பொங்கல் சமய விழாவா? சமய சார்பற்ற விழாவா? என்ற வினாவும் எழுந்தது. அப்போது தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் முக்கியமான ஒரு கருத்தை வெளிப்படுத்தினார்.
பொங்கலை சமயவிழா என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்யலாம் என்று யார் நினைத்தாலும் அவர்கள் இம்மாநாட்டை விட்டு வெளியேற வேண்டும். இது சமய சார்பற்ற விழாவே. இது சமய விழா என்பதற்கு என்ன சான்று இருக்கிறது? எந்தச் சூத்திரம் இருக்கிறது? எந்த இதிகாசம் இருக் கிறது? ஆனால், தமிழில் புறநானூற்றில் பிட்டங் கொற்றன் வரலாற்றில் கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கிறது என்றார்.
மறைமலை அடிகளாரின் கருத்தை தந்தை பெரியார் ஆதரித்தார்.
ஆனாலும், எல்லா வகையிலும் தன் பண் பாட்டுப் படையெடுப்பை செலுத்தும் ஆரியமோ பொங்கலை - மகர சங்கராந்தி ஆக்கிற்று.
ஒன்றிய அரசு இவ்வாண்டு வெளியிட்டுள்ள விடுமுறைப் பட்டியலில்கூட ஜனவரி 14 "மகர சங்கராந்தி" என்று குறிப்பிட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.
அறுவடைத் திருவிழா
உலகின் பல நாடுகளிலும் அறுவடைத் திருவிழா (Harvest Festival) உண்டு. தமிழர் களைப் பொறுத்தவரை பொங்கல்தான் அறு வடைத் திருவிழாவாகும்.
தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது மக்களோடு கலந்த பழமொழியாகும்.
விவசாயம் பாவத் தொழில் என்று மனுதர்மம் கூறுவதால் (மனுதர்மம் - அத்தியாயம் 10 - சுலோகம் 84) பார்ப்பனர்கள் வேளாண்மை தொடர்புடைய அறுவடைத் திருவிழாவை ஏற்றுக் கொள்வதில்லை.
எடுத்துக்காட்டுக்கு ஒன்றை வரலாற்று ரீதியாகக் குறிப்பிட முடியும்.
1921ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற் கொண்டார்கள். பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள். அந்தச் சமயம் கும்ப கோணம் சங்கராச்சாரியார் அந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இரு பார்ப்பனர்களும் சங்கராச் சாரியாருக்குக் காணிக்கை செலுத்த முன் வந் தார்கள். ஆனால், சங்கராச்சாரியாரோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர்களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.
ஓர் அடி கொடுத்தார்
அந்த இரு பார்ப்பனர்களும் காந்தியாருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்கள். கொடு மையான ஒரு சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப் பெறுவதே ஒரு சிறப்புதான். அதை வரவேற்க வேண்டும் என்று சங்கராச்சாரியாருக்கும் சேர்த்து மண்டையில் ஓர் அடி கொடுத்தார் காந்தியார். (ஆதாரம்: தமிழ்நாட்டில் காந்தி - பக்கம் 378)
'ஏர் பின்னது உலகம்' என்பதும், 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்பதும், தமிழர்களின் பண்பாடும் வாழ்க்கை முறையுமாகும்.
ஆனால், இதற்கு நேர் எதிரான கோட் பாட்டைக் கொண்டது ஆரியம்.
அதனால்தான் இயற்கையோடு இயைந்த வேளாண் திருவிழாவான - அறுவடை விழாவான - தமிழர்தம் பண்பாட்டு அடை யாளமான - தமிழர்களின் ஆண்டுப் பிறப்பான பொங்கற் பொன்னாளைப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அதனை மகர சங்கராந்தி என்று வடமொழி பெயரைப் புகுத்தி, அதற்கு மூடத் தனமான மதப் புராணக் கதையைப் புகுத்தி, தங்களுக்கே உரித்தான திரிபு வேலையைச் செய்துவிட்டனர்.
சூரியனை ஆராதித்தனர்
"சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்குங் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிராமே சக்தி எனும் சக்தி தக்ஷிணாயனம்; ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த படியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப் பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவாய் அதஞ்செய்திருந்தபடியால், அப் பசுக்களைக் கொண்டு, அப்புலியுருக் கொண்ட சக்தியை ஒட்டின நாள். இதனை மாட்டுப் பொங்கல் என்பர்.
தனித்த பண்பாடு
இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப் பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தை மாதம் முதலில் அறுத்த, முதற் பயிரை மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ண மூர்த்தி அவதரித்தபின், அவர் அதை நாராயண னுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து, மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற, கண்ணன் கோவர்த்தன மலையைக் குடைபோல் பிடித்து குடிமக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கிராந்திக்கு முன்னாள் அவன் பெயரால் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தளை அவிழ்த்து விட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண் பொங்கல் எனவும் கூறுவர்."
இவ்வாறு அறிவுக்குப் பொருத்த மற்ற வைகளை எல்லாம் புராணங்களின் பேரால் புளுகித் தள்ளியுள்ளனர் இந்தப் பார்ப்பனர்கள். மழை பொழிவதாம் - அதை மலையைக் குடையாக்கித் தடுப்பதாம்! கேழ்வரகில் நெய் வடிகிறதாம் - பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள்! தமிழர்களே, அதை நம்பப் போகிறீர்களா? என்பதுதான் திராவிடர் கழகம் எழுப்பும் அறிவார்ந்த கேள்வி.
திராவிடர் இயக்கம் என்று பெயர் சூட் டியதற்கே முக்கியக் காரணம் - நாம் தனித்த பண்பாடு உள்ள இனம் - நமக்கென்று மொழி, வாழ்க்கை முறை இருக்கிறது. ஆரியம் இடையில் புகுந்து புகுத்திய மொழி சமஸ்கிருதம்; அதன் வழி பண்பாடும் பழக்க வழக்கங்களும் மாற்றப்பட்டதன் காரணமாக நம்மினம் தன் தனித்தன்மையை இழந்துவிட்டது.
ஆரியம் வேறு - திராவிடம் வேறு
இரண்டாயிரம் ஆண்டு இடைவெளியில் திராவிடர் இயக்கம், ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்சி பெற்று, ஆரியம் வேறு - திராவிடம் வேறு என்பதை விளக்கி தனித்தன்மைக்குப் பாடுபட்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியினையும் ஈட்டி யுள்ளது.
சமஸ்கிருத ஊடுருவலால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்று பிரிந்து விட்டது. தமிழர்களின் ஊர்ப் பெயர்களும், தமிழர்களின் பெயர்களும் சமஸ்கிருத மயமாக் கப்பட்டன.
தமிழன் வீட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் பார்ப்பன சமஸ்கிருத மொழியில் பார்ப்பனர் களைக் கொண்டு நடத்தப்பட்டன.
திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கிய நிகழ்வாகும். அதன் செயல்முறை முற்றிலும் பார்ப்பனமயமாக - சமஸ்கிருதமயமாக ஆக்கப் பட்ட நிலையில் முக்கியமாக அதில் கை வைத்தார் தந்தை பெரியார்.
1928ஆம் ஆண்டில் அருப்புக்கோட்டையை அடுத்த சுக்கிலநத்தம் என்னும் ஊரில் புரோகிதரைத் தவிர்த்த முதல் சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தினார் தந்தை பெரியார். ஆனாலும், அதற்குச் சட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், மக்கள் அதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல், பார்ப்பன புரோகிதரைத் தவிர்த்து சீர்திருத்த முறையில் சுயமரியாதைத் திருமணத்தை ஆயிரக்கணக்கில் செய்து கொண்டு வந்தனர்.
உலக அதிசயமே!
உண்மையிலேயே இது ஓர் உலக அதிசயமே! சட்டம் சம்மதிக்க மறுத்தாலும், ஒரு தலைவரின் கருத்தை ஏற்றுத் திருமணம் செய்து கொண்ட வரலாறு இங்கு மட்டும்தான் நடந்திருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் சுயமரியாதைத் திருமணத்துக்கு 1968இல் சட்ட வடிவம் கொடுத்தார்.
அதற்கு முன் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் (Retrospective Effect), இனி நடக்கவிருக்கும் திருமணங்களும் சட்டப்படி செல்லும் என்பதுதான் இந்தத் திருமணச் சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
மாற்றங்கள் உருவாக்கப்பட்டன!
பண்பாட்டு மறுமலர்ச்சியின் கூறுகளாகத் தான் திராவிட இயக்க ஆட்சியில் (குறிப்பாக தி.மு.க. ஆட்சியில்) இரு மொழிக் கொள்கை, பெண்களுக்குச் சொத்துரிமை, மகளிர் வளர்ச்சித் திட்டங்கள், தமிழுக்குச் செம்மொழித் தகுதி, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோருக்குப் பரிசளிப்பு இன்னோரன்ன மாற்றங்கள் உருவாக் கப்பட்டன.
சமூகநீதித் திசையிலும், இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு முதல்நிலை மாநில மாக இருப்பது திராவிட இயக்கத்தின் அருங் கொடையே!
அதிலும் சிறப்பாக சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமை யிலான அரசு - தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்ததும், அந்நாளில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை கீழ்க்கண்ட உறுதி மொழியை ஏற்கச் செய்ததும், தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்றில் என்றென்றும் பேசப் படும் வரலாற்றுச் சாதனையாகும்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற அன்பு நெறியும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத்திறனும் பகுத் தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப் படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!"
பண்பாடு மீட்பு
இந்த உறுதிமொழியில் இடம் பெற்றுள்ள ஜாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, சமத் துவம், சமதர்மம், சகோதரத்துவம் அனைத்தும் திராவிட சமுதாயத்தின் பண்பாட்டு மீட்புப் பொருளடக்கமாகும்.
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது சட்டம் இயற்றப்பட்டது.
நாரதனுக்கும் கிருஷ்ணனுக்கும் (இரு ஆண்களுக்கு) பிறந்த 60 வருடங்கள்தான் தமிழ் ஆண்டுகள் என்ற ஆபாசம் ஒழிக்கப்பட்டது. ஆனாலும், இடையில் புகுந்த ஆரியம் அதனைக் காவு கொண்டு விட்டது என்றாலும், உண்மைத் திராவிடர் ஆட்சியில் மீண்டும் அதனை மீட்டெடுப்போமாக!
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்னும் வாடைக் காற்றை விரட்டியடித்து நமக் கென்று உள்ள பண்பாட்டை நிலைநிறுத்துவோம்!
வெல்க திராவிடம்!
அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்!
நன்றி: 'முரசொலி' பொங்கல் மலர் 14.1.2022
No comments:
Post a Comment