மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன.12 பொருளாதாரம் பாதிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், பொங்கல் திருநாளுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் முழு ஊரடங்குக்கு அவசியம் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை திருவான்மியூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பொங்கலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? இது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் வருமாறு:-
தமிழ்நாட்டில் பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல் படுத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை. தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமல்படுத்தி பொருளாதார பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதிலும், மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையில் பாதிக்கக்கூடாது என்பதிலும் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் தமிழ்நாட்டில் சிறிது சிறிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் கரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் ஊரடங்கை நீட்டிக்கவும், கடுமையாக்கவும், வேகப்படுத்தவும் அவசியம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு
முன்னதாக சென்னை திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் அளவினை சரிபார்த்துக் கொள்ள பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களை மா.சுப்பிரமணியன் வழங்கினார். மேலும், முகக்கவசங்கள் மற்றும் துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தி, தொலைபேசி ஆலோசனை மய்யத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை தொலைபேசியில் அழைத்து, அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
திருவான்மியூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் அளவு 92-க்கு கீழே இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ளவும், 92-க்கு மேலே ஆக்சிஜன் அளவு இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் மருத்துவர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தம்
சென்னையில் நாள்தோறும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 987 நபர்கள் வீட்டுத் தனிமையில் உள்ளனர். இவர்களின் உடல்நிலை குறித்து கண்காணிக்க 200 வார்டுகளிலும், கரோனா களப்பணியாளர்கள், மருத்துவர்ர்கள், மருத்துவக் குழுக்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொற்று அறிகுறியுள்ள நபர்கள் மற்றும் மூச்சுத்திணறல் உள்பட இதர பாதிப்புள்ள நபர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 250 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ஏற்படும் கரோனா தொற்றில் 85 சதவீதம் நபர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறியும், 15 சதவீத நபர்களுக்கு டெல்டா வகை தொற்றும் ஏற்படுகிறது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்வதற்கு ஒன்றிய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மாதிரிகள் அனுப்பி பரிசோதனை முடிவுகள் வருவதற்குள், நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டு விடுகின்றனர். எனவே தற்போது, ஒமைக்ரான் பரிசோதனையை நிறுத்திவிட்டோம்.
மெகா தடுப்பூசி முகாம்
ஆனால், கிளஸ்டர் பகுதியில் இருந்து பெறப்படும் மாதிரிகளைத் தொடர்ந்து ஒன்றிய அரசு மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு எஸ் ஜீன் குறைபாடு மட்டும் இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் புதுவகை மாறுபாடு தொற்று இருக்கிறதா என்பது கண்டறிய முடியும். பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதி உடையவர்களின் எண்ணிக்கை, ஜனவரி மாத இறுதிக்குள் 10 லட்சமாக உயரும். இந்திய அளவில் 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு 1.50 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 22.50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொங்கல் விடுமுறை அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, வரும் சனிக்கிழமை நடைபெற இருந்த 19 ஆவது மெகா தடுப்பூசி முகாம் அடுத்த சனிக்கிழமைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment