ஆர்க்டிக் துருவப்பகுதியில் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணிகளை அடித்துள்ளது.
கடந்தாண்டு ஜூன் 20 அன்று சைபீரிய நகரமான வெர்கோயன்ஸ்கில் பதிவான இந்த வெப்பநிலையை, உலக வானிலை மய்யம் தற்போது சரிபார்த்துள்ளது.
இந்த வெப்பநிலை, ஜூன் மாதத்தில் அப்பகுதியில் பதிவாகக்கூடிய தினசரி அதிகபட்ச சராசரி வெப்பநிலையைவிட 18 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
இந்த அதிதீவிர வெப்பமானது, ஆர்க்டிக்கைக் காட்டிலும், மத்திய தரைக்கடலுக்குப் பொருத்தமானது என, அய்.நா. வின் முகமையான உலக வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.உலக வானிலை மய்யம், தனது அதிதீவிர காலநிலை பதிவுகளில் ஆர்க்டிக் வட்டத்தை சேர்ப்பது இதுவே முதன்முறை.
“விதிவிலக்கான மற்றும் நீடித்த வகையில்” நிலவிய சைபீரிய வெப்ப அலைகளின்போது, வானிலை ஆய்வு நிலையத்தால் இந்த 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவிடப்பட்டதாக, உலக வானிலை மய்யம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இந்த பிராந்தியத்தில் ஏற்பட்ட தீவிர வெப்ப அலைகள், காட்டுத்தீ ஏற்படுவதற்கு வழிவகுத்தது. இதனால், வடக்கு ரஷ்யாவில் காடுகள் எரிந்து கரிநிலத்தில் பரவி, அதிகளவிலான கார்பன் வெளியிடுவதற்கு காரணமாக அமைந்தது.
இது கோடை காலத்தில் வழக்கமானது என்றாலும், அதிக வெப்பநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, காட்டுத்தீ வழக்கத்திற்கு மாறாக தீவிரமாக இருந்தது.
சைபீரியாவில் பரவலாக ஏற்பட்ட அதிக வெப்பநிலை, 2020-இல் அதிகளவிலான கடல் பனி உருகுதலுக்கு வழிவகுத்தது. இது, பதிவு செய்யப்பட்ட மூன்று அதிகமான வெப்பநிலையில் ஒன்று என, உலக வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.
வெர்கோயன்ஸ்க் வெப்பநிலை பதிவின் சரிபார்ப்பு, உல்கின் தட்பவெப்ப முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வெப்பநிலை எவ்வாறு உயர்ந்து வருகிறது என்பதை காட்டுவதாக உள்ளது என, உலக வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.
“இது, உலக வானிலை மய்யத்தில் உள்ள வானிலை மற்றும் காலநிலை தீவிர நிகழ்வுகள் குறித்த பதிவுகள் குறித்த தொடர்ச்சியான அவதானிப்புகளில் ஒன்றாகும். இது, நமது மாறும் காலநிலை தொடர்பாக எச்சரிக்கை மணிகளை அடித்துள்ளது,” என்கிறார் உலக வானிலை மய்யத்தின் செயலாளர் (பொது) பெட்டேரி டாலஸ்.
மேலும், டாலஸ் பி.பி.சி.யிடம் கூறுகையில், ரஷ்ய ஆர்க்டிக் பகுதியில் பனி உருகுதல், வெப்பமயமாதலை அதிகரிப்பதாக தெரிவித்தார்.
“மண் மற்றும் கடலின் கதிர்வீச்சு பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இது நிகழ்கிறது. பனி மூடிய பிறகு, மேற்பரப்பின் கதிர்வீச்சின் தன்மை, கருமண் அல்லது திறந்த கடலின் கதிர்வீச்சின் தன்மையுடன் வேறுபட்டதாகும்,” என தெரிவித்தார்.
உலகில் வேகமாக வெப்பமயமாகி வரும் பிராந்தியங்களில் ஒன்று ஆர்க்டிக் எனவும், இங்கு உலக சராசரியைவிட இருமடங்கைக் காட்டிலும் கூடுதலாக வெப்பமடைந்து வருவதாகவும், உலக வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.
ஆர்க்டிக்கில் வெப்பமயமாதல், பூமிக்குக் கீழே நிரந்தரமாக உறைந்திருக்கும் உறைபனியைக் கரைப்பதற்கு வழிவகுக்கிறது.
இதன்மூலம், பூமிக்குக் கீழே அடைபட்டிருக்கும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை வெளியேற்றுவதால், விஞ்ஞானிகளை அச்சமடையச் செய்துள்ளது.
இந்த பசுங்குடில் வாயுக்கள் மேலும் வெப்பமயமாதலை அதிகரிக்கவும், பூமிக்கடியில் உள்ள உறைபனியைக் கரைப்பதற்கும் காரணமாகிறது.
இந்த அதிக வெப்பநிலை, ஆர்க்டிக் பகுதியில் பனிக்கட்டி வேகமாக உருகுவதற்கும் வழிவகுக்கிறது. இது கடல் மட்டம் வேகமாக உயர்வதற்குக் காரணமாகிறது.
உலகின் வெப்பநிலை உயர்வுக்கு மனித செயல்பாடுகள் காரணமாக உள்ளன. இப்போது, காலநிலை மாற்றம் மனித வாழ்க்கையை அச்சுறுத்துவதாக உள்ளது.
மனிதர்களும் இயற்கையும் வெப்பமயமாதலுடன், மோசமான வறட்சி, கடல் மட்டம் உயர்வு, உயிரினங்களின் அழிவு ஆகியவற்றை இதனால் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment