தருமபுரி, ஜன. 18- தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்தநாளை (சுயமரியாதை நாள்) முன்னிட்டு 12.12.2021 அன்று மாலை 4.30 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் “தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்“ நூல் வெளியீட்டு விழா மற்றும் தமிழர் தலைவரின் தொண்டில் பெரிதும் விஞ்சி நிற்பது - ‘சமூக நீதியே!‘ ‘மதச்சார்பின்மையே!’ என்னும் தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் வீ. சிவாஜி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் மு.பரமசிவம் வரவேற்புரையாற் றினார்.
பொதுக்குழு உறுப்பினர் கதிர், மாவட்ட துணைத் தலை வர் இரா.வேட்டையன், மாவட்ட இளைஞரணி தலைவர் அர. ஆனந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிறீதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர்ஜுனன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இ.சமரசம், வழக்குரைஞர் பீம. தமிழ் பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெ.கோவிந்தராஜ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அ.பிரதாப், தர்மபுரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் க.சின்னராஜ், செயலாளர் சுதாமணி, நகர கழகத் தலைவர் கரு.பாலன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.தனசேகரன், செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
கழக கலைத் துறை செயலாளர் ஆசிரியர் மாரி. கருணாநிதி, தொடக்க உரையாற்றினார். தருமபுரி மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல்வன் இணைப்புரை வழங்கினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் ‘தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்‘ நூலை வெளியிட கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், தமிழ் வளர்ச்சித்துறை மேனாள் இயக்குநர் மு.இராஜேந்திரன், தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர், அரூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா.இராஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கே. ஜி. எஸ். கோவேந்தன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மற்றும் கழக நிர்வாகிகள் பெற்றுக்கொண்டு கருத்துரையாற்றினார்.
பட்டிமன்றம்
தமிழர் தலைவரின் தொண்டில் பெரிதும் விஞ்சி நிற்பது ‘சமூகநீதியே!’ ‘மதச்சார்பின்மையே!!’ என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி . பூங்குன்றன் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை வழிநடத்தினார். ‘சமூகநீதியே’ என்னும் அணியில் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆசிரியர் கதிர்செந்தில் ஆகியோரும், ‘மதச்சார்பின்மையே’ என்னும் அணியில் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, மாநில பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் ஆகியோரும் வாதிட்டனர்.
மதச்சார்பின்மையே!
‘மதச்சார்பின்மையே’ என்னும் அணியில் மதிவதனி - உலகத்தின் முதல் நாத்திகர் புத்தர். அதனால்தான் சாகு மகராஜ், நாராயணகுரு, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் எல்லாம் உருவானார்கள். அந்த வரிசையில் மற்ற தலைவர்களை எல்லாம் இந்துத்துவா உள்வாங்கிக் கொண் டது. ஆனால் தந்தை பெரியார் என்னும் பெரு நெருப்பை மட்டும் மதவாதம் நெருங்க முடியவில்லை. தந்தை பெரியாரின் கொள்கை வாரிசாக இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியரின் மதச்சார்பின்மை கொள்கையே மேலோங்கி இருக்கின்றது. உலகத்தில் ரத்தம் சிந்தாத மதங்கள் என்று ஏதாவது உண்டா என்று கேள்வி எழுப்பினார். காந்தியாரை சமூகநீதி பிரச்சினைக்காகவா சுட்டுக் கொன்றார்கள்? இல்லை ஆர்.எஸ்.எஸ். என்னும் மதவாத சிந்தனை கொண்ட கோட்சே என்னும் பார்ப்பனரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அது மட்டுமல்ல, டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6 அன்று இஸ்லாம் மக்களின் நம்பிக்கையான பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்கள்.
இந்தியாவில் எல்லா இடத்திலும் கலவரம் வெடித்தது. பல பேர் கொல்லப்பட்டார்கள். வீடுகள் எரிக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டில் தான் எந்த ஒரு சிறு வன்முறையும் நடக்கவில்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியாரின் கொள்கையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கட்டிக்காத்த மதச்சார்பின்மை கொள்கை தான் என வாதிட்டார். அதே அணியில் பேசிய மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் குறிப்பிடுகையில் - கடவுள் மதமும், சினிமா போதையும், காசை இழக்கும் பரிசு சீட்டும் மதி இழக்காதே தமிழா மதி இழக்காதே என்னும் பாடலை பாடி, இந்த நாட்டில் குடியரசுத் தலைவர் ஆகலாம், பிரதமர் ஆகலாம், முதலமைச்சர் ஆகலாம், அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், ஆகலாம் ஆனால் அனைத்து ஜாதியினரும் என்று சொல்லக்கூடிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகராக முடியாது. காரணம் என்னவென்றால் அவர்கள் அந்த வர்ணாஸ்ரம தர்மத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. படித்தவன் எல்லாம் திருப்பதிக்குச் சென்று மொட்டை போடலாம், நெற்றியில் பட்டை போடலாம், சேர்த்து மொட்டையும் போடலாம். ஆனால் அவர்கள் எல்லாம் பக்தர்கள்தானே தவிர யாரும் மதவாதிகளாக இருக்க முடியாது, பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை மதச்சார்பின்மை என்னும் ஓர் அணிக்குள் அவர்களை திரட்டி மதச்சார்பற்ற கூட்டணி என்னும் நிலையை உருவாக்கியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களே. எனவே தமிழர் தலைவர் தொண்டில் பெரிதும் விஞ்சி நிற்பது ‘மதச்சார்பின்மையே’ என்று தனது அணிக்கு வலு சேர்த்துப் பேசினார்.
சமூகநீதியே!
அதைத் தொடர்ந்து ‘சமூகநீதியே’ என்னும் அணியின் தலைவர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் - திராவிட இயக்கமும் அதன் பின் திராவிடர் கழகம் தோன்றிய நோக்கம் சமூகநீதிக்காகவே. ஆரம்பத்தில் பார்ப்பனர்களிடம் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்ட நம்மிடம் தான் இன்று பார்ப்பனர்கள் நம்மைப் பார்த்து இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அதை கேட்க வைத்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்தான். சமூக நீதிக்காக பெரியார் மாணவர்களை அழைத்தார், போராடினார். அதில் வெற்றியும் பெற்றார். சட்டமன்றத்திற்கு, நாடாளுமன்றத் திற்கும் போகாத, அமைச்சராகாத பெரியார் இந்தியாவின் முதல் சட்டத் திருத் தத்தை செய்தார். அதேபோல நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று எந்தப் பதவிக்கும் போகாத தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக சட்டம் இயற்றி அதை திருத்தம் செய்து பார்ப்பனர்களாக இருந்த ஜெயலலிதா, நரசிம்மராவ், சங்கர் தயாள் சர்மா ஆகிய வர்களிடம் கையெழுத்து பெற்று சட்டம் ஆக்கினார். அந்த சட்டம் தான் இன்று இந்தியாவிற்கே வழி காட்டும் சட்டமாக இருக்கிறது. என்று தனது உரையில் கூறினார்.
மண்டல் கமிஷனை வலியுறுத்தி...
இதே அணியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கதிர் செந்தில் பேசுகையில் - 9 ஆயிரம் ரூபாய் உச்சவரம்பு திட்டத்தை அன்றைக்கு எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நிலையில் 1980ஆம் ஆண்டுஅண்ணா திமுக இரண்டு இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. அதற்கு காரணம் சமூக நீதியை கடைப்பிடிக்காததே ஆகும். மண்டல் கமிஷன் திட்டத்தை கொண்டுவருவதற்காக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாட்டில் 42 மாநாடுகளை நடத்தி னார். 1989-ஆம் ஆண்டு மண்டல் அவர்களே சென்னை பெரியார் திடலில் கலந்துகொண்டு மண்டல் கமிஷனை வலியுறுத்திப் பேசினார் . இன்றைக்கு என்னைப் போன்ற வர்கள் எல்லாம் ஆசிரியர் பணிக்கு வந்து இருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு காரணம் 69 சதவிகித இட ஒதுக்கீடும் மண்டல் கமிஷன் தான் காரணமாகும். அதற்காக உழைத்தவர் ஆசிரியர் அவர்கள். “பார்ப்பனர்கள் வாழும் நாடு கடும் புலிகள் வாழும் காடு” என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார். அதற்கு காரணம் சமூகநீதியை பின் பற்றாததே ஆகும். பெரியார் சமூக நீதிக்காக யாரிடமும் நன்றி எதிர்பாராமல் செயல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் வழக்குரைஞராகவும் நீதிபதியாகவும் பார்ப் பனர்களே இருந்த நிலையை மாற்றி ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வரதராஜனை நீதிபதி ஆக்கி அந்த நீதிபதியை பார்த்து பார்ப்பன வழக்குரைஞர் ஓ மை லார்ட் என்று சொல்ல வைத் தது தந்தை பெரியார் இயக்கம் தான். எனவே தமிழர் தலை வரின் தொண்டில் பெரிதும் விஞ்சி நிற்பது ‘சமூகநீதியே’ என்று வாதிட்டார்.
மதச் சார்பற்ற சட்டம்
இரு பக்கங்களின் கருத்தை கேட்ட கழகத்தின் துணைத் தலைவர் நடுவர் கழகத் துணைத் தலைவர் கலி .பூங்குன்றன் அவர்கள் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடும்போது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூகநீதி, மதச் சார்பற்ற சட்டம் இரண்டும் உள்ளது. எந்த நேரத்திலும் சமூகநீதியை யாராலும் சமாதானப்படுத்த முடியாது. ஆனால் சில நேரங்களில் மதச்சார்பின்மையை சமாதானப்படுத்த முடியும் அதற்கு உதாரணம் குன்றக்குடி அடிகளாரை கூறலாம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைத்து பேர்களும் எழுந்து நின்ற நிலையிலும் சங்கராச்சாரியார் உட்கார்ந்திருந்தார். எழுந்து நிற்க வேண்டும் என்று சட்டம் இல்லை என்றாலும் அது ஒரு பண்பாடு. அந்தப் பண்பாட்டை கூட மதிக்கத் தெரியாதவராக சங்கராச்சாரியார் இருந்தார்.
தகுதி திறமை என்பது ஒரு புரட்டே!
சமூகநீதி கருத்தில் பார்ப்பனர்கள் இட ஒதுக்கீடு கேட்கும் காலம் வரும். சமூகநீதி பற்றி சொல்லவேண்டும் என்று சொன்னால் நீட் தேர்வில் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா 1200க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்தார் ஆனால் தகுதி இல்லை என்று கூறியதால் அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். எனவே தகுதி திறமை என்பது ஒரு புரட்டே ஆகும். இன்றைக்கும் மருத்துவ மாணவர் இட ஒதுக்கீட்டில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை கூட பின்பற்றாமல் இருக் கிறார்கள். பாபர் மசூதியை இடித்தவர்கள் சமூக நீதி பேசும் காலம் வரும். தமிழர் தலைவர் தொண்டு என்பது சமூகநீதி, மதச்சார்பின்மை சார்ந்த ஒன்றாகும். தமிழர் தலைவரைப் பொருத்தளவில் அவை இரண்டையும் இரண்டு கண்களாக பார்க்கக் கூடியவர். சமூகநீதி, மதச்சார்பின்மைக் களங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பல்வேறு செயல் பாடுகளையும் சுட்டிக்காட்டி அவரது 89 வயதில் 79 வயது பொது வாழ்வினை எடுத்துரைத்து அவரின் உழைப்பையும் தியாகத்தையும் அளவிட முடியாது என்று கூறி தமிழர் தலைவரின் தொண்டில் சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை என்னும் இரண்டும் இரண்டு கண்கள் ஆகும் என்று தீர்ப்பில் கூறினார்.
பங்கேற்றோர்
சென்னை க.கலைமணி ,ஊற்றங்கரை பகுத்தறிவு ஆசிரியர்அணி பொறுப்பாளர்கள் சித. அருள், சித. வீரமணி, பெரியார் பற்றாளர் முனி.ஆறுமுகம், மாவட்ட மகளிரணி தலைவர் த.முருகம்மாள், மாவட்ட மகளிரணி செயலாளர் நளினி, ஆசிரியர் சோபியா, மண்டல மாணவர் கழக செயலாளர் மா .செல்லதுரை, தர்மபுரி ஒன்றிய தலைவர் சா.துரைசாமி, செயலாளர் மா.சென்ராயன், கடத்தூர் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் பெரியார், வேப்பிலைப்பட்டி கிளைத் தலைவர் அரிகரன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் தாளநத்தம் பாண்டியன், சிந்தல்பாடி மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் கோ. குபேந்திரன், பகுத்தறிவு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பாப்பாரப்பட்டி நகர செயலாளர் சுந்தரம், பென்னாகரம் ஒன்றிய தலைவர் கடைமடை அழகேசன், மார்வாடி கிளைக் கழக தலைவர் காந்தி, காரல் மார்க்ஸ், முன்னாள் இளைஞரணி செயலாளர் கருஞ்சட்டை முனியப்பன், வேப்பிலைப்பட்டி மகளிரணி விஜியா தீர்த்தகிரி, தீ.அமுல் செல்வம் , பெரியார் பிஞ்சு சித்தார்த்தன், கடைமடை சங்கரன், தர்மபுரி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ராமச்சந்திரன், கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.சிவலிங்கம், மேனாள் நகர தலைவர் மே.பழனி, கொண்டகரஅள்ளி தலைவர் பிரகாசம், படிப்பக உதவியாளர் மல்லிகா, விடுதலை வாசகர் வஜ்ஜிரம், மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர்ஜுன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment