தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுடனான உறவில் போர்ப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் சில ஆளுநர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 17, 2022

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுடனான உறவில் போர்ப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் சில ஆளுநர்கள்

 பி.டி.டி. ஆச்சாரி

[ஆளுநர் என்பவர் அரசமைப்பு சட்டப்படியான ஓர் உயர் பதவியை வகிப்பவர் ஆவார். அரச மைப்பு சட்டத்தின் நான்கு சுவர்களுக்கும் இடையே மட்டும் செயல்படுவது அவரது கடமையாகும். அத்துடன் மாநில அரசுக்கு அவர் ஒரு நண்பராக, தத்துவ ஆசானாக, வழிகாட்டியாக விளங்க வேண்டும். தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இணையான ஓர் அரசை ஆளுநர் நடத்துவதை அரசமைப்பு சட்டம் அனுமதித்திருக்க வில்லை. அது மட்டுமன்றி,  ஆளுநராக அவரது செயல்பாடுகளுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் அவரை அரசமைப்பு சட்டம் பொறுப்பாளியாக ஆக்கவும் இல்லை. ஆளுநருக்கும் மாநில அரசு களுக்கும் இடையேயான இத்தகைய முரண் பாடுகள், மோதல்கள் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே நடைபெறுவது, அரசியல் ஆதாயங்கள் அரசமைப்பு சட்ட மதிப்பீடுகளை மதிப்பிழக்கச் செய்து விடுகின்றன என்பதையே காட்டுகிறது.]

சில ஆளுநர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதலைப் பற்றிய ஊடக அறிக்கைகள், மாநிலத்தின் அரசமைப்பு சட்டப்படி தலைவரான ஆளுநருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு களுக்கும் இடையேயான மென்மையான உறவு களைப் பற்றி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. எடுத்துக் காட்டாக மகாராட்டிராவில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசுடனான  உறவு சூழ்நிலையைக் கூறலாம். மாநில அரசு பரிந்துரைத்த பேரவைத் தலைவர் தேர்தலுக்கான தேதியை மாநில ஆளுநர் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான உறவு விளக்க இயலாதபடி குழப்பம் மிகுந்ததாக ஆகிவிட்டது. இதன் விளைவாக  பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு சட்ட மன்றத்தால் இயலவில்லை. 

கேரள மாநிலத்தில் ஆளுநருக்கும் மாநில அரசுகுக்கும் இடையே நிலவிய உறவில் ஏற்பட்ட விளக்க முடியாத குழப்பம் மகாராட்டிர மாநிலத்தின் சூழ்நிலைக்கு சற்றும் குறைந்ததாக இருக்கவில்லை. கண்ணூர் பல்கலைக் கழக துணை வேந்தரை மாநில அரசு சட்டப்படி நியமித்ததைத் தொடர்ந்து  துணை வேந்தரை மறுநியமனம் செய்வதற்கு மாநில அரசு தனக்கு அழுத்தம் கொடுத்தது என்று ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் நிர்ப்பந்தத்திற்கு தான் பணிந்துவிட்டதன் மூலம் தான் தவறு செய்து விட்டதாக  ஒப்புக் கொண்ட ஆளுநர்  பல்கலைக் கழக வேந்தராக இனியும் நீடிக்கத் தான் விரும்ப வில்லை என்று கூறியுள்ளார். மாநில ஆளுநராக இருப்பதாலேயே, அவர் ஆளுநராக பதவி வகிக்கும் காலம் வரை  பல்கலைக் கழக வேந்தராகவும் இருக்க வேண்டிய  கட்டாயம் உள்ளது. ஆனால்,  அவ்வாறு பல்கலைக் கழக வேந்தராக நீடிப்பதற்கு ஆளுநர் விரும்பவில்லை;  

மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர் குற்றம் சாட்டுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. மேற்கு வங்காள மாநிலத்தில் இதுவே வாடிக்கையாகப் போய்விட்டது. அதே போல மாநில அமைச்சர வையின் ஆலோசனையை ஆளுநர் ஏற்றுக் கொள் ளாத சூழ்நிலை ராஜஸ்தானிலும், மகாராட்டிரத்தில் மீண்டும் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் ஆளு நர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன என்றாலும், அவை மிகமிக அரிதான சந்தர்ப்பங்களிலேயே எழுந்துள்ளன. ஆனால், இத்தகைய மோதல்கள்  இப்போது அரசமைப்பு சட்டத்தில் அனுமதிக்கப் பட்டுள்ள எல்லைகளைக் கடந்து சென்றுள்ளன என்பது தெளிவாகவே தெரிகிறது.

குறிப்பிட்ட சூழலில்  தனது மதிப்பீட்டின் அடிப்படையிலான அதிகாரம்

நல்ல நேரங்களிலும் கூட,  ஆளுநர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையேயான உறவு  முழுவதும்  எளிமையானதாகவும், பதற்றம் இன்றி யும் இருந்தது இல்லை. ஆளுநரின் பதவி மற்றும் அதன் கடந்த கால வரலாறு என்னும் முழுமையான தொரு கருத்துடன் தொடர்புடையவையாகும். காலனி ஆதிக்க காலத்தில்  இங்கிலாந்து நாட்டு மன் னருக்கு மட்டுமே பதில் சொல்வதற்குக் கடமைப்பட் டுள்ள ஆளுநர்தான் முழுமையான ஆட்சியாளராக விளங்கியவர் ஆவார். ஆளுநர் பதவி பற்றி இந்திய அரசமைப்பு சட்ட, சட்டமன்ற விவாதங்களை நாம் நெருக்கமாகக் கூர்ந்து நோக் கினால்,  ஆளுநர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அதிகாரங்கள் பற்றி பல் வேறு கருத்துகள் நிலவி வந்தன என்பது தெரிய வரும். காலனி ஆட்சி காலத்து ஆளுநர்களைப் போன்ற அதிகாரங்களைப் பெற்றவர்களாக இந்திய மாநில ஆளுநர்களும் இருக்க வேண்டும் என்று கருதிய உறுப்பினர்களும் அந்த சட்ட மன்றத்தில் இருந்தனர். ஆனால்,  அரச மைப்பு சட்டப்படியான மாநில அரசின் தலைவராக மட்டுமே ஆளுநர் இருக்க வேண்டும் என்பதிலும், நிருவாக அதிகாரம் முற்றிலுமாக தேர்ந்து எடுக்கப்பட்ட அரசிடம் இருக்க வேண்டும் என்பதிலும் பி.ஆர்.அம்பேத்கர் தெளிவாக இருந்த போதிலும், சூழ்நிலைக்கு ஏற்ப தனது மதிப்பீட்டின்படி செயல் படுவதற்கான விசேட அதிகாரங்களை ஆளுநருக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்தை அவர் வலி யுறுத்தினார். இதனைப் பொறுத்தவரை,  மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்குக் கீழ்ப்படிந்தவைகளாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் செலுத்தப்பட்ட அம்பேத்கர் - ஆளுநர் களுக்கு இத்தகைய விசேட அதிகாரம் அளிக்க வேண் டும் என்றும், அதன்படி அவர்கள் செயல்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்   கூறினார்.

எனவே, இறுதியாக அரசமைப்பு  சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஆளுநர்,  அரசமைப்பு சட்டத்தில் குறிப்பிட்ட இத்தகைய சிறப்பு அதிகாரங்கள் பெற்றவராக இருந்தார். ஆனால், இந்திய குடியரசு தலைவருக்கு அத்தகைய அதிகா ரங்கள் எவையும் அளிக்கப்படவில்லை.  மேலும் அரசமைப்பு சட்ட 163 ஆவது பிரிவு (அரசமைப்பு சட்ட வரைவின் 143 ஆவது பிரிவு)  1935 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின் 50 ஆவது பிரிவினை கண்களை மூடிக் கொண்டு பின்பற்றுவதாக அமைந்திருந்தது. 

1935 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவுகள் அப்படியே பின்பற்றப்பட்டது மிகப் பெரிய அளவில், ஜனநாயக இந்திய நாட்டில், ஆளுநரின் உண்மையான அதி காரங்கள் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங் களைப் பற்றிய தெளிவற்ற ஒரு தன்மை நிலவியது. 1974ஆம் ஆண்டில் நடைபெற்ற  ஷம்ஷீர் வழக்கில் உச்சநீதிமன்றம் மட் டும்தான் இது பற்றிய சட்டத்துக்கு குழப்பமற்றதொரு நிலையில் சட்ட விளக்கம் அளித்து இந்த தவறை சரி செய்துள்ளது. மாநில அரசின் அதிகாரங்களை பயன்படுத்தும்போது, நன்கு அறியப்பட்ட ஒரு சில விசேட சூழ்நிலைகளைத் தவிர மற்ற சூழ்நிலைகளில், மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோ சனையின்படிதான் ஆளுநர் செயல்பட முடியும் என்று ஷேர்சிங் முதல் நபம் ரெபியா (2016) வரையி லான வழக்குகளில் உச்சநீதிமன்றம் அறிவித் துள்ளது.

மகாராட்டிர மாநில வழக்கு

சட்டமன்ற தலைவர் தேர்தலுக்கு மகாராட்டிர அரசு குறிப்பிட்ட தேதியை ஆளுநர் ஒப்புக் கொள்ள மறுத்தது, அரசமைப்பு சட்டப்படியான அரசு என்பதன் கொள்கைகளுக்கு எதிரானது. அரசமைப்பு சட்ட 178 ஆவது பிரிவில், சட்டமன்ற தலைவர் தேர்தலில் ஆளுநருக்கு எந்த ஒரு பங்களிப்பையும் அரசமைப்பு சட்டம் அளித்திருக்கவில்லை என்ப தையும், அது முழுக்க முழுக்க சட்டமன்றத்தின் வேலைதான் என்பதையும்  இங்கு குறிப்பிட வேண் டியது அவசியமானதாகும். தேர்தல் தேதியை ஆளுநர் நிர்ணயிப்பார் என்று அவை விதிகள் மட்டுமே கூறுகின்றன. அந்த வகையில் தேர்தல் தேதியில் எந்த ஒரு பெரிய முக்கியத்துவமும் இல்லை. அனைத்து சட்டமன்றங்களாலும் பின்பற்றப் படும் நடைமுறையில்,  சட்டமன்றத் தலைவர் தேர் தலுக்கான தேதியை அரசு நிர்ணயம் செய்து சட்ட மன்ற செயலருக்கு தெரிவித்த பிறகு, அது ஆளுநரின் கையெழுத்துக்காக அவரது அலுவலகத்திற்கு அனுப் பப்படும். அந்த தேதியை ஒப்புக் கொள்வது ஆளு நரின் கடமை என்பதால், ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு அதனைப் பற்றி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இப்போது எழும் கேள்வியே, அரசு நிர்ணயித்த சட்டமன்றத் தலைவருக்கான தேர்தல் தேதியை ஆளுநர் ஒப்புக் கொள்ள வில்லை என்றால், அந்த தேர்தல் நடத்தப்பட முடியுமா? ஆளுநரால் தேதி நிர்ணயிக்கப்படுவதில் எந்த வித அரசமைப்பு சட்ட முக்கியத் துவமும் இல்லை. சட்டமன்றத்தால் சட்டமன்றத் தலைவர் தேர்தல் நடத்தப்படுவது என்பதுதான் முக்கியமானதாகும். எனவே சட்டமன்றத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் வழியில் ஆளுநர் குறுக்கே நின்றால், சட்டமன்றத் தலைவர் தேர்தலை ஆளுநர் நிர்ணயிப்பார் என்ற குறிப்பிட்ட விதிக்கு சட்டமன்றம் திருத்தம் அளிப்பதுதான் ஒரே வழியாகும். அரசிடமிருந்து தேர்தல் தேதி பற்றிய செய்தி கிடைத்தவுடன், சட்டமன்ற செயலர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதனைத் தெரிவிக்க முடியும் என்று அந்த விதி திருத்தப்படலாம். அதன் பிறகு ரகசிய வாக்கெடுப்பு மூலமாகவோ அல்லது சட்டமன்ற தீர்மானம் ஒன்றின் மூலமாகவோ சட்ட மன்றத் தலைவர் தேர்தல் நடத்தப்படலாம். சட்ட மன்றத் தலைவர் தேர்தலுக்காக அரசு நிர்ணயித்த தேதியை ஒரு சுதந்திர இந்திய வரலாற்றில் ஆளுநர் ஒப்புக் கொள்வதற்கு மறுத்ததனால், சட்டமன்றத் தலைவர் தேர்தல் நடத்தப்பட முடியவில்லை என்பது இதுவே முதல் முறை என்பதும் இங்கே கூறப்பட வேண்டும். மகாராட்டிர சட்டமன்றம் இப்போது ஒரு சட்டமன்றத் தலைவர் இல்லாமலேயே இருக்கிறது.

கேரள மாநில வழக்கு

கேரள மாநில சூழ்நிலை என்பது மகாராட்டிர மாநில வழக்கினை விட அதிக ஆர்வம் தருவதாக இருப்பதாகும். அங்கு, இந்த முரண்பாடு கண்ணூர் பல்கலைக் கழக துணை வேந்தரை மறு நியமனம் செய்வதைப் பற்றியதாகும். தற்போது இருந்து வரும் துணைவேந்தரை மறுநியமனம் செய்வதற்கான ஓர் ஆலோசனை பல்கலைக் கழகத்தின் இணை வேந்தராக இருக்கும் உயர்கல்வித் துறை அமைச்சர் மூலம் மாநில அரசினால் அனுப்பப்பட்டது. பல்கலைக் கழகத்தின் வாக்கெடுப்பு அதிகாரமற்ற வேந்தராக இருப்பவரும்,   துணைவேந்தரை நியமிப் பவருமான ஆளுநர் அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டு தற்போதுள்ள துணை வேந்தரையே மீண்டும் துணை வேந்தராக நியமித்துவிட்டார். சிறிது காலம் கடந்த பிறகு,  துணைவேந்தர் மறு நியமன ஆணையில்,  மாநில அரசினால் அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே தான் கையெழுத் திட்ட தாகக் குற்றம் சாட்டியதுடன்,  நிர்ப்பந்தம் காரணமாக துணை வேந்தரை தான் மறுநியமனம் செய்தது தவறு என்று ஆளுநர் அறிவித்தார். முன்பிருந்த  துணை வேந்தரை மறுநியமனம் செய்ததில் ஆளுநர் முழுக்க முழுக்க சட்டப்படிதான் செயல்பட்டிருக்கிறார் என் பதை இங்கு குறிப் பிடத்தான் வேண்டும். பல்கலைக் கழக சட்டத்தின்படி, முன்பிருந்த துணை வேந்தரும் மறுநியமனம் செய்யப்படுவதற்கான தகுதியை பெற் றிருப்பவர்தான். அத்தகைய மறுநியமனத்துக்கான  குறிப்பிட்ட நடை முறை ஒன்று பல்கலைக் கழக சட்டத்தில் இடம் பெற்றிருக்கவில்லை என்பதால், அரசினால் அளிக்கப் பட்ட  ஆலோசனை அல்லது பரிந்துரையினை ஆளுநர் ஏற்றுக் கொண்டது சரி யானதுதான். உண்மையைக் கூறுவதானால்,  சட்ட மன்ற எதிர் கட்சித் தலைவர் உள்ளிட்ட எவர் ஒரு வரது ஆலோசனையையும் கூட ஆளுநர் ஏற்றுக் கொள்ளலாம். இதில் குறிப்பிடுவதற்குத் தகுதி பெற்றுள்ள செய்தி என்னவென்றால்,  பல்கலை துணைவேந்தர் மற்றும் இதர பணியாளர்களை நியமனம் செய்வதில் வேந்தரான ஆளுநர் அமைச் சரவையின் ஆலோசனையின்படி செயல்பட வேண் டியதில்லை என்பதோடு, அவர் முழு சுதந்திரத் துடன் செயல்பட இயலும் என்றும், அரசின் ஆலோ சனையை அவரால் நிராகரிக்க முடியும் என்றும் ஆளுநர் தரப்பில் கூறப்படுகிறது.

துணைவேந்தர் மறுநியமன ஆணையில் கையெழுத்திடு முன்னர், தற்போது துணை வேந்தராக இருப்பவரது செயல்பாடு பற்றி மதிப்பீடு செய்து, அவரது தகுதியைப் பற்றி முழுமையாக மனநிறைவு செய்து கொள்ளும் வகையில்  ஆளுநர் இந்த நியமன விஷயத்தில் தனது மனதை செலுத்த வேண்டும் என்று சட்டக் குறிப்புக்கு கோபால கிருஷ்ணனுக்கும் கேரள மாநில அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில், கேரள உயர்நீதி மன்றம் விளக்கம் அளித்துள்ளது. கேரள ஆளுநர் இப்போதும் அதனையே செய்திருப்பார் என்று ஊகிக்கப் படுகிறது. அப்படி இருக்கும்போது, ஆளுநர் இந்த விஷயத்தில் மாநில அரசு மீது கடுமையான குற்றச் சாட்டுகளை ஏன் சாட்டியுள்ளார் என்பதும், இந்த நடைமுறையில் தனக்குத் தானே  இழிவுபடுத்திக் கொண்டிருப்பது ஏன் என்பதும் வியப்பும் குழப்பமும் அளிப்பதாகவே உள்ளது. இந்த குழப்பத்தை மேலும் பெரிதாக்கும் வகையில், இனி தான் பல்கலைக் கழக வேந்தராக செயல்படப் போவதில்லை என்று ஆளுநர் அறிவித்துள்ளார். இவ்வாறு வாக்கெடுப்பு அதிகாரமற்ற வேந்தர் பதவியின் பொறுப்பை, ஆளுநர் என்ற அடிப்படைப் பதவியை விட்டு விலகாமல், துறப்பது என்பது எவராலுமே செய்ய இயலாது. 

விருப்பு வெறுப்பற்று இருப்பதே இதன் சாரம்

இவை அனைத்தும் மிகுந்த குழப்பத்தை விளை விக்கும் சூழ்நிலைகளாகும். ஆளுநர் என்பவர் அரசமைப்பு சட்டப்படியான ஓர் உயர் பதவியை வகிப்பவர் ஆவார். அரசமைப்பு சட்டத்தின் நான்கு சுவர்களுக்கும் இடையே மட்டும் செயல்படுவது அவரது கடமையாகும். அத்துடன் மாநில அரசுக்கு அவர் ஒரு நண்பராக, தத்துவ ஆசானாக, வழி காட்டியாக விளங்க வேண்டும். தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இணையான ஓர் அரசை ஆளுநர் நடத்துவதை அரசமைப்பு சட்டம் அனுமதித்திருக்க வில்லை. அது மட்டுமன்றி,  ஆளுநராக அவரது செயல்பாடுகளுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் அவரை அரசமைப்பு சட்டம் பொறுப்பாளியாக ஆக்கவும் இல்லை. ஆளுநருக்கும் மாநில அரசு களுக்கும் இடையேயான இத்தகைய முரண்பாடுகள், மோதல்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே நடைபெறுவது, அரசியல் ஆதாயங்கள் அரசமைப்பு சட்ட மதிப்பீடுகளை மதிப்பிழக்கச் செய்துவிடுகின்றன என்பதையே காட்டுகிறது. அரச மைப்பு சட்ட - சட்டமன்ற விவாதங்களை கூர்மை யாக ஊடுருவிப் பார்ப்போமானால், பண்டிட் தாகூர் தாஸ் பார்கவா என்னும் சட்டமன்ற உறுப்பினரின் அறிவார்ந்த சொற்கள்தான் நமது நினைவுக்கு வருகிறது. ஆளுநர் என்பவர் கட்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டிய ஒரு மனிதர் ஆவார். மாநில அரசையோ அல்லது அமைச்சர்களையோ விருப்பு வெறுப்பற்ற நிலையில் அவர் பார்க்க வேண்டும். இந்தியாவின் பண்டைய கலாச்சாரத்தின் சாரமே இவ்வாறு விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் இருப்பதுதான். ஆனால் பண்டிட் தாகூர் தாசின் குரல் பாலை வனத்தில் எதி ரொலிக்கும் குரலாகவே மாறி விட்டது என்பதுதான் இதில் உள்ள சோகமும் அவலமும்.

நன்றி: 'தி இந்து' 10-01-2022
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment