2021ஆம் ஆண்டு என்று கூறப்படும் போது - உலகளவில் கரோனா என்னும் உயிர்க் கொல்லி நோயின் பயங்கரத்தை நினைக்காமல் இருக்க முடியாது.
மனித அறிவுக்கு உள்ள ஆற்றல் எதையும் சந்திக்கும் வலு கொண்டது என்பதற்கு அடையாளமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக் கப்பட்டு கரோனாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்தது.
மீண்டும் பல உருவங்களில் நோய்த் தொற்று அச்சுறுத்தி னாலும், அதற்காக மனிதன் நொடிந்து விழ வேண்டிய அவசியம் இல்லை - அவற்றையும் எதிர் கொள்ள முடியும்.
அதேநேரத்தில் விலை மதிக்க முடியாத மனித உயிர்களை நாடு பறி கொடுத்துள்ளது என்பது நம் இதயத்தை அழுத்திப் பிசைந்து கொண்டுள்ளது.
இந்தக் கரோனா தொற்றால் உயிர் இழப்பு மட்டுமல்ல - மக்களின் வாழ்வாதாரம் சிதைந்தது. வேலையின்மை தன் வேலையைக் காட்டியது. இந்தப் பொல்லாத் தாக்குதலுக்குப் பிறகும் தாக்குப் பிடித்து நிற்கிறோம் என்பது சாதாரணமானதல்ல.
இன்னொன்றையும் இன்றியமையாத ஒன்றாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. அரசுகள் பலவகையான ஏற்பாடுகளையும், திட்டங்களையும் செயல்படுத்தினாலும் திருவாளர் பொது மக்களிடத்தில் தெறித்துக் காணப்பட்ட பொறுப்பின்மையைச் சொல்லத்தான் வேண்டும்.
முகக்கவசம் என்பதற்கு முன்னுரிமை - முன்னுரிமை என்று கரடியாகக் கத்தினாலும் எத்தனை விழுக்காடு மக்கள் இதில் நாணயமாக நடந்து கொண்டார்கள்?
அதுவும் கிராமப் பகுதிகளில் இது நகரப்புரத்து நோய் என்று பரவலாகப் பேசப்பட்டதையும் அறிவோம். நகரப்புறங்களில்கூட குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் இதற்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமை, நாட்கள் நகர நகர அலட்சியம் ஆக்கிரமித்துக் கொண்டது என்பது உண்மையே!
இனி அடுத்தடுத்து எதிர் கொள்ள நேரும் ஒமைக்ரான் போன்றவற்றை ஒழித்துக் கட்ட, மனித உயிர்கள் காப்பற்றப்பட, கடந்த காலத்தில் கிடைத்த கசப்பான அனுபவத்தின் மூலமாவது முகக்கவசமும், தனி மனித இடைவெளி, கைகளை சுத்திகரித்தல் என்ற முத்தான - எளிதாக நம்மால் செய்யக் கூடிய செயல்களைப் புறந்தள்ளாமல் இருந்தால் புதிய - நோய்ப் படை எடுப்பையும் கூசாமல் புறந்தள்ள முடியும் - முடியும்!
இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் முதலாளித்துவ கார்ப்பரேட் சிந்தனையின் அடிப்படை யில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் - குறிப்பாக மூன்று வேளாண் சட்டங்கள் - அவற்றை எதிர்த்து வட மாநிலங்களில் 15 மாதங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இயற்கை நிலை மாறுபாடான நிலையிலும் நெஞ்சை நிமிர்த்தி நின்ற அந்தப் போர்க்குணம் ஒப்பற்றது- உலக வரலாற்றின் தலையில் சூட்டப்பட வேண்டிய விலை மதிக்க முடியாத நவரத்தின மகுடமாகும். இறுதி வெற்றி என்பது ஜனநாயகத்தில் மக்கள் நாயகமே என்ற பாடமும் ஆளும் வர்க்கத்திற்கு அளவுக்கு அதிகமாகவே போதிக்கப்பட்டு விட்டது.
சமூக நீதிப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, மாநிலங்களின் உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, மதச்சார்பின்மை சமாச்சாரமாக இருந்தாலும் சரி, ஒருமித்த மக்கள் எழுச்சி எனும் பலத்தின் முன் ஆட்சி அதிகார மலைகள் தூள் தூளாகி விடும் என்ற வரலாறு நிலை நிறுத்தப்பட்டு விட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - 10 ஆண்டுகாலம் ஆட்சி என்ற ஒன்று இருந்ததா என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இருந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட்டு தி.மு.க. ஆட்சி மலர்ந்து மணம் வீசிக் கொண்டு இருக்கிறது.
கரோனா என்னும் கொள்ளை நோய், கனமழையால் உடைப்பெடுத்த வெள்ளம் - எனும் இரு மிகப் பெரிய சவாலை சமாளிப்பதிலேயே முழுக் கவனம் செலுத்தும்படி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது என்றாலும் அவற்றையும் முறையாக எதிர் கொண்டு, அதையும் தாண்டி மக்கள் நலப் பணிகளிலும் நாளும் நாளும் வளர்ச்சியை நுகரும் நிலை.
எதிர்க் கட்சிகளேகூட உருப்படியாக குற்றப் பத்திரிகை படிக்க முடியாத தமிழ்நாடு நல்லாட்சி என்ற நற்பெயர் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே பரவலாக ஏற்கப்படும் நிலையே!
தந்தை பெரியார் பிறந்த திராவிடப்பூமியின் விழுமிய சமூகநீதிக் கோட்பாட்டில், தமிழ்நாடு ஆட்சி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பொன்னடியே!
தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்த அந்த அறிவிப்பிலேயே - அதனையொட்டி எடுக்கப்படும் உறுதி மொழியிலேயே ஒட்டு மொத்த இவ்வாட்சியின் கனபரிமானம் எத்தகையது என்பதற்கான சூத்திரமாகும்.
சமூகநீதி சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண் காணிக்க முதல் நிலைக் குழு என்பது - சமூகநீதிக்கு எதிராகவே ஒவ்வொரு காயையும் நகர்த்தும் ஒன்றிய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியமாகும்.
ஒன்றிய அரசுக்கே வழிகாட்டும் அரசு தி.மு.க. அரசு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறியது வெறும் சொற்கள் அல்ல - துல்லியமான கணிப்பேயாகும்.
"சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" என்று மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் சூட்டியிருப்பது வெறும் பட்டமல்ல, - உண்மையின் விளக்கமாகும்.
2021இல் நிகழ்ந்த கசப்புகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட்டு, 2022ஆம் ஆண்டு நன்னம்பிக்கை அளிக்கும் ஆண்டாக ஒளிவீசட்டும்! மத மாச்சரியம், ஜாதி சச்சரவு என்னும் பேதங்களின் வேர்கள் அறுபடட்டும்!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment