சென்னை, ஜன.17 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் திருநாள் சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழர் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளுடன், தகுதி வாய்ந்த தலைமையாளர்களுக்கு பெரியார் விருது வழங்கி திராவிடர் திருநாளாக மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது வழமை. 28ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் கரோனா காலக் கட்டுப்பாடுகளை ஏற்று காணொலி வாயிலாக ஜனவரி 16, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
இந்நிகழ்வில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் செயலாளரும் மேனாள் மாவட்ட நீதிபதியுமான இரா. பரஞ்சோதி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் தலைவரும், பெரியார் புத்தக நிலையத்தின் மேலாளருமான த.க. நடராசன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்பித்தார். பெரியார் பேருரையாளர் மா.நன்னன் அவர்களின் மகள் அவ்வை நிகழ்ச்சியைப் பற்றி அறிமுகம் செய்வித்து உரையாற்றினார். மூவருமே பொங்கல் என்பது ஜாதி, மத பேமில்லாமல் மொழி, இனம் கடந்து அனைவரும் சேர்ந்து கொண்டாடும் அறிவுத் திருவிழா, அறுவடைத் திருவிழா உழவரைப் போற்றும் நாள், அறிவியல் மனப்பான்மைக்கேற்ப கொண்டாடப்படும் நன்நாள் என்பதை சுட்டிக் காட்டினர்.
திராவிடர் இயக்கத்தின் தொண்டு
தொடர்ந்து திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி கருத்துரையாற்றினார். அவர் தனது உரையில், உலக அளவில் ஆளுகின்ற மன்னர்களின் பெயர்களில் ஆண்டுக் கணக்குகள் வழங்கி வந்திருக்கின்றன. ஆனால், நாம்தான் திருவள்ளுவர் என்னும் சான்றோர் ஒருவரின் பெயரில் ஆண்டு தொடக்க நாளாக கடைப்பிடித்து வருகிறோம். இது திராவிடர் இயக்கம் தமிழுக்குக் செய்த பெரும் தொண்டு என்றார். எல்லா நாடுகளிலும் வசந்த காலத்தில்தான் புத்தாண்டு தொடங்குகிறது. இங்கு மட்டும் ஆரியத்தின் சூழ்ச்சியால் வெயில் கொளுத்தும் கோடையான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அந்தப் பண்பாட்டு படையெடுப்பிலிருந்து திராவிடர் இயக்கம் மீட்டுருவாக்கம் செய்ததுதான் பொங்கல் விழா! தீபாவளியைப் போன்ற ஆரியப் பண்டிகைகளை ஒழித்துக்கட்ட பெரியார் நமக்கு காட்டியிருக்கும் வழிதான் தமிழர் திருநாள் என்று விளக்கமாகப் பேசினார்.
திராவிடர்களின் சிந்தனைச் செழுமை
அவரைத் தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான முனைவர் ம. ராஜேந்திரன் பேசினார். அவர் தனது உரையில், தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் கொண்டாடப்படுகிறது என்பது திராவிடர்களின் சிந்தனைச் செழுமையைக் காட்டுகிறது என்றார். தொடர்ந்து பாபிலோனியா, கிரேக்கம், ரிக் வேதம், விஷ்ணு புராணம் போன்றவற்றில் உலகம் தோன்றிய கதைகளைச் சொல்லி, அந்த மூடநம்பிக்கைகளுக்கு மாற்றாக அறிவுதான் உயிர் என்னும் சிந்தனைக்கு உரிமையாளர்கள் நாம் என்பதை மறுபடியும் வலியுறுத்தி, இரண்டு சிந்தனைகள் உலகை ஆள்கின்றன. ஒன்று உண்மை, மற்றொன்று பொய், இதில் நாம் உண்மையின் பக்கம் நின்று மானுடம் வாழ்வதற்கான சிந்தனைகளை வழங்கி வருகிறோம். அதில் ஒன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா என்று முடித்தார்.
தமிழர் தலைவர் உரை
நிகழ்வின் இறுதியில் திராவிடர் கழகத்தின் தலைவரும், தமிழர் தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி சிறப்புரையை எழுச்சிகரமான உரையாக வழங்கிச் சிறப்பித்தார்.
அவர் தனது உரையில், கொடுமையான தொற்றுக் காலத்திலும் நிகழ்ச்சி நடைபெறுவதை சுட்டிக் காட்டி இதன் அவசியத்தை சொல்லவும் செய்தார்.
பொங்கலைக் கொண்டாடும் போது, "பொங்கலோ! பொங்கல்!" என்று சொல்லுவது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது நமது இன எழுச்சியின் அடையாளம் என்று ஒருபுது சிந்தனையை தொட்டுக் காட்டினார். அதற்கு எடுத்துக்காட்டாக, "மனுவின் மொழி அறமானது ஒரு நாள், அதை மாற்றி அமைத்த நாளே தமிழர் திருநாள்!" என்று கூறினார். தொடர்ந்து மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளைத் தனது உரையில் முன் வைத்தார்.
ஆரியர்கள் வந்தேறிகள்தான்
கோரக்பூர் அய்.அய்.டி.யில் பொறியியல் படிப்பைக் கற்றுத் தர வேண்டிய நிறுவனம் சம்பந்தமே இல்லாமல் வரலாற்றுத் திரிபாக, "ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல" என்று நாள்காட்டி வெளியிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, ஆரியர்களுக்கு குற்ற உணர்ச்சி உள்ளது. அதனால்தான் அவர்கள் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முயல்கின்றனர் பண்பாட்டு படையெடுப்பு என்று சொல்லும்போது, ஆரியர்கள் படையெடுத்து வரவில்லை என்பதை உணர வேண்டும். அவர்கள் வந்தேறிகள்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக பாடம் எடுப்பது போல் கூறினார்.
அதற்கு சான்று காட்டுவது போல, "ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை விரட்டுவதுபோல்" என்றொரு கிராமப் பழமொழியை நினைவூட்டினார். இன்று நடந்து கொண்டிருக்கும் அனைத்து பண்டிகைகளையும் திணித்து, திராவிடர்களைக் கொலை செய்து, வரலாற்றைத் திரிபு செய்தது ஆரியர்கள்தான் என்பதை முகத்தில் அறைந்ததைப் போல எடுத்தியம்பினார். அதற்கு,
"வஞ்சகர் வந்தார்; தமிழால் செழித்தார்;
பின்னர் தமிழையே பழித்தார்.
நம் செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாம் உணர்ந்தோம் இன்று
அவர் அஞ்சி விழித்தார்"
என்ற புரட்சிக் கவிஞரின் பாடலை துணைக்கழைத்து தனது கருத்தைக் கேட்போரின் சிந்தைக்குள் அழுத்தமாக பதிய வைத்தார்.
இது ஒரு யுகப் புரட்சி!
இறுதியாக தனது உரையின் சாரமாக, "தமிழ்ப் புத்தாண்டாக பொங்கல் விழாவை மட்டும் கொண்டாடுகிறோம் என்று எண்ணாதீர்! இது ஒரு யுகப் புரட்சி! பொங்கல் விழா என்பது ஒரு சமுதாயப் புரட்சி! நமது பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறோம் என்கிற சிந்தனையைப் பெற்று, தொடர்ந்து நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் அனைத்து பண்பாட்டுப் படையெடுப்புகளையும் மீட்டுருவாக்கம் செய்வதற்கான உறுதி ஏற்கும் நாளாக தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவை அமைத்துக் கொள்வோம்" என்று கூறி நிறைவு செய்தார். தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்றிருக்கும் பெங்களூர் மீனாட்சி சுந்தரம் (எ) முத்துச்செல்வன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் அவர்களும், தோழர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியை திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தொகுத்து வழங்கினார். தமிழ்ப் புத்தாண்டையும், பொங்கல் விழாவையும் கொண்டாடுவதற்காக அவரவர்களின் ஊர்களுக்குச் சென்ற தோழர்கள் ஆங்காங்கே இருந்த வண்ணமே காணொலியில் பங்கு பெற்று பயன் பெற்றனர். குறிப்பாக, கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன், பெங்களூர் மீனாட்சி சுந்தரம் (எ) முத்துச்செல்வன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், மருத்துவர் மீனாம்பாள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் தேவதாஸ், பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ. கோபால் உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்றனர்.
தொகுப்பு: உடுமலை
No comments:
Post a Comment