அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது வழக்குப் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது வழக்குப் பதிவு

கோவை, ஜன.2  காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்டோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்கள் பணியைத் தடுத்த ஆர்.எஸ்.எஸ் மாவட்டச் செயலர் உட்பட 5 பேர் மீது பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இப்பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன்னர்  திராவிட இயக்கங்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களைக் காவலர்கள் கைது செய்தனர். இப்பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 31.12.2021 அன்று நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயிற்சி முகாம் நடக்கும் பள்ளி அருகே, மாநகரக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட, மாநகரக் காவல்துறையின் வடக்கு உட்கோட்ட துணை ஆணையர் ஜெயச்சந்திரன் அங்கு வந்தார்.

அப்போது பள்ளியின் வாசலில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்பினர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வளாகத்துக்குள் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் உள்ளே செல்ல மறுத்து, நுழைவாயிலில் நின்றபடி, துணை ஆணையரிடமும், அங்கிருந்த பிற காவலர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், எதிர்த்தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மாவட்டச் செயலர் முருகன், பாஜகவின் காளிதாஸ், இந்து முன்னணி வடக்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அருண், கருப்பசாமி ஆகிய 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன் பேரில், பீளமேடு காவல்துறையினர் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக ஒன்றுகூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மேற்கண்ட 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்காக

17,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்

செங்கல்பட்டு, ஜன.2 செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட் டங்களில் 42  வழித்தடங்களில்  நிறுத்தப்பட்ட பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீண்டும் துவங்கி வைத்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே நடந்த நிகழ்ச்சிக்குசிறு, குறு, நடுத்தர தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு, பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், ‘‘பொங்கல் கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் சிரமமின்றியும், எந்தவித இடையூறும் இன்றி சொந்த ஊர்களுக்கு  சென்று வர, 17,000  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கடந்த ஆட்சியின் போது கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட நான்காயிரம் பேருந்துகளை, மீண்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதுபோக்குவரத்து துறையில், 6000 பேர் புதிதாக பணி நியமனம் செய்ய உள்ளோம். போக்குவரத்து துறைக்கு புதிதாக 2212 பேருந்துகள் வாங்குவதற்கு அரசிடம் நிதி கேட்டு உள்ளோம். விரைவில் அவை வாங்கப்படும். செங்கல்பட்டு நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள போக்குவரத்து பணிமனையை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment