மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடுவது பாராட்டத்தக்கது - வரவேற்கத்தக்கது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 17, 2022

மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடுவது பாராட்டத்தக்கது - வரவேற்கத்தக்கது!

மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர் களின் பிறந்த நாளை  அரசு விழாவாகக் கொண் டாடுவது பாராட்டத்தக்கது - வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அ.தி.மு.க.வின் நிறுவனரும், வள்ளலாகவே வாழ்ந்து வரலாறு படைத்தவருமான மேனாள் முதலமைச்சர்எம்.ஜி.ஆர். அவர்களது 105 ஆம் ஆண்டு பிறந்த நாளை தமிழ்நாடு அரசு விழாவாகவே தி.மு.க. ஆட்சி இன்று (17.1.2022) நடத்துவது பொதுவாழ்வின் சிறந்த விழுமியங்களில் ஒன்றாகும்.

நல்ல அத்தியாயத்தின் தொடக்கம் அது!

முன்பு கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் இதற்கு முன்னோட்டமாக, மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப் பெற்றது (1998 ஆம் ஆண்டு). நல்ல அத்தியாயத்தின் தொடக்கம் அது!

அரசியலில் கருத்து வேறுபாடுகளும், அவ்வப் போது சில கசப்புணர்வுகளும் தலைவர்கள் - கட்சி களிடையே வருவது உண்டு. அதைக் கடைசிவரை கொண்டு செலுத்துவது ஏற்கத்தக்கதல்ல.

பொதுவாழ்வில் நல்ல திருப்பம்!

இடையில்தான் இதுபோன்ற நிலைகள் முளைத் தன - கிளைத்தன - எதிர்க்கட்சிகள் - எதிரிக்கட்சி யாகவே திகழும் விரும்பத்தகாத நிலை. அது மெல்ல விடைபெறுவது பொதுவாழ்வில் நல்ல திருப்பமே ஆகும்!

சமூகநீதி வரலாற்றில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.9,000 வருமான வரம்பை அவர் கொண்டு வந்தபோது ஏற்பட்ட பெருங்கிளர்ச்சி, அரசியல் தோல்வி- அதன் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் போன்றனவற்றின்மூலம் அவர் மிகவும் தெளிவுற்று,  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருந்த 31 சதவிகிதத்தை 50  சதவிகிதம் என்று உயர்த்தி, ஒட்டுமொத்தத்தில் (ஏற்கெனவே எஸ்.சி., 18), 68 என்றாகி, பிறகு 69 சதவிகிதம் (எஸ்.டி. 1) வர, முழுக் காரணமானார் அவரென்பது என்றும் மறைக்கப்பட முடியாத ஒன்று. சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லும்கூட!

பாராட்டத்தக்கது; பின்பற்றத்தக்கது!

எனவே, அரசு கொண்டாடும் விழாவாகவே அது தொடர்வது பாராட்டத்தக்கது; பின்பற்றத்தக்கது.

இந்த அரசியல் நாகரிகம் தொடரட்டும்!

கி.வீரமணி 
தலைவர்,
திராவிடர் கழகம்
      சென்னை 
        17.1.2022


 


No comments:

Post a Comment