நாடு முழுவதும் சமூகநீதியை மலரச் செய்வதே என் லட்சியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 11, 2022

நாடு முழுவதும் சமூகநீதியை மலரச் செய்வதே என் லட்சியம்!

 இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கக்கூடிய இந்தத் தீர்ப்பை தந்தை பெரியாருக்குக் கிடைத்த காணிக்கையாகக் கருதுகிறேன்!

முதலமைச்சர் மு..ஸ்டாலின் சூளுரை

சென்னை, ஜன. 11-  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கக்கூடிய இந்த தீர்ப்பை தந்தை பெரியாருக்குக் கிடைத்த காணிக்கையாகக் கருதுகிறேன்! நாடு முழுவதும் சமூக நீதியை மலரச் செய்வதே என் லட்சியம்! என தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் சூளுரைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்மு..ஸ்டாலின் நேற்று (10.1.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை வருமாறு,

ஈரோடு மாநகராட்சி 2008 முதல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 2011 முதல் விரிவடைந்த மாநகராட்சியாகச் செயல்பட்டு வருகிறது.  109.52 சதுர கி.மீ பரப்பளவில் அமைந் துள்ளது. இம்மாநகராட்சி மக்களுடைய வசதிக்காக மாபெரும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட் டிருக்கிறது என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவிக்க நான் பெருமை அடைகிறேன்.

இந்தத் திட்ட அறிக்கையில், பெருந்துறையில் ஒரு பேருந்து நிலையமும், ஈரோடு புறநகர்ப் பகுதிகளில் இரண்டு பேருந்து நிலையங்கள் என்று மூன்று பேருந்து நிலையங்கள் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

சோலார் பகுதியில் ஒரு புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கையில் இருக்கிறது.  இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, கரூர், பழனி, வெள்ளக் கோவில் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

சத்தி சாலையில் மற்றொரு பேருந்து நிலையம் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து சத்தி, கோவை, திருப்பூர், ஊட்டி மார்க்கம் மற்றும் கருநாடக மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

அடுத்து இன்னொரு முக்கியமான அறிவிப்பையும் இந்த நிகழ்ச்சியில் வெளியிட நான் விரும்புகிறேன்.

தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டது

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியானது 1954-இல் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கல்லூரி யில் இளநிலைப் பட்ட வகுப்பு பதினொன்றும், முதுநிலைப் பட்ட வகுப்பு மூன்றும் இருக்கிறது. 1400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்தக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்தக் கல்லூரி யானது, அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் 1998-ஆம் ஆண்டு முதல் கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அவர்களைப் பாதுகாவலராகக் கொண்டு, இப்போது செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்கக் கோரி ஏறக்குறைய கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதை நிறைவேற்றக்கூடிய வகையில், இந்தக் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.       

இப்படி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் - புதிய திட்டங்களை தொடங்கி வைத்தல் - முடிந்த திட்டங்களை மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வருதல் ஆகிய விழாக்களைத் தொடர்ந்து இந்த அரசு நடத்திக் கொண்டு வருகிறது.

இதுவரை நான் நேரடியாக கலந்துகொண்டு, 714 கோடி ரூபாய் மதிப்பிலான 185 அரசு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்திருப்பது மட்டுமல்லாமல், 339 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 190 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 லட்சத்து 18 ஆயிரத்து 835 பயனாளிகளுக்கு 3 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறேன். 

மக்கள் விழா

இன்று ஈரோட்டில் இந்த விழா நடக்கிறது.  வரிசையாக எல்லா மாவட்டங்களிலும் இந்த விழாக்கள் நடக்க இருக்கிறது.  இவற்றை அரசு விழாக்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதைவிட நான் பெருமையாக சொல்வது, மக்கள் விழா, அதுதான் முக்கியம்.

உங்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசு உங்களுக்கான பல்வேறு பணிகளைச் செய்வது மட்டுமல்ல, கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்காகவே என்னை நான் அர்ப்பணித்திருக்கிறேன்.

கடந்த 5-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆளுநர் அவர்கள் உரையாற்றினார்கள். அவர் உரையாற்றும்போது, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை - நாம் ஒவ்வொரு துறை வாயிலாகக் கொண்டு வரும் திட்டங்களை மனம் திறந்து ஆளுநர் அவர்கள் பாராட்டிப் பேசியிருக்கிறார்.  பொறுப் பேற்ற நொடியில் இருந்து நான் மக்கள் பணியாற்றி வருவதாக ஆளுநர் அவர்கள் பாராட்டினார்கள்.

தொண்டாற்றப் பழக்கினார்

அப்படித்தான் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களை யெல்லாம் பழக்கி வைத்திருக்கிறார். தன்னை, பெரியார் எப்படி பழக்கினார் என்றும் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களிடத்தில் அடிக்கடி சொல்வார்.  யானை தன்னுடைய குட்டியை எப்படிப் பழக்குமோ, அப்படி பெரியார் எங்களை மக்கள் தொண்டாற்றப் பழக்கினார் என்று கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

அதைப் போலத்தான் கலைஞர் அவர்களும் எங்களைப் பழக்கினார். மக்களுக்கு ஒரு துன்பம், துயரம் என்றால் துடிக்கும் உள்ளம் கொண்டவர்களாக எங்களை வடிவமைத்தி ருக்கிறார். அந்த அடிப்படையில்தான் மக்கள் பணியை நாங்கள் ஆற்றிக்கொண்டு இருக்கிறோம்.

இந்தியாவுக்கே சமூகநீதியை...

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியாவுக்கே சமூகநீதியை உருவாக்கிக் கொடுக்கும் பெரும் பணியை நாம் செய்து வருகிறோம்.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்காக நாம் எடுத்த சட்டரீதியான முயற்சிகள் தான், அகில இந்தியா முழுமைக்குமான பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு இந்தச் செய்தி இனிப்புச் செய்தியாக அமைந்திருக்கிறது.

தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில், அரசு விழாவில் பங்கெடுக்கின்ற இந்த நேரத்தில், உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்பு என்பது பெரியாருக்குக் கிடைத்த காணிக்கையாக நான் நினைக்கிறேன். அவர் உருவாக்கிக் கொடுத்த சமூகநீதித் தத்துவத்தை இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் காலமானது உருவாகி இருக்கிறது. இதைவிட பெரியாருக்கு உண்மையான தொண்டு நிச்சயமாக அமையாது.

அனைத்து வளமும் நலமும் கொண்ட தமிழ்நாட்டை உருவாக்குவதும் - அகில இந்தியா முழுமைக்கும் மாநில சுயாட்சி, சமூகநீதிக் கொள்கையை மலரச் செய்வதையும் நான் என்னுடைய வாழ்க்கையின் லட்சியமாகக் கொண் டுள்ளேன்.

இந்த இலட்சியப் பயணம் தொடரும் என்பதைச் சொல்லி இந்த நிகழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கக்கூடிய -குறிப்பாக பயனாளிப் பெருமக்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் வாழ்த்துகளையும்  தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன். 

நன்றி; வணக்கம்!

- இவ்வாறு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உரையாற்றினார்.

No comments:

Post a Comment