உடல் வளர்ச்சிக்கும், கட்டமைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் ‘மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ்’ எனப்படும் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை முக்கியமானவை. இதில் ‘கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து’ உடல் இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. இது தினமும் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் முதல் பொரித்த உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் வரை அனைத்திலும் உள்ளது.
கார்போஹைட்ரேட் செரிமானம் ஆகும்போது குளுக்கோஸாக மாறுகிறது. இந்த குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலின் பல்வேறு செல்கள் மற்றும் திசுக்களுக்கு அனுப்பப்படுகிறது. செல்கள் இதன் மூலமாகவே உடல் இயக்கத்துக்குத் தேவையான சக்தியைப் பெறுகிறது.
கார்போஹைட்ரேட்டில் எளிமையானது, சிக்கலானது என இரண்டு வகைகள் உள்ளது. எளிமையான கார்போஹைட்ரேட் எளிதில் செரிக்கப்பட்டு உடலில் உறிஞ்சப்படுகிறது. பசியினால் சோர்வாக இருக்கும்போது இந்த எளிமையான கார்போஹைட்ரேட் உணவைத்தான் சாப்பிடுகிறோம். இது உடலுக்கு விரைவான சக்தியைக் கொடுக்கிறது. மேலும், எளிமையான கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்த சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இவை சோடா, பிஸ்கட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ் போன்றவற்றில் இருக்கும். இவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது உடல் எடை அதிகரிப்பு, பதற்றம் மற்றும் எரிச்சல் உணர்வு போன்றவை உண்டாகும். சிக்கலான கார்போஹைட்ரேட்டை உடல் கிரகித்துக்கொள்ள நீண்ட நேரம் ஆகும். இது முழு கோதுமை ரொட்டி, தானியம், சோளம், ஓட்ஸ், பட்டாணி மற்றும் அரிசி போன்றவற்றில் உள்ளது. இவை உடலுக்கு நன்மை தரும்.
No comments:
Post a Comment