மனிதநேயத்தால்தான் துடைக்கவேண்டும்!
'மதவெறி கண்டன நாள்! மண்டலும் - கமண்டலும்'
காணொலி சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை
சென்னை, ஜன.31 இந்திய வரலாற்றில் படிந்த ரத்தக் கறையைத் துடைக்கவேண்டும்; எப்படி துடைப்பது? மனிதநேயத்தால்தான் துடைக்கவேண்டும். ஆனால், மேலும் மேலும் அந்த ரத்தக் கறையை அவர்கள் அதிகமாக, புத்தம் புதிதாக ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மண்டலும் - கமண்டலும் காணொலி சிறப்புக் கூட்டம்
நேற்று (30.1.2022) மாலை ''மதவெறி கண்டன நாள் - மண்டலும் - கமண்டலும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி சிறப்புக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய வரவேற் புரையாற்றிய கழக வழக்குரைஞர் தோழர் குமாரதேவன் அவர்களே,
தொடக்க உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் அருமைத் தோழர் துரை.சந்திரசேகரன் அவர்களே,
எனக்கு முன்பாக, சிறப்புரையாற்றிய கழகப் பிரச் சார செயலாளர் தோழர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே!
மண்டலின் பங்கு என்ன?
இந்நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டிருக்கக் கூடிய அருமை இயக்க உறவுகளே, கொள்கை உறவுகளே, அதற்கப்பாற்பட்ட பொது நிலையாளர்களே - இன்றைய தினம் மதவெறிக் கண்டன நாள் - மனிதநேயத்தைப் போற்றுகின்ற நாள் - மிகப்பெரிய அளவிற்கு இந்திய வரலாற்றில், படிந்த கறையை, நம்முடைய காலத்தில் அல்லது அடுத்த தலைமுறையிலே போக்கியாக வேண்டும் என்ற அளவிலே உறுதியேற்கின்ற நாளாக இந்த நாளை அமைக்கவேண்டும் என்பதிலே, மண்டலின் பங்கு என்ன? என்பது குறித்து இங்கே எனக்கு முன் உரையாற்றிய அருள்மொழி அவர்கள் குறிப்பிட்டதைப்போல,
'மண்டல்' என்றால் சமூகநீதி -
'கமண்டல்' என்றால் மதவெறி!
கமண்டலும்-மதவெறியும் இன்றைய தினம் எச்சரிக்கையோடு பார்க்கவேண்டிய நோய்கள் - மற்ற நோய்களுக்கு மருந்து உண்டு. ஆனால், இதற்கு ஒரே மருந்து ஈரோட்டு மருந்தைத் தவிர வேறு கிடையாது என்ற அளவிலேதான், அதை விளக்குவதற்காக இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை நாம் வழமைபோல் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
காந்தியார் படுகொலை ஏன் நிகழ்ந்தது?
காந்தியார் அவர்களுடைய படுகொலை ஏன் நிகழ்ந்தது? அதற்கு என்ன பின்னணி? என்பதை யெல்லாம் இங்கு நம்முடைய தோழர்கள் அழகாக எடுத்துரைத்தார்கள்.
அத்தனை செய்திகளையும் நான் அப்படியே உள்வாங்கிக்கொண்டு, முன்னுரையாக வைத்துக் கொண்டு, மேலும் தொடர்ந்தால், இந்தக் கூட்டத் தினுடைய கேட்பாளர்களுக்கு மிகப்பெரிய வகுப் பறைபோல அது அமையக்கூடும்.
அந்த வகையிலே இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
அருமைத் தோழர்களே, காந்தியாரைப் பொறுத்த வரையில் இரண்டு செய்திகள். அதை அழகாகச் சொன்னார்கள்.
அவரைப் பொறுத்தவரையில், அவர் கடைசி வரையிலே தான் ஒரு ஹிந்து என்று சொல்லிக் கொண்டவர். அதை மறுத்தவர் அல்ல.
ஆனால், அதேநேரத்தில் அவர் பார்த்த பார்வை வேறு; மற்றவர்கள் இன்றைக்கு ஹிந்துத்துவாக்காரர் கள், தங்களை ஹிந்து என்று அழைத்துக் கொள்கின்ற முறை வேறு என்பதைத் தெளிவாக அவருடைய போக்கு உணர்த்தியது.
இதுதான் அவர்களை வெறுப்படையச் செய்தது.
இதுதான் அவர்களை படுகொலைக்குத் திட்ட மிடச் செய்தது.
மராத்திய பார்ப்பனர் கோட்சே
இன்னுங்கேட்டால், 125 வயது வரையிலே வாழ்வேன் என்று காந்தியார் சொல்லியிருந்தார்; அவர் வாழக்கூடாது என்பதற்காகத்தான் நான் திட்டமிட்டேன் என்று சொன்ன கோட்சே என்ற காந்தியாரை சுட்டுக்கொன்ற மராத்திய பார்ப்பனர் மேலும் கூறியது என்ன?
அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் - தற்காலிகமாக வெளியே போனாரா? இல் லையா? என்பதைப்பற்றிய ஏராளமான செய்திகளைத் தோழர்கள் சொன்னார்கள்.
The Murder of Mahatma
''The Murder of Mahatma'' என்ற தலைப்பில், காந்தியார் கொலை வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.டி.கோஸ்லா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் கள். அதிலேகூட அவர்கள் கோட்சே தற்காலிக மாக விலகியதைப்போல காட்டினார்களே தவிர, வேறொன்றுமில்லை என்று பதிவு செய் திருக்கிறார்கள்.
எனவே, அந்த செய்திகளை இங்கே உரை யாற்றிய நம்முடைய தோழர்கள் விளக்கிவிட் டார்கள். எனவே, அதை மறைத்துப் பயனில்லை.
ஆனால், இன்றைக்கு என்ன சூழல்?
இன்றைக்கு அந்த உணர்வுகள் மாறியிருக் கிறதா? அதிகமாயிருக்கிறதா?
பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார்கள்
ஆட்சி அவர்களுடைய கைகளில் சிக்கியது - வளர்ச்சியை நோக்கி நாங்கள் இந்த நாட்டைக் கொண்டு செல்லுகின்றோம். வேலை இல்லாத இளை ஞர்களே, எங்கள் பின்னாலே வாருங்கள், உங்களை நாங்கள் வேலை கொடுத்து உயர்த்துவோம்.
உங்கள் பொருளாதாரத்திலே தனிப்பட்ட முறையிலே ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பொத்தென்று விழும் என்றெல்லாம் சொல்லி,
பொய்யான வாக்குறுதிகளை எடுத்துரைத்து, நம்ப வைத்து, அதன்மூலம் நாம் ஏமாந்து, ஆட்சியை, வாக்கு முறையிலே பிடித்து இன்றைக்கு வந்திருக் கிறார்கள்.
அப்படி வந்து நிலைத்த பிற்பாடு, தங்களுடைய முழு அஜெண்டா என்னவோ அந்தத் திட்டத்தை அவர்கள் வேகமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.
சிறுபான்மையினரை கொலை செய்யவேண்டும் என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்!
இன்றைக்கு எந்த அளவிற்கு போயிருக்கிறது? மதவெறி என்றால், சிறுபான்மையினரை கொலை செய்யவேண்டும் என்று வெளிப்படையாகவே பேசு கிறார்கள்.
லட்சம் பேர் தயாராகுங்கள் - ஆயுதங்களை வாங் குங்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள்.
இதனைக் கண்டித்து, அந்தத் தலைவர்கள் இது வரையில் ஒரு அறிக்கைக்கூட கொடுக்கவில்லை. பிரதமர் உள்பட.
இதற்கு என்ன பொருள்?
எப்படி அவர்கள்மீது நடவடிக்கை வந்தது?
உச்சநீதிமன்றத்திலே வழக்குப் போட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, உலகம் முழுவதும் - வெளிநாட்டுக்காரர்களும் இதுபற்றி பேசுகிறார்கள். ஒரு இனப்படுகொலை ஏற்படுகின்ற அபாயகரமான சூழல் இருக்கிறது - ஓர் அச்சுறுத்தல் இருக்கிறது.
இன்றைக்கு ஆபத்து என்பது பன்மடங்கு பெருகியிருக்கிறது
எனவேதான், 'மதவெறி கண்டன நாள்' என்ற தலைப்பில் இதற்கு நிகழ்த்தப்பட்ட உரைக்கும், இப்பொழுது நிகழ்த்தப்படுவதற்கும் எப்படி ஆபத்து என்பது கரோனா வைரஸ்மூலம் பல ரூபத்தில் வருகிறதோ, இன்னும் தீவிரமாக டெல்டா வைரஸ் வருகிறது என்று எப்படி சொல் கிறார்களோ, அல்லது இன்னொரு வைரசை காட்டி அச்சுறுத்துகிறார்களோ, அதேபோலத் தான், இந்த ஆபத்து என்பது பன்மடங்கு பெருகியிருக்கிறது.
அந்த ஆபத்தைப் போக்குவதற்கு ஒரே ஒரு வழி - நிச்சயமாக அந்த வழி - கொஞ்சம் கொஞ்சமாக விடியல் தோன்றிக் கொண்டிருக்கிறது - தோன்றும். நம்புகிறோம் - இதற்கிடையிலேதான், அதனை நினைவூட்ட வேண்டும் என்பதற்காகத்தான். மற்றபடி அந்தப் புண்ணை கிளறவேண்டும் என்பது நம்முடைய நோக்கமல்ல.
வரலாற்றில் படிந்த ரத்தக் கறையைத் துடைக்கவேண்டும்
அந்தக் கறையைத் துடைக்கவேண்டும்.
இந்திய வரலாற்றில் படிந்த ரத்தக் கறையைத் துடைக்கவேண்டும்.
எப்படி துடைப்பது?
மனிதநேயத்தால்தான் துடைக்கவேண்டும்.
ஆனால், மேலும் மேலும் அந்த ரத்தக் கறையை அவர்கள் அதிகமாக, புத்தம் புதிதாக ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நம்முடைய சகோதரர்கள் - நேற்று வரையில் அவர்கள் யார்?
மனிதநேயத்தை மறந்தவர்கள்
தாய் மதத்திற்குத் திரும்புங்கள் என்றெல்லாம் அழைக்கிறீர்களே, அவர்களுடைய தாய்மதம் எது ஆரம்பக் காலகட்டத்தில் - அதுபற்றி யோசித் திருக்கிறீர்களா?
மனிதநேயத்தை மறந்தவர்களுக்காக இதைச் சொல்லுகிறோம்.
காந்தியாரைப் பொறுத்தவரையிலே, அவரை சுட்டுக் கொல்வதைப்பற்றி சொல்லுகிற நேரத்திலே, முதலில் எப்படி ஒரு கலவரத்தை உண்டாக்கினார்கள் என்பதை வரவேற்புரையாற்றிய குமாரதேவன் அவர்கள் சொன்னார்கள்.
இரண்டு, மூன்று நாள்களாகத் திட்டமிட்டு, காந்தி யாரை சுட்டுக்கொன்றது இஸ்லாமியர்தான் என்று சொல்லி, ஒரு மதக் கலவரத்தை உண்டாக்கிய நேரத்தில்,
தமிழ்நாட்டில் தந்தை பெரியாருடைய குரல் ஒலித்தது - உடனே அதனைத் தடுத்து நிறுத்தியது.
அந்த ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற் காகத்தான், வானொலியில் மவுண்ட் பேட்டன் அவர்கள், காந்தியார் ஒரு இந்துவால் சுட்டுக்கொல் லப்பட்டார் என்ற செய்தியை சொல்ல வைத்தார் என்று பல செய்திகள் பதிவாகியிருக்கின்றன.
ஆகவே, காந்தியாரை சுட்டுக் கொன்றவன் யார் என்று தெரிந்துதான், மராட்டியத்தில் அவ்வளவு பெரிய கலவரம் நடந்தது.
பெரியார் நினைத்திருந்தால்.....
ஆனால், பெரியார் நினைத்திருந்தால், வன் மத்தைத் தீர்த்துக் கட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி நினைக்கவில்லை.
சுயமரியாதைத் தத்துவம்!
ஏனென்றால், சுயமரியாதைத் தத்துவம் மனிதர் களை வெறுப்பதில்லை. மனிதர்களைத் திருத்துவது.
'திருந்து அல்லது திருத்து' என்பதுதான் அதனுடைய அடிப்படையான தத்துவம்.
அந்த வகையிலே நண்பர்களே, இன்றைய நாளில், இன்னும் நம்முடைய கடமை அதிகமாகியிருக்கிறது. பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்யவேண்டும். அந்தப் பக்கத்திலிருந்து ஏமாந்த மக்களையெல்லாம் விடு விக்கவேண்டும்.
வடநாட்டிலும் இப்பொழுது அவர்களுடைய சாயம் வெளுக்க ஆரம்பித்திருக்கிறது!
அவர்கள் ஏதோ ஒன்றை சாதித்துவிடலாம் என்று ஏமாந்தார்கள் அல்லவா!
இன்னமும் மதவெறியை அவர்கள் தங்களுடைய மூல சரக்காகக் கொண்டு விளையாடிப் பார்க்கலாம் என்று விளையாடுகிறார்கள் - திருவிளையாடல்களைப் புரிகிறார்கள் அல்லவா! அதனுடைய முகமூடியைத் தமிழ்நாட்டிலே கிழித்தெறிந்ததைப்போல, வடநாட்டிலும் இப்பொழுது வெளுக்க ஆரம்பித்திருக்கிறது.
வெள்ளி முளைக்கிறது - விடியல் தொடங்கவிருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய டைரியில்....
இந்தச் சூழ்நிலையில் ஒன்றை உங்களுக்கு நினை வூட்டவேண்டும்.
என்னவென்று சொன்னால், தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய டைரியில் அழகாகக் குறிப் பிட்டு இருக்கிறார்.
அருள்மொழி அவர்கள்கூட ஹிந்துஸ்தானி பிரச்சினைகளைப்பற்றியெல்லாம் சொன்னார்கள். அதைவிட முக்கியம், அய்யா அவர்கள் தன் கைப்பட எழுதிக் குறிப்பிட்டு இருக்கிறார் மூன்று செய்திகளை.
காந்தியாரிடம்,ஓமந்தூரார்மீது பார்ப்பனர்கள் கொடுத்த புகார்
ஒன்று,
ஓமந்தூரார் இங்கே முதலமைச்சராக இருந்த நேரத்தில், வகுப்புவாரி உரிமைப்படி, சமூகநீதி என்பது நடைமுறைப்படுத்தப்பட்டபோது, இங்கே இருக்கின்ற பார்ப்பனர்கள், காந்தியாரிடம் மனு கொடுக்கிறார்கள்.
ஓமந்தூரார், தாடியில்லாத இராமசாமி பெரியார். எனவே, அவர் வகுப்புவாதி; எங்களையெல்லாம் வாழ விடாமல் அவர்கள் மருத்துவக் கல்லூரியிலே, பொறியியல் கல்லூரியிலே எங்களுடைய பிள்ளை களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றெல்லாம் அவர்கள் அபாண்டமாக சொன்னார்கள்.
ஓமந்தூராரின் விளக்கமும் - காந்தியாரின் தெளிவும்!
காந்தியார் அவர்கள், தன்னுடைய செயலா ளரை அழைத்து, அது உண்மையா? என்று கேட்கிறார்.
அதற்கு ஓமந்தூரார் அவர்கள், தெளிவான புள்ளிவிவர ரீதியாகவே, அவர்களுடைய எண் ணிக்கை எவ்வளவு? அவர்கள் அனுபவிப்பது எவ்வளவு?
அதேநேரத்தில், மற்றவர்களுடைய எண் ணிக்கை எவ்வளவு? அவர்களுக்குக் கிடைத்தது எவ்வளவு? என்ற ஆதாரப்பூர்வமான செய்தி களை புள்ளிவிவரத்தோடு காந்தியார் அவர் களுக்கு அனுப்புகிறார்கள், 1947 இல்.
அதைப் பார்த்தவுடன்தான், காந்தியாருக்கு உண்மை விளங்குகிறது. கடைசி நேரத்தில், காந்தியார் அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு மாறுதல் அடைகிறார். அதற்குமுன் வரையில், வருணாசிரம தர்மத்தின்மூலமாக செய்து விடலாம் என்று அவர் நினைத்துக் கொண் டிருந்தார். தீண்டாமை ஒழிப்பின் மூலமாக இந்து மதத்தைக் காப்பாற்றிவிடலாம் என்று நினைத் துக் கொண்டிருந்தார்.
ஆனால், அதேநேரத்தில் சமூகநீதியைப்பற்றி அவருக்கிருந்த தெளிவில்லாத ஒரு சூழலில், இதுதான் அவருடைய கண்களைத் திறந்தது.
சமூகநீதியை யார் செய்கிறார்களோ, அவர்கள்தான் பார்ப்பனர்களுக்கு எதிரிகள்!
காந்தியார் அவர்கள் மறுமுறையும் வருகிறார் தமிழ்நாட்டிற்கு -
அப்படி வருகின்ற நேரத்தில், காந்தியார் ஓமந் தூராரைக் கடுமையாகப் பேசுவதற்கு வாய்ப்பிருக்கும் என்று நினைத்தனர்.
காங்கிரசுகாரராக இருக்கின்ற ஓமந்தூரார்,
ரமண ரிஷி பக்தராக இருக்கின்ற ஓமந்தூரார்,
வெள்ளிக்கிழமை விரதம் இருக்கக்கூடிய ஓமந்தூரார்,
இத்தனைக்கும் அவர் நாத்திகர் அல்ல!
ஆனால், சமூகநீதியை யார் செய்கிறார்களோ, அவர்கள்தான் பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில் முதல் எதிரி!
(தொடரும்)
No comments:
Post a Comment