சென்னை, ஜன.2 இந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமான டிஎல்எப் லிமிடெட்டின் ஒரு பகுதியான டிஎல்எப் அறக்கட்டளை, பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில், ஏழை எளிய பின்தங்கிய 69 பள்ளி மாணவர்களுக்கு மின்னணு டேப்லெட் சாதனங்களை வழங்கியுள்ளது. மணப்பாக்கம் டிஎல்எப் சைபர் சிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சாதனங்களின் விநியோகம் நடைபெற்றது. 8 வயது முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த மின்னணு டேப்லெட்கள் வழங்கப்பட்டன. தொற்றுநோய்க்குப் பிறகு மாணவர்களின் பல்வேறு கல்வித் தேவைகளை எளிதாக்குவதே இந்த முயற்சியின் முதன்மை நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியில் எல் சால்வடார் குடியரசின் கவுர தூதர் டாக்டர் யஷ்வந்த் குமார் வெங்கடராமன், சென்னை நலவாழ்வுத்துறை ஏடிஜிபி ஷைலேஷ் குமார் யாதவ், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். டிஎல்எப் நிறுவனத்தின் தென்னிந்தியாவிற்கான மூத்த துணைத் தலைவர் டேவிட் அமல்ராஜ், உதவித் தலைவர் ஜூலியன் பிரதீப் பிரான்சிஸ் மற்றும் உதவித் தலைவர் ரவி கோகுலநாதன், சென்னை டிஎல்எப் சைபர்சிட்டியின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சென்ட்ரல்-ராஜீவ்காந்தி மருத்துவமனை சுரங்க நடைபாதை விரைவில் திறப்பு
சென்னை, ஜன.2 சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையம் மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையை இணைக்கும் சுரங்க நடைப்பாதையை பொங்கலையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையையும் இணைக்கும் வகையில்14 மீட்டர் அகலத்தில் சுரங்க நடைப்பாதை அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பரபரப்பான சென்ட்ரல் எதிரில் உள்ள சாலையை கடப்பதற்கு பதிலாக இந்த சுரங்க நடைப்பாதையை பயன்படுத்தலாம்.
இந்த புதிய சுரங்கப்பாதையில் இருபுறமும் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்கள்) வசதியுடன், லிப்ட் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. ஏற்கெனவே சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள பழைய சுரங்கநடைப்பாதையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியும் ஜனவரி முதல் வாரத்தில் நிறைவடைந்து பொங்கலையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
புதிய சுரங்கப்பாதை திறக்கப்பட்டால், பாதசாரிகள், குறிப்பாக எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து பெட்டி படுக்கைகளுடன் வரும் பயணிகள் மற்றும் வயதானவர்கள், குழந்தைகள் சிரமமின்றி சாலையைக் கடக்க முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
ஏ.டி.எம். கட்டணம் உயர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை, ஜன.2 ஏ.டி.எம். கட்டணம் ஜன.1ஆம் தேதி முதல் உயருகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் 3 முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிமாற்றங்களை (நிதி அல்லது நிதி சாரா பரிமாற்றங்கள்) செய்ய முடியும்.
அதற்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்துக்கு அப்பால் நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ரூ.20 கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டணம் நேற்று (1.1.2022) முதல் உயர்த்தப்பட்டது. அதன்படி, ரூ.20-க்கு பதிலாக ரூ.21 ஆக இது அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
ஏ.டி.எம். பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான நிதி தேவை அதிகரித்து உள்ளதை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை அமல்படுத்துவதாக ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment