இந்தியா முழுவதும் சமூக நீதிக் கொடி பறக்கட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 12, 2022

இந்தியா முழுவதும் சமூக நீதிக் கொடி பறக்கட்டும்!

தமிழ்நாட்டின் "சமூக நீதிக்கான சரித்திர நாயகர்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்களைக் குறிப்பிட்டு  தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறியது - வெறும் சொல் கூடுகள் அல்ல!

ஆழமான பொருள் பொதிந்த - தொலைநோக்குச் சிந்தனையின் வெளிப்பாடே அது!

அவர் கணித்ததும், கூறியதும் எந்த அளவுக்குப் பேருண்மை என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியத் துணைக் கண்டமே உணரும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. வடபுலத்து மக்களும், இளைஞர்களும் ஒடுக்கப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் "சமூக நீதியின் சின்னம் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு..ஸ்டாலின்" என்று சமூக வலை தளங்களில் தங்களின் ஆனந்த மன உணர்வினை வாரி இறைத்து மகிழ்ந்து கொண்டுள்ளனர்.

எவ்வளவுப் புகழ் வந்தாலும், பாராட்டு வந்தாலும், திராவிட இயக்கக் கொள்கை என்ற சீர்மை நமது முதல்வரை ஆட்கொண்ட காரணத்தினால் நன்றி உணர்ச்சியோடும், உண்மைத் தன்மையோடும் "இது தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி!" என்று அடக்கத்தோடு கூறிய அந்தப் பெரும் பண்பும் கூட, தந்தை பெரியாரிடத்திலிருந்து அவர் வரித்துக் கொண்டதுதான்.

மதவாதத்திற்குச் சலங்கை கட்டி, மக்கள் மத்தியில் மலிந்து கிடக்கும் பக்தி என்னும் பாமரத்தன குதிரையைப் பூட்டி, நாட்டில் வலம் வரலாம் - ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தன் வசம் கெட்டியாகப் பத்திரப்படுத்தி பார்ப்பனியத்தை மேலும் வலுப்படுத்தலாம் என்பதுதான் பாஜகவின் - அதன் பரிவாரங்களின் - பார்ப்பனர்களின் உள்ளார்ந்த திட்டமாகும்.

2024 - மக்களவைத் தேர்தல் வரும் போது, அயோத்தியில் ராமன் கோயிலைக் கோலாகலமாகத் திறந்து மயக்கப் பொடி தூவி, மக்களின் வாக்குகளை கொத்துக் கொத்தாக வாரிச் சுருட்டிவிடலாம் என்ற ஒரு கணக்கில் காவிகள் மிதந்து கொண்டுள்ளனர்.

இந்த மாயையை, மயக்கத்தை முறியடிக்கும் ஒரு மாபெரும் ஆயுதம்தான் - மருத்துவம்தான் வெகு மக்களுக்குத் தேவையான சமூக நீதி என்னும் அரும் பெரும் தத்துவமாகும்.

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் பெரும்பாலானோர் யார்? ஒடுக்கப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் தானே! இவர்களின் கல்வி நிலை, உத்தியோக நிலை என்ன?

சட்டரீதியாக இடஒதுக்கீடு இவர்களுக்கு இருந்தும், அதன் முழு அளவுப் பலன்கள் இவர்களுக்கு வந்து சேரவில்லை என்பது நினைவிருக்கட்டும்!

கல்வி பெறாத மக்களும் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதில் ஓர் உயர் ஜாதியினரைக் காட்ட முடியுமா? அர்ச்சகப் பார்ப்பான் மகன் கூட உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆக முடிகிறதே!

ஒன்றிய அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் கூட்டம் எது? செயலாளர்கள், ஆளுநர்கள், துணைவேந்தர்கள், அய்..எஸ். அதிகாரிகள், வங்கிப் பொது மேலாளர்கள், நீதிபதிகள் என்று எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் 90 விழுக்காடு பார்ப்பனர்கள் தானே! மறுக்க முடியுமா?

இந்த இடங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் எட்டுவதற்கு இன் றைக்கு இருக்கக்கூடிய பா... அரசு மறந்தும் கூட சிந்திக்குமா?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் - ‘இட ஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்என்று சொல்ல வில்லையா?

பா...வின் தேர்தல் அறிக்கைகளில் சமூக நீதி என்னும் வார்த்தையின் வாடையாவது உண்டா?

வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் சமூக நிலை என்ன?

இந்த விடயத்தில் திராவிட இயக்கமும், தந்தை பெரியாரும் தோன்றிய தமிழ்நாட்டை மனதிற் கொண்டு யோசிக்க வேண்டாம்?

வடமாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் சமூக நீதி அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறதே! அந்த மக்களிடத்தில் வெறும் ராமனைக் காட்டிக் கரையேறலாம் என்ற நிலைதான் உண்டு.

ஆம், அங்கும் சமூக நீதிக் கொடி பறக்கவிடப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் பளிச் சென்று அதனைப் பிடித்துக் கொள்வார்கள் - தாகம் இருக்கத்தான் செய்கிறது. வழி காட்டத்தான் தலைவர்கள் இல்லை, அமைப்புகள் இல்லை.

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் காலத்தில்மண்டல் எதிர் கமண்டல்' என்ற பிரச்சாரம் வடக்கிலும் வேர்ப்பிடித்து சமூகநீதியின் கழுத்தில் வெற்றி மாலையைச் சூட்டவில்லையா?

"சமூக நீதிக்கான சரித்திர நாயகர்" மானமிகு மாண்புமிகு தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சமூக நீதிக் காற்று இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சுழன்றடிப்பதற்கான சரியான பருவம் இது.

வடமாநிலங்களில் ஒரு பத்து இடங்களில் நமது முதல் அமைச்சர் பேசட்டும் - அப்பொழுது பாருங்கள் எழுச்சியின் கோலத்தை!

No comments:

Post a Comment