15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மூன்று முக்கிய செய்திகளைக் கூறி முதலமைச்சர் உரை
சென்னை, ஜன.3- ''தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம்'' என்ற உறுதியை நீங்கள் இந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன் என்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சென்னை சைதாப்பேட்டையிலுள்ள பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் இன்று (3.1.2022) தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் ஆற்றிய உரை வருமாறு,
கரோனா இரண்டாம் அலையை நமது அரசு எப்படி தீவிர நடவடிக்கைகளை எல்லாம் எடுத்து, அதனுடைய வீரியத்தைக் குறைத்து, மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பையும் குறைத்து, அந்தத் தொற்றின் தாக்கத்திலிருந்து, மக்களுடைய வாழ்வாதாரம் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். மாநிலத்தின் பொருளாதாரமும் மீட்சிப் பாதையில் மீண்டும் நடைபோடத் தொடங்கியது. ஆகவே, ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது “ஒமைக்ரான்” என்ற புதிய தொற்று நோய் புதிய அச்சுறுத்தலோடு நம்மை மிரட்டத் தொடங்கியிருக்கிறது.
ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள்
நான் உங்களிடம் ஒரு செய்தியை நினைவுபடுத்த விரும்பு கிறேன். நேற்று (2.1.2021) காலையில் இரண்டு பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்தியைப் படித்திருப்பீர்கள். அதை ஒரு முக்கியச் செய்தியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால்,
'தி இந்து' - ஆங்கிலப் பத்திரிக்கையில் “Recovery with headwinds” எனத் தலைப்பு செய்தியாக - ஒரு முழுப் பக்க கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில் என்ன செய்தியை சொல்லியிருந்தார்கள் என்றால், “இரண்டு கரோனா அலை களைச் சாமாளித்தும், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் மீட்சிப் பாதையில் இருந்து முன்னேறி ஒரு நல்ல நிலைக்கு வரத் தொடங்கியது. ஆனால், ஒமைக்ரான் என்கிற தொற்றின் தாக்கம் அதிகரித்த காரணத்தால், வெற்றியை நோக்கி போய்க் கொண்டிருந்த நம்முடைய பயணம், மீட்சிப் பணியிலிருந்து மீண்டு போய்க்கொண்டிருந்த அந்தப் பயணத்திற்கு சிறிது தடை ஏற்படும்” என்ற சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது.
அதே போலத்தான் “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளிதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்தச் செய்தியில், “தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண் ணிக்கையில் 46 விழுக்காடு பேர் சென்னையில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது” என்கிறது அந்தச் செய்தியை அந்த ஆங்கிலப் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த இரு செய்திகளையும் நான் குறிப்பிட்டுச் சொல்வதற்கு என்ன காரணம் என்றால், உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல. உங்களையெல்லாம் அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நீங்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையை நான் உங்களிடத்தில் சொல்ல விரும்புகிறேன். உங்களின் சுய பாதுகாப்பில் நீங்கள் அதிகம் கவனத்தைச் செலுத்த வேண்டும், மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் இதை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன்.
மூன்று முக்கியச் செய்திகள்
ஜனவரி ஒன்றாம் நாள் மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லவேண்டும் என்பதற்காக நானே பேசி, அதை பதிவு செய்து, எல்லா தொலைக்காட்சிகளிலும் வெளி யிடப்பட்டிருக்கிறது, சமூக வலைத்தலங்களிலும் அது தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது, அதைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். நான் புத்தாண்டு வாழ்த்துகளை மட்டும் சொல்லவில்லை, அதில் ஒரு வேண்டுகோளையும் எடுத்து வைத்திருக்கிறேன். ஒமைக்ரான் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் அதில் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான், இன்றைய நாள் - மூன்று முக்கியச் செய்திகளை உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன்.
ஒன்று, ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸிலிருந்து உருமாறி இருந்தாலும் - முந்தைய வைரசைவிட இந்த புதிய வைரசின் நோய்தாக்கத் தன்மை குறைவு என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அது ஒரு ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி தான். ஆனால், முந்தைய வைரசை விட பல மடங்கு வேகமாக பரவக் கூடியது இந்த ஒமைக்ரான் என்ற தொற்று. அதனால்தான், இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், இதில் பரவல் வேகம் அதிகம் - நோயின் தாக்கம் தமிழகத்தில் நிச்சயமாக அதிகரிக்கக்கூடும். ஆனால், இதைத் தடுப்பதற்காக நமக்கு முன்னால் இருக்கக்கூடிய கேடயம் என்னவென்றால், முகக் கவசம் தான். இதுதான் அதைத் தடுக்கிற ஒரு முக்கியமான கேடயமாக இருக்கிறது.
கட்டாயம் முகக்கவசத்தை அணிய வேண்டும். குறிப்பாக, பொது இடங்களில் நீங்கள் செல்கின்ற போது, கூட்டம் இருக்கும் இடங்களுக்குச் செல்லும்போது, நிச்சயமாக இந்த முகக்கவசத்தை அணிந்தே தீர வேண்டும். அதுமட்டுமல்லாமல் சமூக இடை வெளியை கடைப்பிடித்தாக வேண்டும். அதுதான் என்னுடைய முக்கியச் செய்தியாக நான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன்.
உயிர் காக்கும் தடுப்பூசியை ஒவ்வொருவரும் போட்டுக் கொள்ள வேண்டும்
அடுத்து, ஒமைக்ரான் வைரஸ் உருமாறி இருந்தாலும், நம் நாட்டில் செலுத்தப்படும் தடுப்பூசிகள் நல்ல நோய்த் தடுப்பை தொடர்ந்து அளித்து வருகிறது. தடுப்பூசியால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியால் புதிய வைரஸ் தாக்கினால் கூட, அந்த நோயின் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும். அதோடு, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் இறப்பு விகிதமும் மிக மிக குறைவு என்பதைத்தான் மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஆகவே, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் - உயிர் காக்கும் தடுப்பூசியை ஒவ்வொருவரும் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஆகவேதான், நமது அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஒரு இயக்கமாக மாற்றியிருக்கிறது. ஆகவே மக்களாகிய நீங்கள் அந்த இயக்கத்தில் இணைந்து, கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது எனது இரண்டாவது செய்தி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் - 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் - இன்னும் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நிச்சயம் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட வேண்டும் என்று நான் உங்களை அன்புடன், பணிவோடு, உரிமையோடு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக கெஞ்சி, மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இது நான் விடுக்கக்கூடிய மூன்றாவது செய்தி.
ஆகவே முதலமைச்சர் என்கிற முறையில் மட்டுமின்றி - உங்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து உங்களை அன்போடு மீண்டும், மீண்டும் நான் கேட்டுக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.
பொது இடங்களில் நிச்சயமாக, உறுதியாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ளுங்கள். அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடியுங்கள். நம் அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நீங்கள் தரவேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என்ற உறுதியை நீங்கள் இந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாவற்றிலும் முதல் இடம் என்று மாண்புமிகு அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, வரக்கூடிய காலகட்டத்தில் இந்தத் தொற்று நோயிலிருந்து விடுபட்டிருக்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு நிச்சயமாக தேவைப்படும். அரசு நினைத்தால் அது வெற்றி பெற வைத்துவிட முடியாது. அரசோடு, பொதுமக்களாக இருக்கக்கூடிய நீங்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். ஒரு கையால் தட்ட முடியாது, இரண்டு கைகளால் தான் தட்டமுடியும். ஆகவே, நீங்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அன்போடு கேட்டு, வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் கணபதி, பிரபாகரராஜா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள்
டாக்டர் மனிஷ் ஷங்கர்ராவ், சினேகா, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலா ளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment