சென்னை, ஜன.2- தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில அளவில் சென்னை, மதுரையில் தொழில் மற்றும் செயல்முறை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், முதுகலைப் படிப்பு மற்றும் பிஇ, பிடெக், எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளை மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும். பதிவுமூப்பை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு நடைமுறையில் இருக்கும். இல்லாவிட்டால் அது காலாவதியாகிவிடும்.
இந்நிலையில், மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, 73 லட்சத்து 30 ஆயிரத்து 302 பேர் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் 34 லட்சத்து 41 ஆயிரத்து 360 பேர் ஆண்கள், 38 லட்சத்து 89 ஆயிரத்து 715 பேர் பெண்கள். 227 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
பதிவு செய்துள்ளவர்களில் 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26 லட்சத்து 86 ஆயிரத்து 932 பேர். 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 97 ஆயிரத்து 693 பேர். மாற்றுத் திறனாளிகள் ஒரு லட்சத்து 7 ஆயித்து 871 பேர். பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 56 ஆயிரத்து 140 பேர். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 66 ஆயிரத்து 386 பேர் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment