சென்னை, ஜன.12 மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த விரும்பும் 5 உதவி கருவிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேர வையில் 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தகுதி வாய்ந்த நபர்களுக்கு அவர்கள் பயன்படுத்த விரும்பும் சாதனங்களின் வகை மற்றும் மாதிரியை வழங்கும் வகையில், நேரடி மானியம் வழங்கும் திட்டத்தையும் இந்த அரசு அறிமுகப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கடிதம் எழுதினார்.
5 கருவிகள்
அதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தொழில்நுட்ப குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையிலான பல்வேறு உதவி கருவிகள் அரசால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
முதலில் 5 உதவி கருவிகளுக்கு மட்டும், பயனாளிகள் பயன்படுத்த விரும்பும் சாதனங்களை வழங்கும் வகையில் நேரடி மானியம் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, 3 சக்கர மிதிவண்டிகள், சக்கர நாற்காலிகள், காதுகளுக்கு பின்புறம் அணியும் காதொலிக் கருவிகள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள், பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் ஆகிய 5 கருவிகள் தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்.
கூடுதல் விலையை மட்டும்
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கோரிக்கையை ஆய்வு செய்த அரசு அதை ஏற்று ஆணையிடுகிறது. அதன்படி, இந்த 5 வகை உதவி கருவிகளை அவர்கள் தேர்வு செய்யலாம்.
இத்திட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தொழில்நுட்பக் குழுவால் பரிந்துரைக்கப்படும் அறுதியிட்ட வகையிலான உதவி கருவிக்குப் பதிலாக பயனாளிகள் மேற்படி குழுவால் பரிந்துரைக்கப்படும் இதர வகையிலான தங்களுக்கு தேவையான மாதிரியான உதவி கருவியை தேர்வு செய்ய அனுமதி வழங்கலாம்.
தேர்வு செய்யப்படும் உதவி கருவியின் விலை, அரசால் வழங்கப்படும் உதவி கருவியின் விலையை விட அதிகமாக இருந்தால் கூடுதல் விலையை மட்டும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். அதன் பின்னரே உதவி கருவி
வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment